புனித ஜெரார்டு
இவர் பெல்ஜிய நாட்டில் உள்ள நாமூர் மாகாணத்தில் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தார். செபத்தை மிக மிக நேசித்து எப்பொழுதும் எல்லா இடங்களிலும் செபித்தார். ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் போகும் போது மாட்சிமை மிக்க நல்ல கடவுளை வணங்குவார். வாழ்த்துவார், நன்றி செலுத்துவார். தமக்காகவும், பிறருக்காகவும் மன்னிப்புக் கேட்பதோடு தமக்கும் பிறருக்கும் வேண்டிய வரங்களைக் கேட்பார். சிறு சிறு செபங்களைச் சொல்லி இறைவனது சமூகத்தில் வாழ்ந்தார். அவருடன் அந்நியோந்நியமாய் ஒன்றித்திருந்தார். வேலையைத் தொடங்கும் பொழுது “என் இயேசுவே எல்லாம் உமக்காக” என்று சொல்லுவார். வேலையின் மத்தியிலும் இதை சொல்லிக் கொண்டே இருப்பார். சிறப்பாக நேரங்கிடைக்கும் போதெல்லாம் செபிக்க கோவிலுக்குப் போய்விடுவார். அவர் இளைஞனாய் இருக்கும் பொழுது அவரது கடமைகளில் ஒன்று அரசருடன் வேட்டைக்குச் செல்லுவதாகும். ஒரு நாள் வேட்டை முடிந்து அரண்மனைக்கு வந்ததும் அரச உணவை அருந்தும்படி எல்லோரும் விரைந்து சென்றனர். நம் புனிதரோ கோவிலுக்குச் சென்று திருப்பேழையில் இருக்கும் இயேசுவை உபசரித்துக் கொண்டிருந்தார். இயேசு அவருடன் பேசினார். நேரம் போனதே தெரியவில்லை. இறுதியாக அவர் போக வேண்டி இருந்தது. “ஓ இயேசுவுடன் தங்கியிருப்பது எவ்வளவோ இனிமையாக இருக்கின்றனது” என்று சொல்லிக் கொண்டே அவர் வெளிக் கிளம்பினார். சந்நியாசியாகி விட்டால் நன்றாக செபிக்கலாம். இன்னும் அதிக நேரம் செபிக்கலாம் என சிந்தித்து உலகத்தைத் துறக்க அவர் தீர்மானித்தார். அவ்விதம் துறவியாகிய பின் நெடுநேரம் செபிக்கலானார். “என் ஆன்மா நேசிக்கிறவரை நான் கண்டடைந்து விட்டேன்” என்று அடிக்கடி கூறுவார்.
சிந்தனை:
“இரவும் பகலும் ஆண்டவரை வாழ்த்துவதும், அவரது இனிய பிரசன்னத்தில் எப்பொழுதும், வாழ்வதும், தங்கள் இதயத்தை அவருக்கு இடைவிடாது அர்ப்பணிப்பதும் எத்தனையோ பெறும் பேறு! வேறு ஒரு வேலையும் செய்யாமல் கடவுளுக்காகவே வாழ்ந்தவர்கள் உண்மையாகவே பேறு பெற்றவர்கள”. (புனித ஜெரார்டு)
செபம்:
ஆண்டவரே, எப்பொழுதும் எல்லா இடங்களிலும் செபிக்க எங்களுக்கு கற்பியும்.