நவம்பர் 16
ஸ்கொட்லாந்தை சேர்ந்த புனித மர்கரீத்தம்மாள்
(1045 – 1093)
இவள் இங்கிலாந்து நாட்டின் அரச குலத்தில் பிறந்தாள். இவளுடைய தந்தை நாடு கடத்தப்பட்ட எட்வர்ட் மன்னர் இறந்ததும் இவளும் இவளுடைய தாயும் இங்கிலாந்தை விட்டு ஸ்காட்லாந்து நாட்டிற்கு ஓடிச் சென்றார்கள். மல்க்கோம் மன்னர் இவர்களை அன்புடன் வரவேற்றார். பின்னர் மர்கரீத்தை மன்னர் மணந்து கொண்டு அரசியாக முடிசூட்டினார்.
இவள் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, நம் திருவேதம் செழித்தோங்கச் செய்து நீதி எங்கும் நிலவி மக்கள் மகிழ்ச்சியுடன் அமைதியாக வாழ்ந்தார்கள். இவள் அரச அரண்மனையில் இருந்த போதிலும் உலக பொருட்கள் மீது பற்று இன்றி வாழ்ந்தாள். எப்பொழுதும் இறைவனோடு ஒன்றித்திருப்பாள். இவளது விவேகத்தையும் திறமையையும் கண்ட வெளிநாட்டு மக்களும் அதிசயித்தார்கள். இவளுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களுக்கு அளித்த பயிற்சி வீணாகவில்லை. நாட்டின் நலனுக்காக, முக்கியமாக மக்களின் ஆன்ம குருவை கெஞ்சி மன்றாடுவாள். கணவனைத் தனது ஆலோசனைகளால் திடப்படுத்தினாள். தன் மக்கள் எட்டுப் பேர்களும் கடவுளை அறிந்து நேசிக்க செய்தாள்.
திருப்பலி நேரத்தில் பயன்படுத்தப்படும் திருஉடைகளை இவள் தயாரிப்பாள். கோவில்களையும், சந்நியாசமடங்களையும் இவளே கட்டினாள். ‘அகதிகளின் அன்னை’, ‘ஏழைகளுக்கு வாரி வழங்குபவள்’ என்றும் இவள் அழைக்கப்பட்டாள். இவள் அரண்மனையில் ஒவ்வொரு நாளும் 300 ஏழைகளுக்கு உணவு வழங்குவாள். நாட்டில் இரக்கத்துடன் நீதி வழங்கும்படி இவள் ஆவன செய்தாள். இவளுடைய கணவர் போரில் இறந்தார். பணிந்த மனதுடன் இந்தச் சிலுவையை கடவுளின் கரங்களிலிருந்து நன்றியுடன் ஏற்றுக் கொண்டாள்.
சிந்தனை:
அடிக்கும் கரமும் அணைக்கும் கரமும் ஒன்றே என்பதை நாம் மறக்கக் கூடாது. அணைக்கும் கரத்திற்காக நன்றி சொல்வது போல, அடிக்கும் கரத்திற்காகவும் நன்றி சொல்ல வேண்டும்.
செபம்:
ஆண்டவரே, அனைத்தையும் உமது கரங்களிலிருந்து நாங்கள் ஏற்றுக் கொள்ளும் வரம் தாரும்.