இயேசு, "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்" என்று கூறினார்.
இந்த உவமையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று.
உலகிலுள்ள பெரிய விதைகள்
இறையாட்சி சிறிய கடுகு விதைக்கு ஒப்பானது
தம் வயலில் விதைப்பவர்
வானத்துப் பறவைகள் தங்கும் கிளைகள்
செல்வம், கல்வி, பதவி, பெருமை போன்றவையே உலகில் நம் வாழ்வின் உயர்ந்த நோக்கமாக இருக்கின்றன.
இயேசுவின் நற்செய்தியை வாழ்வின் தலையாய நோக்கமாக நாம் ஏற்பதில்லை
இறையாட்சியை வாழ்வின் குறிக்கோளாகவும் உள்ளத்தில் ஏற்றுக்கொள்பவர்
அடைக்கலம் தேடுவோர்களுக்கு உதவுதல்
கடுகு விதை உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது உலகில் செல்வம், கல்வி, பதவி போன்றவையே நம் வாழ்வின் நோக்கமாக இருக்கின்றன. உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, நாம் இவைகளை நாடித் தேடி ஒடுகிறோம். இவைகளுக்கு நடுவே, இயேசுவின் நற்செய்தி கடுகு விதை போன்று சிறிதாகவும் அற்பமானதாகவும் இருக்கிறது. இறையாட்சியை வாழ்வின் இலக்காக எவரும் கொள்வதில்லை. அதற்கு நாம் முன்னுரிமை அளிப்பதில்லை. அதனால் நற்செய்திநம் உள்ளத்தில் பதிவதில்லை.
ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். நமது உள்ளமே வயல். இயேசுவின் நற்செய்தியே கடுகுபோன்ற விதை. ஒருநாள் நாம் இயேசுவின் நற்செய்தியைக் கேட்கிறோம் அல்லது வாசிக்கிறோம். இயேசுவின் வார்த்தை நம் உள்ளத்திலுள்ள ஒரு சிறு இடத்தில் பதிவாகிறது. நம் பல்வேறு நோக்கங்களுக்கு இடையில் இயேசுவின் நற்செய்திக்கும் நாம் இடமளிக்கிறோம்.
அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகிறது. இயேசுவின் வார்த்தை உள்ளத்தில் பதிவாகி இருப்பதால், செயல்படத் தொடங்குகிறது. நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும், உலகில் நேர்மையுடன் வாழ்ந்து, நிலைவாழ்வைப் பெறுவதற்கே உலகில் பிறந்துள்ளோம் என்பதையும் அறிகிறோம். உலகின் மற்ற தேவைகளும் அவற்றின்மீது கொண்ட நாட்டமும் குறைகின்றன. நற்செய்தியை கடைப்பிடித்து இறையாட்சியைப் பெறுகிறோம்.
வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும். நம் உள்ளத்தில் இயேசுவின் வார்த்தை வளர்ந்து, அதன் வாயிலாக அன்பு, பரிவு, தன்னடக்கம் பணிவு போன்ற தூயஆவியின் கனிகள் நம் வாழ்வில் வெளிப்படுகின்றன. துன்பத்தில் தவிப்போருக்கும் தன்னலமின்றி உதவுகிறோம். இதனால், நம் வாழ்வு நம்மை சுற்றியுள்ளோருக்கும் பயனுள்ளதாக அமைகிறது. நம் வாழ்வு 30, 60, 100 என்ற அளவில் இறையாட்சியாக நிறைவுபெறுகிறது.
இயேசு தம் சீடரிடம் "உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து "இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும்" என்றும், "இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ’நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்" என்றும் கூறுகிறார். நம்பிக்கையினால் உலக இச்சைகளை நாம் விலக்க முடியும்.