புனித லெயொனார்து (-1676)
இவர் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உடனே கீழ்ப்படிவார். பரிசுத்த கற்பை நேசித்தார்; யாராவது அசுத்த வார்த்தை சொன்னால் அந்த இடத்தை விட்டு ஓடி தேவதாயின் பீடத்திற்குப் போவார். பரலோக அன்னைக்கு தோத்திரமாக சிறு பீடங்களை அமைத்து, தோழர்களைச் சேர்த்துக் கொண்டு பாட்டுகள் பாடி செபித்து பவனியாக மாதாவின் பீடத்திற்குச் செல்வார். மாதாவைப் பற்றி சிறுவர்களுக்கு அழகாகப் பிரசங்கிப்பார். மாதாவின் சிறிய படமொன்றை எப்பொழுதும் தம்முடன் வைத்திருந்து படிக்கிற இடத்தில் மாதாவின் படம் ஒன்றை தன் கண் முன் வைத்து அதை அடிக்கடி முத்தமிடுவார். நன்கு கற்க தனக்கு உதவி செய்யும்படி அவளை மன்றாடுவார்.
நான்கு ஆண்டுகளாக கொடிய நோயினால் இவர் துன்பப்பட்டார். சுகம் கிடைத்தால் தம் வாழ்நாள் முழுவதையும் பாவிகளின் மனந்திரும்புதலுக்காகச் செலவழிப்பதாக வாக்களித்தார். உடனே சுகம் கிடைத்தது. 44 ஆண்டுகளாக நாடெங்கும் சுற்றித் திரிந்து ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு கோவில்களிலும், திறந்த வெளிகளிலும் பிரசங்கித்தார். கன்னெஞ்சரான பாவிகளை மனந்திருப்பி பகைவர்களை சமாதானப்படுத்தி கடவுள் மீதும் அயலார் மீதும் அன்பை மக்களின் உள்ளங்களில் பற்றி எரியச் செய்தார். அன்னையின் அமல உற்பவம், திவ்விய நற்கருணை, இயேசுவின் திருஇருதயம், சிலுவைப்பாதை இவற்றின் மீதுள்ள பக்தியை இவர் பரப்பினார். இத்தாலியா நாட்டில் 521 இடங்களில் சிலுவைப்பாதை படங்களை நிறுவினார். ஒரு முறை உரோமையில் இவர் இரண்டு வாரங்களாக மறையுரைகள் நிகழ்த்தினார். பாப்பானவரும் கர்தினால்களும் அவற்றிற்குச் செவி கொடுக்கச் சென்றார்கள். “மாதாவிடமிருந்து எண்ண முடியாத வரங்களைப் பெற்றிருக்கிறேன். ஆன்ம சரீர சுகம் குருத்துவம், துறவற உடை, எல்லாம் அவள் வழியாகவே வந்திருக்கிறது. அவளது அன்பே அனைத்தையும் பெற்றுக் கொடுத்தது. ஓ மரியே நீர் என்றென்றும் வாழ்த்தப்படுவீராக. நித்திய காலமும் நான் அவளது இரக்கப்பெருக்கைப் பாடப்போகிறேன். என் அரசி மரியாளின் வழியாகவே நான் என் ஆன்மாவைக் காப்பாற்றி மோட்சம் சேர போகிறேன்” என்று இவர் எழுதி வைத்திருக்கிறார்.
சிந்தனை:
“நமது தீய நாட்டங்களை திருப்திப்படுத்துவதற்காக பலவிதமான சங்கடங்களையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். நம் நாட்டங்களை அடக்க ஒரு சிறிதும் நாம் முயல்வதில்லை. சொற்ப வேதனையிலும் நாம் எதிர்த்து நிற்கிறோம்”.
செபம்:
ஆண்டவரே, எங்கள் நாட்டங்களை அடக்கி ஒடுக்க எங்களுக்கு கிருபை செய்யும்.