டிசெம்பர் 13
டிசெம்பர் 13
புனித லூசியா (283 – 304)
இவள் சிசிலி நாட்டில் உள்ள சைரக்கூஸ் நகரில் பிறந்தாள். இவளுடைய பெற்றோர் கிரேக்க நாட்டினர். உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே இவள் கிறிஸ்தவ மறையில் வளர்க்கப்பட்டு வந்தாள். இவளுடைய தந்தை இறந்து போனார். தாயின் பெயர் யுற்றிக்கா. லூசியா சிறு வயதிலேயே தன் கன்னிமையை இரகசியமாக கடவுளுக்கு அர்ப்பணித்தாள். மணம் முடிக்க மறுத்து வந்தாள். இவளுடைய தாய்க்கு ஒரு பொல்லாத நோய் வந்து நெடுநாள் வேதனைப்பட்டாள். தாயும் மகளும் புனித ஆகத்தம்மாளின் கல்லறைக்குப் போய் செபித்தார்கள். அங்கு புதுமையாக தாய்க்கு பூரண சுகம் கிடைத்தது. அப்பொழுது லூசியா தான் கன்னியாய் இருக்க கடவுளுக்கு வாக்களித்திருப்பதை தாயிடம் தெரிவித்தாள். புதுமையாக சுகம் பெற்றிருந்த தாய் கடவுள் மீது மிகுந்த நன்றியுடையவளாய், நன்றியைக் காட்ட தன் மகள் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி நடக்க அனுமதித்தாள்.
முன்பு ஒரு வாலிப பிரபுக்கு லூசியாவை மணம் முடித்து கொடுப்பதாக தாய் கூறியிருந்தாள். இப்பொழுதோ லூசியின் எண்ணத்தை அறிந்த அந்த வாலிபன் கடுங்கோபம் கொண்டு, அவள் கிறிஸ்தவள் என அதிகாரியிடம் குற்றம் சாட்டினான். அவளைப் பிடித்துக் கொண்டு போய் குரூர குணம் படைத்த ஒருவன் முன் நிறுத்தினார்கள். அவளைக் கெடுக்கும்படி துஷ்டப் பெண்களின் விடுதிக்கு அவளை அழைத்துப் போக நடுவன் கட்டளையிட்டான். அவளோ கடவுள் மீது நம்பிக்கை வைத்து பரிசுத்த ஆவியின் உதவியைக் கேட்டு மன்றாடினாள். அவளை அசைக்க முடியவில்லை. அவளைச் சுற்றிலும் நெருப்பு வளர்த்தார்கள். நெருப்பு அவளைத் தொடவில்லை. பின்னர் அவளை சிறையில் வைத்து துன்புறுத்தினார்கள். 304-ஆம் ஆண்டில் வாளால் அவளை வெட்டிக் கொன்றனர்.
சிந்தனை:
பரிசுத்த ஆவியின் உதவியால் லூசியா தன் கற்பைக் காத்தாள். நாமும் கற்பைக் காக்க தூய ஆவியின் உதவியை நாடுவோம்.
செபம்:
ஆண்டவரே, நாங்கள் சாகும் வரை ஆத்தும சரீர கற்புள்ளவர்களாய் வாழ உதவி செய்யும்.