வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது, தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும், வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல், அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை இம்மைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள். அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள். நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். சிறையில் இருந்தேன், என்னைத்தேடி வந்தீர்கள்" என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் "ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.
பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை" என்பார்.
அதற்கு அவர்கள், "ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக்கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், "மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார்.
இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும், நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்."
இதுவே, இயேசு கூறிய கடைசி உவமை. தம் திருவிருந்துக்கு முன், தம் சீடரிடம் ஒலிவமலையில் இந்த உவமையைக் கூறினார்.
வானதூதர் புடைசூழ, இயேசு அரியணையில் அமர்ந்து தீர்ப்பு செய்கிறார். உலகிலுள்ள எல்லா மக்களினத்தாரும் அவர்முன் கூட்டப்படுகிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இயேசுவை நன்கு அறிந்த திருச்சபையின் மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்கும்கூட இந்த உவமை பொருந்துகிறது. ஆயர், தம் மந்தையிலுள்ள செம்மறிஆடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதுபோல், மக்களாகிய நாம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறோம்.
செம்மறிஆடுகள் யார் ? வெள்ளாடுகள் யார் ? ஆயரின் குரலைக் கேட்டு ஒரே கூட்டமாக அவர் பின் செல்வது செம்மறி ஆடுகளின் இயல்பு. தன் விருப்பப்படி தனித்தனியாக மேய்வது வெள்ளாடுகளின் இயல்பு. செம்மறி ஆடுகளாக இயேசுவின் வலப்புறத்தில் உள்ளோர் இறைவனின் ஆசி பெற்றவர்கள். வெள்ளாடுகளாக இயேசுவின் இடப்புறத்தில் உள்ளோர் இறைவனின் சாபம் பெற்றவர்கள். உவமை இத்தோடு முடிகிறது. இதன்பின் வருவதெல்லாம் உவமையல்ல, இந்த உவமைக்கு இயேசு அளிக்கும் விளக்கமே.
ஆயர்
செம்மறிஆடு
வெள்ளாடு
இயேசுவின் சகோதர சகோதரிகளாகிய மிகச் சிறியோர்
அரியணையில் வீற்றிருக்கும் இயேசு
உலகில் இயேசுவுக்கு (மிகச் சிறியோருக்கு) உதவி செய்தவர்கள்
உலகில் இயேசுவுக்கு (மிகச் சிறியோருக்கு) உதவி செய்யாதவர்கள்
நீதிக்காகவும், நற்செய்தியின் பொருட்டும் உலகில் பசியுடனும், தாகமாயும், அன்னியராயும், ஆடையின்றியும், நோயுற்றும், சிறையிலும் இருப்பவர்கள்
மக்களாகிய நாம் செம்மறி ஆடாகவும், வெள்ளாடாகவும் பிரிக்கப்படுவதற்குரிய அடிப்படைக் காரணத்தை இயேசு கூறுகிறார். அதன்பின், நாம் அனைவரும் தெளிவாக அறிந்துகொள்ளும்படி விரிவான விளக்கத்தையும் இயேசு அறிவித்தார்.
நான் பசியாய் இருந்தேன், தாகமாயிருந்தேன், அன்னியராயும், ஆடையில்லாதவராயும், நோயுற்றும் சிறையிலும் இருந்தேன். செம்மறி ஆடாகிய நீங்கள் எனக்கு உதவி செய்தீர்கள். ஆனால் வெள்ளாடுகளாகிய நீங்களோ உதவிசெய்யவில்லை. மக்களாகிய நம்மை இரண்டாக பிரித்த காரணத்தை இயேசு நம்மிடம் விளக்கமாகச் சொல்கிறார். செம்மறி ஆடுகள் இறைமகனாகிய இயேசுவுக்கு உதவிசெய்தபடியால் இறைவனின் ஆசியைப் பெறுகிறார்கள். வெள்ளாடுகள் இறைமகனாகிய இயேசு துன்பத்திலிருப்பதைக் கண்டும் உதவிசெய்ய விரும்பவில்லை. அவர்கள் இறைவனின் சாபத்தைப் பெறுகிறார்கள்.
ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்? எப்போது உணவளிக்கவில்லை? இயேசுவின் இந்த விளக்கம் ஒருவருக்கும் விளங்கவில்லை. ஏனென்றால் இயேசு ஒருவரிடமும் உதவி கேட்டதில்லை. உதவி கேட்ட இயேசுவுக்கு எவரும் உதவி செய்ய மறுக்கவும் இல்லை. அவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது.
மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். நம் குழப்பத்தைத் தீர்க்க, இயேசு விளக்கத்தை அளித்தார். "உலகில் பசியாலோ, தாகத்தாலோ, அன்னியனாகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ துன்பத்தால் வருந்துபவர்களே என்னுடைய மிகச் சிறியோராகிய சகோதர சகோதரிகள்" என்று நமக்கு அறிவிக்கிறார். "அவர்களில் ஒருவருக்கு நாம் செய்த உதவி, அரசராகிய இயேசுவுக்கே செய்த உதவியாகும்" என்று விளக்கம் அளித்து அடையாளம் காட்டுகிறார்.
இயேசுவுக்கு முன் நின்ற மக்களினத்தார் அனைவரும் இயேசுவின் விளக்கத்தை அறிந்துகொண்டார்கள். வலப்புறத்தில் நின்ற ஆசிபெற்றவர்கள் மிகச் சிறியோருக்கு உதவி செய்தார்கள். இடப்புறத்தில் நின்ற சபிக்கப்பட்டோர், மிகச் சிறியோருக்கு உதவி செய்யாமல் வெளிவேடக்காரராக வாழ்ந்தார்கள். நாம் அனைவரும் இயேசு அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். வலப்பக்கம் உள்ளோர் நிலைவாழ்வுக்கும், இடப்பக்கம் உள்ளோர் முடிவில்லா தண்டனைக்கும் சென்றோம். ஆனால்?
ஆனால் இயேசு குறிப்பிடும் அவருடைய சகோதர சகோதரிகளாகிய இந்த மிகச் சிறியோராகிய யார்? இந்த உவமைக்கு இயேசு கூறிய விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். இலாசரைப்போல் வாசலில் பசியோடும் நோயுற்றும் படுத்திருப்பவர்தான் இயேசுவின் சகோதர சகோதரிகளா? உலகில் நேர்மையாக வாழ்ந்து, துன்புறுகிறவர்களா? இக்காலத்திலுள்ள நற்செய்தியாளரா? நற்செய்தியாளர் பலர் செல்வர்களாக இருக்கிறார்களே. இவர்கள் இயேசுவின் வலப்பக்கம் நின்றார்களா? இடப்பக்கம் நின்றார்களா? அல்லது மூன்றாவது பிரிவினரா? இவ்வாறு பலவித எண்ணத்தால், இயேசுவின் விளக்கத்தை அறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இயேசுவின் காலத்திலும், திருச்சட்டம் ஒன்றுக்கு எவராலும் சரியான விளக்கம் அளிக்கமுடியவில்லை. உன்மீது நீ அன்புகூர்வதைப்போலவே, உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக என்பதே அந்தச் சட்டம். அன்புகூரவேண்டிய அடுத்தவர் யார்? என்பதே அந்தக் கேள்வி. பரிசேயரும் மறைநூல் அறிஞரும் தங்கள் நெருங்கிய இனத்தவரிடம் மட்டுமே அன்புகூர்ந்தார்கள். மறைநூல் அறிஞர் ஒருவர், இந்தக் கேள்வியை இயேசுவிடம் கேட்டார். இயேசு அவருக்கு ஒரு உவமையைக் கூறி, சரியான பதிலை வரவழைத்தார். உன் எதிரில் உதவிக்காக ஏங்கித் தவிப்பவரே நீ அன்புகூரவேண்டியவர் என்று இயேசு விளக்கம் அளித்தார். அவர் இயேசுவின் வலப்பக்கம் இருந்தாரா, இடப்பக்கம் இருந்தாரா, நல்லவரா, கெட்டவரா, நம் இனத்தவரா என்பது தேவையில்லாதது.
