புனித ஹங்கேரி எலிசபெத் (1207 – 1231)
நான்கு வயதில் ஓர் அரச அரண்மனைக்கு இவள் அனுப்பப்பட்டாள். சிறுவனான அரச குமாரனுக்கு இவள் பின்னர் மனைவியாக வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவளுக்கு வயது ஆக ஆக பக்தியும் வளர்ந்து கொண்டிருந்தது. இதனால் அநேகர் இவளுக்கு எதிரிகள் ஆயினர். இவளுக்கு கணவனாக இருந்தவரது சகோதரி அக்னேஸ் இவளை முழு மூச்சுடன் வெறுத்தாள். அவளுடைய தாய் மிகுந்த உலகப் பற்றுக் கொண்டவள். அவளும் இவளை வெறுத்து அரண்மனையில் இருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டு எலிசபெத்தை நிந்தித்து வந்தார்கள்.
அரசர் இறந்தார். இவளுடைய கணவராக வேண்டியவர் சிறுவனே. எனவே தாய் ஆட்சியைக் கைப்பற்றினாள். இதிலிருந்து எலிசபெத்துக்கு தொல்லைகள் மிகுந்தது. இவளை அர்ச்சிக்க, இத்தொல்லைகள் பேருதவியாய் இருந்தது. இவளுக்கு கணவராக வேண்டியவர் வெளிநாடுகளில் கல்வி பயின்று வந்தார். அவர் பக்தி உள்ளவர். இவளது புண்ணிய வாழ்வை அவர் மதித்து வந்தார். கடைசியாக இருவரும் மணம் முடித்த பின் எல்லாம் வேறு விதமாக மாறியது. இவளது உள்ளத்தை கடவுளிடமிருந்து அகற்றவில்லை. துன்பத்தில் அவருடன் ஒன்றித்து வாழ்ந்த இவள் இன்பத்தை அவரை விட்டுப் பிரியவில்லை. ஏழைகள் மீது இவள் எல்லையற்ற இரக்கம் கொண்டிருந்தாள். “ஏழைகளின் அன்னை” என்றும் “நோயாளிகளின் ஊழியக்காரி” என்றும் இவளை அழைப்பார்கள். உலக மக்களின் அபிப்பிராயங்களை இவள் சட்டை செய்யவில்லை. தனக்கு இயல்பாய் உள்ள பொறுப்புகளை மேற்கொண்டு ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கிறிஸ்து நாதரையே கண்டு அவர்களுக்கு சேவை செய்து வந்தாள்.
நாட்டில் பெருவெள்ளம் வந்து பயிரை அழித்தது. இதனால் பஞ்சமும் கொள்ளை நோயும் வந்தன. ஒரு மருத்துவமனையைக் கட்டி அங்கு போய் தொழு நோயாளிகளுக்கு இவளே சிகிச்சை செய்வாள். அப்பமும் இரசமும் இவளது மன்றாட்டால் பலுகியது. ஏழைகளுக்கு உதவி செய்ய அரச ஆடைகளையும், ஆபரணங்களையும் விற்றாள். இவளுடைய கணவன் இறந்த பின் முன் போல தொல்லைகள் தொடங்கின. இவளுடைய கணவரின் சகோதரர்கள் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டு இவளை விரட்டி விட்டனர். இவள் பிரான்சிஸ்கன் சந்நியாசிகளின் கோயிலுக்கு சென்று, இந்த துன்பத்திற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி “தேதேயும்” என்னும் நன்றியறிதல் கீதத்தைப் பாட செய்தாள்.
சிந்தனை:
சிலுவைக்காக நாம் நன்றி செலுத்தாவிட்டாலும் நாம் அதை பொறுமையுடன் சுமப்போம்.
செபம்:
ஆண்டவரே, நீர் எனக்கு அனுப்பும் சிலுவைகளுக்காகவும் நான் உமக்கு நன்றி சொல்லுகிறேன்.