புனித பிபியானா
இவளுடைய பெற்றோர் உரோமை நகரில் வாழ்ந்து வந்தார்கள். இவளுடைய தந்தையின் பெயர் ப்ளாவியன். தாயின் பெயர் டவ்ரோசா பெற்றோர் இருவரும் வேதத்திற்காக உயிரை இழந்தார்கள். தந்தையை கொடூரமாக உபாதித்து நாடு கடத்தினார்கள். காயங்களால் ஏற்பட்ட வேதனையால் அவர் இறந்தார். தலையை வெட்டி தாயைக் கொன்றார்கள். பிபியானாவும் அவளுடைய தங்கை டெமெத்ரியாவும் உயிருடன் விடப்பட்டனர். அஞ்ஞான அதிகாரிகள் அவர்களது சொத்துக்களைப் பறித்துக் கொண்டார்கள். தரித்திரத்தில் வாழ்ந்து, செபத்திலும் உபவாசத்திலும் நேரத்தைச் செலவழித்து வந்தார்கள்.
அஞ்ஞான அதிகாரி அப்ரோணியானுஸ், சகோதரிகள் இருவரையும் பசி பட்டினியாய்ப் போட்டால் வழிக்கு வருவர் என்று கருதினான்;. ஆனால் ஏமாந்து போனான். இருவரையும் தன்னிடம் அழைத்தான். டெமத்ரியா தான் கிறிஸ்தவள் என்று கூறி அதிகாரியின் காலடியில் செத்து விழுந்தாள். பிபியானாவை ஒரு துஷ்டப் பெண்ணிடம் அனுப்பினார்கள். பிபியானாவைக் கெடுக்க அவளால் முடியவில்லை. அவளை அதிகாரி அடித்துப் பார்த்தான். நயவஞ்சகமாகப் பேசிப் பார்த்தும் பயனில்லை. பிபியானா உறுதியோடு இருப்பதைக் கண்ட அதிகாரி கடுங்கோபம் கொண்டு, அவளை ஒரு தூணில் கட்டி சாகும் வரை அடிக்கும்படி கட்டளையிட்டான். நம் புனிதை வேதனைகளைச் சகித்து உயிர் நீத்தாள்.
சிந்தனை:
சலுகைகளுக்கான கிறிஸ்துநாதரை மறுதலிக்க இருக்கும் கிறிஸ்தவர்கள் இப்புனிதையை நோக்குவார்களாக. இவள் தன் சொத்துக்களையும் உயிரையுமே கிறிஸ்து நாதருக்காகத் தியாகம் செய்தாள்.
செபம்:
ஆண்டவரே, உலக சொத்துக்களை விட கிறிஸ்தவ விசுவாசத்தை அதிகமாக மதிக்கும் வரத்தை மக்கள் அனைவருக்கும் தாரும்.