📻 அக்டோபர் 31  📺 

புனித அல்போன்ஸ் ரொட்ரிக்ஸ் (1531 – 1617)


இவர் ஸ்பெயின் நாட்டில் தோல் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி மக்கள் இறந்த பின் செப, தவ வாழ்வு நடத்தினார். 39-ஆம் வயதில் மஜோர்க்கா தீவில் இயேசு சபையில் சேர்ந்து துணைச் சகோதரர் ஆனார் 35 ஆண்டுகள் வாயில் காவலராக வேலை செய்தார். இவருக்குக் கல்வி அறிவு கிடையாது; எனினும் அநேகர் இவரைக் கலந்து ஆலோசிக்க வருவார்கள். இவரது போதனைகள் மிகுந்த நன்மைகள் செய்தன. இவருக்கு மாதா மீது அதிக பக்தியுண்டு. மாதாவின் சிறிய மந்திரமாலையை இவர் தம் கைப்பட எழுதி பரப்பி வந்தார்.


வாயில் மணி அடித்ததும் கிறிஸ்துநாதரே உள் நுழைய விரும்புவதாக இவர் உரூபிகரித்துக் கொள்வார். “ஆண்டவரே, இதோ வருகிறேன்” என்று மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு கதவை திறக்கச் செல்வார். வந்தவர்களை வரவேற்பார். இவர் தூயவர் என அங்குள்ள குருக்கள் அறிந்திருந்தனர். எனவே உணவு நேரத்தில் பிரசங்கம் செய்ய இவரை அழைப்பார்கள். ஒரு முறை சபையின் தலைவர் அங்கு வந்திருந்தார். நம் புனிதரைப் பார்த்து, கிரேக்க மொழியில் ஓர் உரை நிகழ்த்தும் என்றார். இவருக்கோ கிரேக்க மொழி தெரியாது. எனினும் தாழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து பிரசங்க பீடத்தில் ஏறினார். நிறுத்தி ஒரு நிமிட நேரமாக, “கீரியலெயிசொன், கிறிஸ்தே எலேயிசொன், கீரியலெயிசோன்” என அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.


அடிமைகளின் தொண்டன் என அழைக்கப்படும் புனித கிளாவர் இராயப்பர் இவருடன் ஒவ்வொரு நாளும் பேசுவார். அதன் பயனாக இராயப்பர் தென் அமெரிக்காவுக்குப் போய் அபூர்வ சேவை செய்தார். பெரியவர்களுக்கு கீழ்ப்படிந்து நம் புனிதர் சில அரிய நூல்களை எழுதி வைத்திருக்கிறார்.


சிந்தனை:

இவர் சாதாரண துணைச் சகோதாரர் என்றாலும், இவரைக் கலந்தாலோசிக்க பெரியவர்கள் பலர் வருவார்கள். ஞானத்தின் ஊற்றாகிய கடவுளுடன் இவர் அடிக்கடி பேசி, ஞானத்தைப் பெற்றார். நமக்கும் ஞானம் அவசியம். இவரைப் போல கடவுளைப் பயன்படுத்துவோம்.


செபம்:

திவ்விய நற்கருணையில் இருக்கிற இயேசுவே, நீர் சாலமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தீரே. எங்களுக்கும் ஞானத்தைக் கொடும்.