யூதேயா
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்று எழுதியுள்ளது" என்றார்.
இயேசு, "சரியாகச் சொன்னீர் அப்படியே செய்யும் அப்பொழுது வாழ்வீர்" என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்.
அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை. "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.
ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.
நல்ல சமாரியர்
லூக்கா 10 25-37
பழைய உடன்படிக்கையின் பத்துக் கட்டளைகளை இரண்டு கட்டளையாக இயேசு தம் புதிய உடன்படிக்கையில் அறிவித்தார்.
1.உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக' இதுவே முதன்மையான கட்டளை. கடவுள் நம்மைவிட்டு வெகுதூரத்தில், விண்ணுலகில் இருப்பதால், கடவுளை அன்புகூர்வது நமக்கு எளிதாகவும் சுலபமாகவும் இருக்கிறது. பாட்டுப்பாடி, கடவுளைப் புகழ்ந்து, காணிக்கை அளித்து, இந்தக் கட்டளையை நாம் சுலபமாக நிறைவேற்றிவிடுகிறோம்.
2 உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்பதே இரண்டாவது கட்டளை. Love your Neighbor as yourself (மாற்கு 12 30-31). இரண்டாம் கட்டளையை எவரும் அறியவிரும்புவதில்லை. எனெனில், நாம் அன்புகூரவேண்டியவர் நமக்கு அருகிலிருக்கும் மனிதர்களாக இருப்பதால் சிக்கல் ஏற்படுகிறது. அவர்களை, அடுத்திருப்பவர் என்றும் அருகிலிருப்பவர் என்றும் (Neighbor). அயலான் என்றும், பிறன் என்றும் பல்வேறு வார்த்தைகளால் நம்மை நாமே குழப்பிக்கொண்டு, எவரும் இந்தக் கட்டளையை கைக்கொள்வதில்லை.
2000 ஆண்டுகளுக்கு முன்பு, அக்காலத்து பரிசேயர்களும், திருச்சட்ட அறிஞர்களும் தம் சுற்றத்தாரையும் நண்பர்களையும் தம் அருகில் இருப்பவராக, பிறனாக (Neighbor) நம்பினார்கள், அன்புகூர்ந்தார்கள். கடவுளின் கட்டளையை நிறைவேற்றினார்கள். ஆனால், அது தவறு என்று யூதேயாவிலிருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அறிந்தார். நம் நண்பரையும், உறவினரையும் நேசிப்பதற்கு கடவுளின் கட்டளை அவசியமில்லை. எனென்றால், பாவிகளும்கூட தங்களிடம் அன்புசெலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. (லூக்கா 6 32).
எனவே, இந்த இரண்டாம் கட்டளையின் வாயிலாக இயேசுவை சோதிக்கவும், தம்மை நேர்மையாளர் என்று அறிவிக்கவும் திருச்சட்டஅறிஞர் ஒருவர் விரும்பினார். அவர் இயேசுவிடம் வந்து, கடவுளின் இரண்டாம் கட்டளையின்படி நான் என் அருகில் இருப்பவரை (Neighbor) என்னைப்போலவே நேசிக்க விரும்புகிறேன். அவர் யார்? என்று கேட்டார். தாம் அன்புகூரவேண்டிய நபர்களை, பட்டியல்போட்டு. இயேசு அறிவிப்பார் என்று எண்ணினார். அதில் குறைகண்டுபிடிக்க விரும்பினார். ஆனால், இயேசு அவருக்கு நேரடியாகப் பதில்கூறவில்லை. ஒரு உவமையைக்கூறி கேள்விகளைக் கேட்டு, அவர் வாயாலே பதிலைப் பெற்றார்.
நாம் நேசிக்கவேண்டிய அடுத்திருப்பவர் (Neighbor) யார்? - எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் பயணம் செய்த யூதர் ஒருவர் கள்வரால் தாக்கப்பட்டு, நடுக்காட்டில் உயிர்போகும் நிலையில் தனியாகக் கிடந்தார். அவருக்கு அருகில் செல்லவோ, அன்புடன் உதவிசெய்யவோ ஒருவருமில்லை. அப்போது மூன்று மனிதர்கள் அந்த வழியில் வந்தார்கள்.
