புனித சபாஸ் (439 – 532)
இவர் கப்பதோசியாவிலுள்ள முத்தலாஸ்கா என்னும் ஊரில் 439-ஆம் ஆண்டில் பிறந்து எட்டாம் வயதில் ஒரு சந்நியாச மடத்தில் சேர்ந்தார். ஏனைய சந்நியாசிகள் அனைவரையும் விட சிறந்து விளங்கினார். பத்து ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த பின்னர் தலைவரின் அனுமதியோடு பாலஸ்தீனா நாட்டிற்குப் போய் திருத்தலங்களை தரிசித்த பின்னர் வேறோர் இடத்திற்குப் போய் தன் பெற்றோரைக் கண்டார். அவர்கள் இவரை இல்லறத்துக்கு இழுக்க முயன்றனர். இணங்காமல் மடத்திற்குத் திரும்பினார்.
மடத்தின் தலைவரது அனுமதியுடன் வாரத்தில் ஐந்து நாட்களை தூரத்திலிருந்த ஒரு குகையில் செலவழித்து செபிப்பார். கை வேலைகள் செய்வார், உபவாசம் இருப்பார். மடத்தின் தலைவர் இறந்தபின் சந்நியாசிகள் உலகநோக்கு உள்ளவர்களாக வாழத் தொடங்கினர். இதைக் கண்ட சபாஸ் மடத்தை விட்டு விலகி ஓர் உயர்ந்த மலையின் உச்சிக்குச் சென்றார். பல ஆண்டுகளுக்குப் பின், அநேகர் இவருக்கு சீடர் ஆனார்கள்.
இவரது 53-ஆம் வயதில் எருசலேம் நகர்ப் பிதாப்பிதா இவரை வற்புறுத்தி இவருக்குக் குருப்பட்டம் கொடுத்து பாலஸ்தீனாவில் உள்ள சந்நியாசிகள் அனைவருக்கும் இவரை தலைவர் ஆக்கினார். நம் திருவேதத்தின் நலனுக்காக இவர் இரண்டு முறை கொன்ஸ்தாந்தின் நோபிள் நகருக்குப் பிரயாணம் செய்து பேரரசன் அனஸ்தாசியுஸ் என்பவரை முதலில் சந்தித்தார். இரண்டாவது, பேரரசன் ஜஸ்டீனியனைச் சந்தித்தார். 532-ஆம் ஆண்டில் இவர் இறந்தார்.
சிந்தனை:
பெற்றோர் இவரை உலகத்துக்கு இழுக்க பெரும் முயற்சி செய்த போதும் இவர் இணங்கவில்லை. இறைவனது விசேஷ சேவைக்கு அழைக்கப்படும் இளைஞர்கள் இவரைக் கண்டு பாவிக்க வேண்டும்.
செபம்:
ஆண்டவரே, துறவறத்தின் உயர்வை கிறிஸ்தவ பெற்றோர் அனைவரும் அறியச் செய்யும்.