புனித இராயப்பர் சின்னப்பர் பேராலய அபிசேகம்
80-ஆம் ஆண்டில் அனக்ளேத்துஸ் என்னும் பாப்பானவர் புனித இராயப்பரது கல்லறை மீது சலவைக் கற்களால் ஒரு சிற்றாலயத்தை அமைத்தார். பின்னர் அது ஒரு பெரிய ஆலயமாகக் கட்டப்பட்டது. அது 326-ல் அபிசேகம் செய்யப்பட்டது. பாப்பானவர் திருப்பலி நிறைவேற்ற ஒரு பீடம் இருந்தது. அது இன்னும் அங்கு இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் ஜீலியஸ் என்னும் பாப்பானவர் அதில் ஒரு பேராலயத்தை அமைக்க எண்ணினார். அது அகில திருச்சபைக்கும் ஓர் ஆபரணமாக இருக்க அவர் விரும்பினார். பிரசித்தி பெற்ற சிற்பிகள் அதில் வேலை செய்தார்கள். 120 ஆண்டுகளாக வேலை நடந்தது. 1514-ஆம் ஆண்டில் இறந்த பிரமாந்தா, 1520-ஆம் ஆண்டில் இறந்த இரப்பேல், 1564-ஆம் ஆண்டில் இறந்த மைக்கேல் ஆஞ்சலோ இம்மூவரும் உலகப் பிரசித்தி பெற்ற சிற்பிகள். இவர்களும் அக்கோயிலை அலங்கரித்து 1626-ஆம் ஆண்டில் அபிசேகம் பண்ணப்பட்டது.
புனித சின்னப்பரின் பேராலயம் கொன்ஸ்தாந்தின் பேரரசரால் கட்டப்பட்டது. சின்னப்பரது உடலை, அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கொண்டு வந்து அடக்கம் செய்த கல்லறை மீது ஆலயம் கட்டப்பட்டு இருந்தது. பின்னர் வந்த பேரரசர்கள் ஆலயத்தைப் பெரிதாக்கினர். கிறிஸ்தவ மக்கள் அதை அழகுபடுத்தினர். எனவே சித்திரம், கலை சம்பந்தப்பட்டமட்டில் உரோமையிலேயே மிக அழகு வாய்ந்த ஆலயமாயிற்று. 15.07.1823 இரவில் ஒரு வேலைக்காரனின் கவனமின்மையால் ஏற்பட்ட நெருப்பு ஆலயத்தின் பெரும் பகுதியை அழித்து விட்டது. 12-ஆம் சிங்காராய பாப்பானவர் இதை திரும்பக் கட்டத் தீர்மானித்து ஒன்பதாம் பத்திநாதர் பாப்பானவர் 1854-ஆம் ஆண்டில் தேவதாய் அமலோற்பவி என்ற உண்மையை வேதசத்தியமாக பிரகடனம் செய்யப்பட்டதையொட்டி அபிசேகம் செய்யப்பட்டது.
கோவிலானது கடவுளின் வீடு. மிக உன்னதரின் வாசஸ்தலம் என்ற நினைவு கோவிலுக்குச் செல்பவர்களது உள்ளங்களில் நம்பிக்கையையும் ஆசாரத்தையும் எழுப்ப வேண்டும். கடவுளது இரக்கத்தின் சிம்மாசனம் கோவில். அவரது எல்லையற்ற அன்பின் அரியணை. கடவுளுடன் பேசி அவரை ஆராதிக்கும் இடம். இயேசுவை தன் இல்லத்தில் வரவேற்று உபசரித்த சக்கேயுஸ் பேறு பெற்றவன், அதை இயேசுவை என்றும் நம் மத்தியில் கொண்டிருக்கும் நாமும் பேறு பெற்றவர்கள். சாலமோன் தான் கட்டிய ஆலயத்தில் உயர்ந்த திரவியங்களைக் காணிக்கையாகக் கொடுத்தார். நாமோ நமது கோவில்களில் இயேசு கிறிஸ்துவையே கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
சிந்தனை:
நம் கோவில்கள் கடவுளது இரக்கத்தின் அரியணைகள் ஆகும்.
செபம்:
ஆண்டவரே, நீர் எங்கள் கோவில்களில் வசிப்பதற்காக உமக்கு நன்றி.