புனித பிலவேந்திரர்
இவர் புனித இராயப்பரின் சகோதரர். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர். மீன் பிடித்து வந்தார். புனித ஸ்நாபக அருளப்பரின் சீடராயிருந்தார். பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு ஞானஸ்நானம் பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட ஸ்நாப அருளப்பர் அவரை சுட்டிக்காட்டி, “இதோ சர்வேசுரனுடைய செம்மறி” என்றார். உடனே பிலவேந்திரரும் இன்னொரு சீடரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். இயேசுவின் அழைப்புக்கு இணங்கி ஓர் இரவும் பகலும் அவருடன் இருவரும் தங்கினர். தனக்குக் கிடைத்த பாக்கியம் தன் அண்ணனுக்கும் கிடைக்கும்படி அவரை இரட்சகரிடம் பிலவேந்திரார் அழைத்து வந்தார். கானாவூர் கலியாண விருந்துக்கு இருவரும் போயிருந்தனர். இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த சமயத்தில் ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றனவென்று இயேசுவிடம் சொன்னவர் இவரே. கிரேக்கர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பினர். இவரே அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். “கிறிஸ்துவை அறிமுகப்படுத்துகிறவர்” இவர் என புனித பேதா இவரைப் பற்றிக் கூறுகிறார். தேவாலயத்தின் அழிவைப் பற்றி இயேசு முன்னறிவித்த போது இயேசுவிடம் அழிவு எப்பொழுது வருமென வினவினார்.
பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட பின் கப்பதோசியா, கலாசியா, பிதீனியா, பைசான்சியம், திராஸ், மசதோனியா, தெசலே, அக்காயா ஆகிய இடங்களில் பிலவேந்திரர் வேதம் போதித்தார். இவரைக் கொல்லத் தீர்மானித்தார்கள். சிலுவையைக் கண்டதும் “ஓ விலையேறப் பெற்ற சிலுவையே வாழ்க! என ஆண்டவரது உறுப்புகள் உன்னை ஆபரணங்கள் போல் அலங்கரித்தன. மகிழ்ச்சியுடன் நான் உன்னிடம் வருகிறேன். உன்னை நான் உருக்கமாக நேசித்தேன். ஆசையுடன் உன்னைத் தேடினேன். என்னை உனது கரங்களில் ஏற்றுக் கொள். மனிதரிடையிலிருந்து என்னை எடுத்து என் எஜமானரிடம் ஒப்படைப்பாயாக. உன்னில் தொங்கி என்னை மீட்டவர் உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக” என்றார்.
புனித ரெகுலஸ் என்பவர் இவரது புனித பண்டங்களை 761-ஆம் ஆண்டில் ஹெக்சாம் என்னுமிடத்திலிருந்து ஸ்காட்லாந்துக்கு கொண்டு வந்தார். அக்காயா, ரஷ்யா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுக்கு இவர் பாதுகாவலர்.
சிந்தனை:
இவர் இயேசுவின் அழைப்புக்கு செவி கொடுத்து ஓர் இரவும் பகலும் இயேசுவுடன் தங்கியவர். தமக்குக் கிடைத்த பாக்கியம் தன் அண்ணனுக்கும் கிடைக்கும்படி அவரை இயேசுவிடம் அழைத்து வந்தார். நாம் கிறிஸ்தவர்கள். இந்தப் பாக்கியம் ஏனையோருக்கும் கிடைக்க நாம் ஏதாவது செய்கிறோமா?
செபம்:
ஆண்டவரே, அனைத்துலக கிறிஸ்தவர்களும் நல்லவர்களாக வாழ்ந்து மக்களை உம்மிடம் கொண்டு வருவார்களாக.