அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம். மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள், ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள், ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், "இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்" என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.
அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, "எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன. உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்" என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, "உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது" என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.
பிறகு மற்றத் தோழிகளும் வந்து, "ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்" என்றார்கள். அவர் மறுமொழியாக, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் எனக்கு உங்களைத் தெரியாது" என்றார். எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."
மணமகளின் பத்துத் தோழியர்
மத்தேயு 25 1-13
மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். திருச்சபையில் இருக்கும் மக்களே பத்து தோழியர். அவர்கள், இயேசுவின் இரண்டாம் வருகையையும், நிலைவாழ்வையும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களின் கையில் வழிகாட்டும் விளக்காக இருப்பது இயேசுவின் நற்செய்தியாகும்.
ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அவர்கள் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். இறையாட்சியின் நற்செயல்களே ஒளிவீசும் எண்ணெய். நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்;. இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். (மத்தேயு 5 16)
பத்துபேரில் முன்மதி உடைய ஐந்துபேரிடம் நற்செய்தியோடு, இறையாட்சியின் நற்செயல்களும் இருந்தன. தூய ஆவியின் நற்செயல், நல்லுறவு, மகிழ்ச்சி, பொறுமை, பரிவு, அன்பு, தன்னடக்கம், அமைதி, நம்பிக்கை ஆகிய நற்கனிகள் அவர்களின் வாழ்வில் செயல்பட்டன.
ஐந்து பேர் அறிவிலிகள், அவர்கள் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. அடுத்த ஐந்து அறிவிலிகளிடம் நற்செயல்கள் இல்லை.. அவர்கள் வெளிவேடக்காரர்கள். இயேசுவின் நற்செய்தி அவர்களின் கையில் இருந்தாலும், உள்ளத்தில் இறையாட்சி செயல்படவில்லை. அவர்களின் வாழ்வில் நற்கிரியைகள் இல்லை. அவர்கள் வெளிவேடக்காரர்கள்.
மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். இயேசு தம் சீடரிடம் "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்வுக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்கவைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்" என்று கூறினார் (லூக்கா21 34). இதுவே உலக ஆசையால் ஏற்படும் உறக்கம்.
நள்ளிரவில், "இதோ மணமகன் வருகிறார்" என்ற உரத்த குரல் ஒலித்தது. தோழியர் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். நள்ளிரவு என்பது எதிர்பாபாத நேரம். அப்போது இயேசு மணமகனாகவும், தீர்ப்பளிக்கும் அரசராகவும் வருகிறார். இயேசுவை வரவேற்கப் புறப்பட்ட பத்துபேரும் உலக ஆசைகளின் மயக்கத்தில் இருந்தார்கள். இருட்டில் தடுமாறினார்கள். ஒளிவீசுவதற்காகத் தங்கள், விளக்கை ஏற்றினார்கள்.
எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன. உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள். இயேசுவின் நற்செய்தி பத்துபேரின் கையிலும் இருந்தது. அனைவரும் தம்மை ஒளியின் பிள்ளைகள் என்று எண்ணினார்கள். ஆனால் ஐந்து பேர் மட்டுமே தம் பாவங்களை அறிந்து மனம்மாறி, பரிசுத்த ஆவியின் கனிகளைப் பெற்றிருந்தார்கள். அவர்களும் உலகக் கவலைகளால் உறங்கிவிட்டாலும், நள்ளிரவில் கேட்ட உரத்த குரலால் உடனே விழிப்படைந்தார்கள். நற்செயல்களின் ஒளியை வீசி இயேசுவை வரவேற்றார்கள்.
ஆனால், ஐந்துபேரின் விளக்குகளில் ஒளி இல்லை. ஐந்துபேரிடம் நற்செயல்கள் இல்லை. எனவே, இந்த ஐந்து அறிவிலிகளும், இறையாட்சியின் நற்செயல்களைக் கடனாகத் தரும்படி முன்மதியுடையவரிடம் கேட்டார்கள்
முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, "உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது" என்றார்கள். ஒவ்வொருவரும் தம் உள்ளத்தில் இறையாட்சியை செயல்படுத்தவேண்டும் என்பதை இந்த உவமை அறிவிக்கிறது. அப்போதுதான் இறையாட்சியின் ஒளி அவர்களிடம் வெளிப்படும். எனவே, அறிவிலிகள் இறையாட்சியின் நற்செயல்களைச் செய்து, நற்கனிகளைப் பெறுவதற்குப் புறப்பட்டார்கள்.
ஆயத்தமாயிருந்தவர்கள் மணவாளனோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.. நற்செய்தியைக் கைக்கொண்டு, மனம்மாறி, நற்செயல்களைச் செய்தவர்கள் இயேசுவுடன் மண்டபத்தில் பிரவேசித்தார்கள். தீர்ப்புநாளில், பின்னர், வழி அடைக்கப்பட்டது.
அறிவிலிகள் ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் என்றார்கள். மணமகனோ, "எனக்கு உங்களைத் தெரியாது, என்றார். அந்நாளில் பலர் என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர். அதற்கு நான் அவர்களிடம், 'உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன் என்றார் இயேசு (மத்தேயு 7 22 23).
இயேசுவின் முதல் வருகையில், பழைய உடன்படிக்கையின் இஸ்ரயேலர் பலர் தம்மை நேர்மையாளர் என்று நம்பி, ஏமாற்றம் அடைந்தார்கள். அதுபோலவே, புதிய உடன்படிக்கையின் மக்கள் பலர், தம்மை நேர்மையாளர் என்று நம்பி, தீர்ப்புநாளில் ஏமாற்றமடைவார்கள் என்பதே இந்த உவமை கூறும் உண்மை.