இப்போது, இயேசுவின் சகோதர, சகோதரியாகிய மிகச் சிறியோர் யார்? என்பதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். நம் கண்ணுக்கு எதிரே உதவிக்காக ஏங்கித் தவிக்கும் மக்களே நாம் அன்புகூரவேண்டிய மிகச் சிறியோர் ஆவார். நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் வாடும் இயேசுவின் சீடர்களும் இவர்களில் சேர்கிறார்கள். இவர்களே இயேசுவின் சகோதர சகோதரிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு, நல்ல சமாரியரைப்போல் உதவிசெய்யும்போது, தீர்ப்புநாளில் இயேசுவின் வலதுபுறத்தில் நாம் இடம்பெறுவோம்.
சிறியோருக்கு ஏன் உதவி செய்யவேண்டும். உலகில் நம் உள்ளத்தைத் தவிர, நம் உடல், உயிர், செல்வம், திறமை அனைத்தும் இறைவன் நமக்கு அருளியது. நாம் பொறுப்பாளர் மட்டுமே. நம்மில் சிலர், மற்றவர்களுக்கு உதவிசெய்யும் நிலையில் உள்ளோம். வேறுசிலர் ஊனமுற்றவர்களாகவும், எளியோராகவும், நற்செய்திக்காக அனைத்தையும் விட்டுவிட்டவராகவும் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு உதவி செய்வது நம் கடமையாக இருப்பதோடு, நாம் நிலைவாழ்வு பெறவும் அதுவே வழியாக இருக்கிறது.
1. இயேசு மலைப் பொழிவில் கூறியது, "இரக்கமுடையோர் பேறுபெற்றோர், அவர்கள் இரக்கம் பெறுவார்கள். கனிவுடையோர் பேறுபெற்றோர், அவர்கள் நாட்டை உரிமை சொத்தாக்கிக் கொள்வார்கள். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர், விண்ணரசு அவர்களுக்குரியது.
2.நற்செய்தியை அறிவிக்க இயேசு தம் சீடரை அனுப்புகையில், " இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்" என்று கூறினார்.
3. இயேசு தமக்கு உணவளித்த பரிசேயரிடம் "நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்றார்.
4.இயேசு தம் சீடரிடம், "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்".
5. "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்ட மறைநூல் அறிஞரிடம் இயேசு, "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்ற கட்டளையைக் குறிப்பிட்டு, "அப்படியே செய்யும் அப்பொழுது வாழ்வீர்" என்றார்.
6. நேர்மையற்ற பொறுப்பாளர் உவமையில் இயேசு கூறியது, "ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்."
7. நிலைவாழ்வை விரும்பிய செல்வரிடம் இயேசு கூறியது, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய் உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்."
8. சக்கேயு இயேசுவிடம், "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று கூறினார். இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்றார்.
வள்ளுவர் கூறிய திருக்குறளிலும் இரக்கமே விண்ணக வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கிறது. "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு","செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது", "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி", "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு". "அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்", "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு",
இடப்பக்கமுள்ளோர் முடிவில்லாத் தண்டனை அடையவும், நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். இயேசுவின் முன் நின்ற நாம் அனைவரும் இயேசு கூறிய மிகச் சிறியோர் யார்? என்பதை அறிந்து கொண்டோம். உலகில் வறுமையாலும், நோயாலும், ஊனமுற்றும், நற்செய்தியின் பொருட்டும் அல்லல்படுவோரிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதே நம்மை நிலைவாழ்வுக்கோ அல்லது முடிவில்லா தண்டனைக்கோ வழிநடத்துகிறது. உலகமுடிவில் இயேசு அளிக்கும் தீர்ப்பை கவனித்தால், அது நமக்கு நாமே அளிக்கும் தீர்ப்பாக இருக்கிறது. எனவே, மிகச் சிறியோருக்கு அன்பால் உதவி செய்வோர் நிலைவாழ்வைப் பெறுவோம். தம் உடைமைகள் தமக்கே உரியது என்றெண்ணி, மிகச் சிறியோருக்கு உதவிசெய்யாமல், வெளிவேடக்காரராக வாழ்ந்தால் முடிவில்லா தண்டனையைப் பெறுவோம்.