புனித தமாசேன் அருளப்பர் (676 – 770)
இவருடைய தந்தை உத்தம கிறிஸ்தவ வாழ்வு நடத்தி அராபிய மன்னரான அப்துல் மல்க் என்பவரது பொக்கிஷதாரராய் இருந்தார். அராபிய நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் அவர் வாழ்ந்து வந்தார். தமது மிகுந்த செல்வாக்கையும், செல்வத்தையும் நல்ல வழியில் பயன்படுத்தி பல நூறு கிறிஸ்தவ அடிமைகளை விலைக்கு வாங்கி அவர்களுக்கு விடுதலை அளித்தார். 699-ஆம் ஆண்டில் ஒரு பக்தியுள்ள கல்வியறிவு படைத்த சிசிலி நாட்டு சந்நியாசியாரை அவர் விலைக்கு வாங்கினார். அவரது பெயர் கோஸ்மாஸ். தன் மகன் அருளப்பரை அவரிடம் ஒப்படைத்தார். அப்பொழுது அருளப்பருக்கு வயது 23. அருளப்பர் சிறந்த பயிற்சி பெற்றார். திறமை வாய்ந்தவர். எனவே தந்தை இறந்ததும் டமாஸ்கஸ் நகரில் பிரதம ஆலோசகராக இவர் நியமனம் பெற்றார்.
அராபிய மன்னர்கள் கிறிஸ்தவர்களுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். குறிப்பிட்ட கோவில்களில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தலாம். 726-ஆம் ஆண்டில் சுரூபங்களை வைத்திருக்கலாகாது என்று பேரரசன் லெயோ ஒரு சட்டம் வெளியிட்டான். அருளப்பர் அச்சமின்றி அவனை எதிர்த்தார். சுரூபங்களை வைத்திருப்பதும், வணங்குவதும் குற்றம் அல்ல என்று அவர் எண்பித்தார். இதனால் அரசன் கடும் சினங்கொண்டு தன்னை எதிர்த்து எழுதிய அவரது வலக்கரத்தைத் துண்டித்து விடும்படி உத்தரவிட்டான். நம் புனிதர் தேவதாயை நோக்கி மன்றாடினார். துண்டிக்கப்பட்ட கரம் புதுமையாய் சேர்ந்து கொண்டது. 730-ஆம் ஆண்டில் எருசலேம் நகருக்கு அருகில் இருந்த புனித சபாஸ் என்பவரது மடத்திற்கு புனித அருளப்பர் சென்றார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் குருப்பட்டம் பெற்றார். அநேக அரிய நூல்களை எழுதி திருச்சபைக்கு சிறந்த சேவை செய்தார்.
சிந்தனை:
புனிதர்களின் சுரூபங்களை அல்லது படங்களை நாம் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்கள் செய்து வந்த புண்ணியங்களை நாம் நினைவுக்குக் கொண்டு வந்து அவர்களைக் கண்டுபாவிக்க உறுதி செய்ய வேண்டும்.
செபம்:
இறைவனின் புனிதர்களே, உங்களைப் போல் வாழும் வரத்தை, புனிதர்களை வழிபடும் மக்கள் அனைவருக்கும் பெற்றுத் தாரும்.