புனித பெரிய சிங்காராயர் (-461)
இவர் டஸ்கனி நாட்டில் பிறந்தார். இவர் மனத்திடன் வாய்ந்தவர். எனவே சிங்கமென்னும் பெயர் இவருக்கு அளிக்கப்பட்டது. இவர் அரும் பெரும் காரியங்களை சாதித்தமையால் பெரிய சிங்காராயர் என்று அழைக்கப்படுகிறார். இவர் திருத்தொண்டராக இருக்கையில் பிரான்சு நாட்டுக்கு ஒரு முக்கியமான வேலையாக அனுப்பப்பட்டார். பேரரசரான மூன்றாவது வலந்தீனியன் என்பவரைக் கண்டு பேசி அந்த வேலையை இவர் சிறந்த விதமாக செய்து முடித்தார். 440-461-ஆம் ஆண்டுவரை இவர் பாப்புவாக இருந்தார். பாப்பு திருச்சபையின் தலைவர் என்பதை பேரரசன் வலந்தீனியன் அங்கீகரிக்கச் செய்தார். ஏழு இலட்சம் எதிரிகள் இத்தாலி நாட்டின் மீதும் உரோமை மீதும் படையெடுத்தனர். இவர் பாப்பானவரின் உடைகளை அணிந்து கொண்டு எதிரிகளின் தலைவனான அற்றிலா என்பவனை மாந்துவா நகரில் சந்தித்தார். அற்றிலாவை “கடவுளின் சாட்டை” என அழைப்பார்கள். அவன் தன் தீய எண்ணத்தை அகற்றி தன் நாட்டுக்குத் திரும்பச் செய்தார். கென்சரிக் என்னும் தலைவனுடைய ஆட்களான காட்டு மிராண்டிகள் உரோமையைக் கைப்பற்றிய போது அவர்கள் அதிக தீமை செய்யாதபடி இவர் தடுத்தார். 451-ஆம் ஆண்டில் கால்சிதன் நகரில் ஒரு பொதுச்சங்கத்தைக் கூட்டினார். இயேசுநாதரிடம் ஒரே ஒரு சுபாவமே உண்டு என சாதித்து வந்த யுற்றிக்கஸ் என்னும் பதிதனுடைய போதனைகளை அந்த சங்கம் வன்மையாகக் கண்டித்தது. சங்கத்தின் கூட்டம் முடிந்ததும் கூடியிருந்த பிதாக்கள் எழுந்து “புனித இராயப்பர் இப்பொழுது சிங்காராயர் வழியாகப் பேசி இருக்கிறார்” எனக் கூவினார்கள். இவர் அழகிய பிரசங்கங்களையும் அதிக பயன்தரும் நிருபங்களையும் நமக்கு கொடுத்து 461-ஆம் ஆண்டில் இறந்தார்.
சிந்தனை:
“ஆண்டவரே, உமது சிலுவையானது ஆசீர் அனைத்திற்கும் ஊற்று வரங்கள் அனைத்தும் சுரக்கும் சுனை. விசுவாசிகள் சிலுவையின் பலவீனத்தில் பலம் அடைகிறார்கள். அவமானத்தில் மகிமை அடைகிறார்கள், சாவில் வாழ்வை அடைகிறார்கள்”. (புனித பெரிய சிங்காராயர்)
செபம்:
ஆண்டவரே, பஞ்சம், படை, கொள்ளை நோய், வெள்ளம், நெருப்பு, தகுதியற்ற தலைவர்கள் இவர்களைப் பயன்படுத்தி கடவுள் மக்களை அவர்களது பாவங்களுக்காக தண்டிக்கிறார் என்ற உண்மையை மக்கள் அறியச் செய்யும்.