விலகிச் சென்ற குருவும் லேவியரும் - ஒரு குருவும் அடுத்தபடியாக ஒரு லேவியரும் அவ்வழியில் வந்தார்கள். அவர்கள் இருவரும் யூதரே. திருச்சட்டத்தையும் நன்கு அறிந்தவர்களே. ஆனால், அடிபட்டவரைப் பார்த்தவுடன் அருகில் செல்லவில்லை. இருவரும் கண்டும் காணாதவர்போல் விலகிச்சென்றார்கள். அருகிலுள்ள மனிதரைவிட (Neighbor), வெகு தூரத்தில், இருக்கும் இறைவனிடம் அன்புகூர்வதே அனைவருக்கும் சுலபமாக இருக்கிறது.
சமாரியர் வந்தார் -. பிறஇனத்தவருக்கும் யூதருக்கும் பிறந்த கலப்பின மக்களே சமாரியர் ஆவார். யூதர்கள், சமாரியரை பேய்பிடித்தவன் என்று இழிவாகக்கூறி வெறுத்தார்கள். எனவே, அடிபட்டுக் கிடந்தவர் யூதராக இருந்தபடியால், சமாரியரியரும் கண்டும் காணாதவர்போல் விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், இங்கு, இயேசு தம் கதையில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
சமாரியர், அடிபட்டவரின் அருகில் சென்று (Neighbor) அன்புடன் அவருக்கு உதவிசெய்தார்– சமாரியர், விலகிச்செல்வதற்குப் பதிலாக, அடிபட்ட யூதரின் அருகில் சென்றார், அவருக்கு அடுத்திருப்பவராக (Neghbor) மாறினார். அவருடைய காயத்தைக் கட்டி, தம் கழுதையில் ஏற்றிச் சாவடியில் சேர்த்தார். தம் நேரத்தையும், தம் கையிலிருந்த பணம் முழுவதையும் அவருக்காகவே செலவழித்தார். தன்னைப் போலவே அடிபட்டவரை அன்புகூர்ந்தார்.
அடிபட்டுக்கிடந்த யூதருக்கு அருகில் சென்று சமாரியர் அன்புகூர்ந்தபடியால், சமாரியரும் அடிபட்டவரும் ஒருவருக்கொருவர் நண்பராகவும், பிறனாகவும், அடுத்திருப்பவராகவும் (Neighbor) ஆனார்கள். எனவே, நம் கண்ணெதிரில், துன்பத்தில் தவிப்போருக்கு நாம் அடுத்திருப்பவராகவும், அயலானாகவும், பிறனாகவும் மாறவேண்டும் என்பதே இயேசு கூறும் உண்மை.. இவ்வாறு, பிறஇனத்தாராகிய தாழ்ந்த சமாரியரியின் மூலமாக எருசலேமிலிருந்த குருக்களுக்கும், திருச்சட்ட அறிஞருக்கும், இயேசு பாடம் கற்பித்தார்.
எனவே, எனக்கு அடுத்திருப்பவர் யார்? Who is my Neighbor? என்று திருச்சட்ட அறிஞர் கேட்ட கேள்வி தவறாக இருந்தபடியால் இயேசு சரியான கேள்வியை அவரிடம் கேட்டார்.
இம்மூவருள் அடிபட்டவருக்கு அருகில் சென்று அன்புகூர்ந்தவர் யார்? Which of these three was a Neighbor to the injured man? இதுவே திருச்சட்ட அறிஞரிடம் இயேசு கேட்ட கடைசிக் கேள்வி., சமாரியரே அன்புகூர்ந்தார் என்று பதில்கூற திருச்சட்ட அறிஞர் விரும்பவில்லை. அடிபட்டவருக்கு இரக்கம் காட்டியவரே என்று கூறினார். இதுவே அனைவருக்கும் பொதுவான பதிலாக இருக்கிறது. எனவே, இயேசுவும் நம் அனைவருக்கும் பொதுவான கட்டளையை அறிவித்தார். "நீ போய் அப்படியே செய்" என்பதே இயேசு நம் அனைவருக்கும் கூறும் கட்டளையாக இருக்கிறது.,
நம் கண்ணெதிரே உதவிக்காகத் தவிப்போர் எவராக இருந்தாலும், அருகில் சென்று நம்மால் முடிந்த உதவிசெய்யும்போது, கடவுளின் இரண்டாம் கட்டளையை நிறைவேற்றுகிறோம். இவ்வாறு உதவிசெய்வதால், நம்முடைய செல்வத்தை அல்ல, இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட செல்வத்தின் ஒரு பகுதியை இறைவனுக்குத் திருப்பிக் கொடுக்கிறோம். அதுவே விண்ணுலகில் நம் கணக்கில் அழியாத செல்வமாக வரவு வைக்கப்படுகிறது.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? "அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்றும் "செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்றும் வள்ளுவர் கூறினார்.