இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு
இறந்தவர்கள் அனைவரையும் இன்று நாம் நினைக்கிறோம். நம் அன்னையாகிய திருச்சபை, மோட்சத்திலிருக்கும் தன் மக்களை நினைத்த பின் வேதனைப்படும் தன் மக்களை நினைக்கிறது. அவர்களுக்காக பரிந்து பேசுகிறது. அவர்களுக்கு தன்னலான உதவி செய்ய முயற்சிக்கிறது. மோட்சத்தில் வாழும் தன் மக்களுடன் அவர்களை சீக்கிரம் ஒன்றிக்கும்படி மன்றாடுகிறது.
இன்று ஒவ்வொரு குருவும் மூன்று திருப்பலி செய்கிறார். இந்த சலுகை 10.08.1915-லிருந்து அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் திருப்பலி உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் அனைவருக்காகவும் ஒப்புக் கொடுக்கப்படுகிறது. இரண்டாவது திருப்பலியை பாப்பானவரது கருத்துகளுக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும். மூன்றாவது திருப்பலியை குரு தமக்குப் பிரியமான கருத்துக்காக ஒப்புக் கொடுக்கலாம்.
செபம், தவம், தர்மம் இம்மூன்று வழிகளால் உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கு உதவி செய்கிறோம். திருப்பலி, செபமாலை, சிலுவைப்பாதை, “இரக்கமுள்ள இயேசுவே, இறந்தவர்களுக்கு இளைப்பாற்றி கொடுத்தருளும்” இது போன்ற செபங்களால் நாம் அவர்களது வேதனைகளை தணிக்கலாம். உணவு, உடை, உறக்கம், உரையாடல் இவற்றில் ஒறுத்தல் செய்து அவர்களுக்கு உதவி அளிக்கலாம். நாம் செய்யும் தர்மத்தை அவர்களின் வேதனையைத் தணிப்பதற்காக ஒப்பு கொடுக்கலாம்.
இயேசுவை நேசிக்கிறவன் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு ஏராளமாக உதவி செய்வான். ஏனெனில் அவர்கள் இயேசுவின் சகோதரர்கள். சிறையிலிருக்கும் சகோதரர்கள், மோட்ச மகிமை என்னும் ஆடையின்றித் தவிக்கும் சகோதரர்கள். அவர்களுக்கு உதவி செய்யும் பொழுது நாம் இயேசுவுக்கு உதவி செய்கின்றோம்.
பிறர் மீது கடுகளவு அன்பு உன்னிடம் இருக்குமானால் உத்தரிக்கும் ஆத்துமங்களுக்கு நீ உதவி செய்வாய். நீ உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும் போது பிறர் உனக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புவாய். அப்படியானால் இப்பொழுது அவர்களுக்கு உதவி செய். எந்த அளவையில் நீ அளப்பாயோ அதே அளவையில் உனக்கு அளக்கப்படும்.
இந்த உலகில் ஒருவருக்கு உதவி செய்கிறோம். அவருக்கு நமது உதவி இன்னும் தேவைப்படுகிறது. அவர் நம்மிடம் இன்னும் உதவி கேட்டு வருகிறார். உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவி செய்து அவர்களை மோட்சத்துக்கு அனுப்புகிறோம். இனி அவர்களுக்கு எவ்வித தேவையும் கிடையாது. அவர்கள் கடவுளை வாழ்த்துவார்கள். தம் உபகாரிகளுக்காக செபித்துக் கொண்டிருப்பார்கள். நன்றி மறப்பது மோட்சத்தில் கிடையாது.
சிந்தனை:
எந்த அளவையில் நாம் அளப்போமோ அதே அளவையில் நமக்கு அளக்கப்படும். உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவி செய்வோமானால் நாம் இறந்த பிறகு பிறர் நமக்கு உதவி செய்வார்கள்.
செபம்:
இரக்கம் உள்ள இயேசுவே, இறந்தவர்களுக்கு இளைப்பாற்றியைக் கொடுத்தருளும்.