புனித நிக்கொலாஸ் (-352)
இவர் சின்ன ஆசியாவிலுள்ள லீசியா நாட்டின் பத்தாரா நகரில் பிறந்து மீரா நகருக்கு அருகிலுள்ள ஒரு மடத்தில் சேர்ந்து சந்நியாசி ஆனார். ஆண்டவர் பட்ட பாடுகளின் மீது இவருக்கு மிகுந்த பக்தியுண்டு. எனவே பெரியவர்களின் அனுமதியுடன் இவர் பாலஸ்தீனாவுக்குச் சென்று, ஆண்டவர் பிறந்து, வளர்ந்து பாடுபட்ட இடங்களை சந்தித்தார். திரும்பி வந்த பிறகு ஒரு நாள் அதிகாலையில் இவர் கோவிலுக்குச் சென்றார். மீரா நகரில் இறந்த ஆயருக்கு பதிலாக யாரை ஆயராக தெரிந்து கொள்வது என்று குருக்களும் மக்களும் திகைத்து கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் கோவிலுக்கு முதலில் வருகிறவரை ஆயராக்க அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். இது நம் புனிதருக்குத் தெரியாது. அவரை மீரா நகரின் பேராயராக்கினார்கள். தியோக்கிளேசியான் பேரரசர் தொடங்கிய வேத கலாபனையில் இவர் துன்பப்பட்டதாகவும், ஆரிய பதிதக் கொள்கைகளைக் கண்டித்த நிசேயா பொதுச்சங்கத்திற்கு இவர் போயிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர் ஏழைகள் மீது மிகுந்த இரக்கம் காண்பித்து ஆன்ம சரீர பிறர் சிநேக ஆர்வத்துடன் சேவைகளை செய்து வருவார். ஒரு மனிதனுக்கு மூன்று பெண் மக்கள் இருந்தார்கள். மூவரும் மணமுடிக்கும் வயதை அடைந்திருந்தனர். மணமுடித்து வைக்க வகையின்றி அவர்களை பாவ வாழ்வுக்கு கையளிக்க தந்தை தீர்மானித்திருந்ததை கேட்ட இவர் நள்ளிரவில் அவனுடைய வீட்டிற்குப் போய், ஒரு பெண்ணை மணமுடித்து வைப்பதற்கான பணத்தொகையை வீட்டில் எறிந்து விட்டு ஓடி மறைந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு மூத்த பெண்ணுக்கு அவன் மணமுடித்து வைத்தான். இன்னொரு நாள் இரண்டாவது பெண்ணுக்கான பணத்தொகையை வீசி விட்டு வந்தார். மூன்றாவது பெண்ணின் கலியாணத்துக்கான பணத்தை இவர் போட்டு விட்டு வரும் போது பெண்ணின் தகப்பன் அவரைப் பிடித்துக் கொண்டான்.
இவர் சிறுவர்களின் விசேட பாதுகாவலன். ஜஸ்டீனியன் என்னும் பேரரசன் கொன்ஸ்தாந்தி நோப்பிள்ஸ் நகரில் 340-ஆம் ஆண்டில் இவருக்குத் தோத்திரமாக ஒரு கோயிலைக் கட்டினர். இவரை இலத்தீன் திருச்சபையும், கிரேக்க சைபகளும் எப்போதுமே வந்தித்து வந்திருக்கின்றன. ரஷ்ய சபையானது இவருக்கு விசேட வணக்கம் செலுத்துகிறது. அப்போஸ்தலர்களின் காலத்துக்குப் பின் தோன்றிய புனிதர்களுள் யாருக்கும் ரஷ்ய மக்கள் இவ்வளவு வந்தனை செலுத்தவில்லை. இவரது உடல் பல நூற்றாண்டுகளாக மீரா நகரில் இருந்தது. பின் 1087-ஆம் ஆண்டில் இத்தாலியா நாட்டின் வியாபாரி ஒருவர் அதை பாரிஸ் நகருக்கு எடுத்துச் சென்று புனித முடியப்பரின் ஆலயத்தில் வைத்தார்.
சிந்தனை:
பணமுடையினால் அல்லது வேறு காரணத்தை முன்னிட்டு மணமுடிக்க இயலாதிருக்கும் பெண்களுக்கு இவர்களது உறவினர்களும் நம் புனிதரது உதவியைத் தேடுகிறார்கள். இவரும் அவர்களுக்கு தாராள மனத்துடன் உதவி செய்கிறார்.
செபம்:
ஆண்டவரே, மணமுடிக்க இயலாது இருக்கும் பெண்கள் அனைவர் மீதும் கிருபைக்கண் நோக்குவீர்.