ஒரு நாள் பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரிடமிருந்த பேயை ஓட்டி, அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும், பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது. கூட்டத்தினர் வியந்து நின்றனர். திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், "தாவீதின் மகன் இவரோ?" என்று பேசிக்கொண்டனர்.
ஆனால் இதைக் கேட்ட பரிசேயரும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞரும், "இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது" என்றும் "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது, "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும், வீடும் நிலைத்து நிற்காது. சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? அதுவே அவனது அழிவு. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே, நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்றுத் தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?
வலியவர் ஆயதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது. அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். எனவே நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் எவரும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறமாட்டார். அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். எனவே நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார். "இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது" என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
சாத்தானின் ஆட்சியை நீக்கவும் இறையாட்சியை நிறுவவும் இயேசு உலகிற்கு வந்தார். ஆனால், இறையாட்சியை அறியமுடியாமல் மக்கள் குழப்பமடைந்து, வெளிவேடக்கார்ராக வாழ்கிறார்கள். பரிசேயரைப் போன்ற வெளிவேடக்காரர்கள் பலர் இன்றும் இருப்பதே இதற்குக் காரணம்.
வலியவர்
வலியவரின் வீடு
வலியவரின் படைக்கலன்
வலியவரைக் கட்டிய மிகுந்த வலியவர்
வலியவர் பொருள்களை கொள்ளையடித்தல்
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்
மக்களின் உள்ளத்தில் ஆட்சி நடத்தும் சாத்தான்
மக்களாகிய நம் உள்ளம்
நம் உள்ளத்திலுள்ள பேராசை, தற்பெருமை, சினம், குடிவெறி, நோய்கள்
சாத்தான் ஆளும் உலகில் மனிதராக வந்து அவனைக் கட்டிய இயேசு
சாத்தானின் கட்டிலிருந்த மக்களின் உள்ளத்தில் இறையாட்சியை இயேசு நிறுவுகிறார்
சாத்தான் மட்டுமல்ல வெளிவேடக்காரரும் இயேசுவுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்
பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான். பார்வையற்றவரும் பேச்சற்றவருமாயிருந்த ஒருவரிடமிருந்த பேயை இயேசு ஓட்டி, சாத்தானின் பிடியிலிருந்து அவரை விடுவித்தார். அங்கிருந்த பலர் "தாவீதின் மகன்" என்று இயேசுவைப் பாராட்டினார்கள். இயேசுவை மெசியா என்று மக்கள் பாராட்டிப் புகழ்வதை பரிசேயரும் மறைநூல்அறிஞரும் விரும்பவில்லை. பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இயேசு பேய்களை ஒட்டுகிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.
சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும். நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா? நம் உள்ளத்தில் நடக்கும் சாத்தானின் ஆட்சியை சாத்தானால் நீக்கமுடியாது. தூய ஆவியால் மட்டுமே சாத்தானின் ஆட்சியை நீக்கி, இறையாட்சியை மக்களின் உள்ளத்தில் நிறுவமுடியும். தம் வருகையின் நோக்கம் இதுவே என்று இயேசு அறிவித்தார்.
வலியவர் ஆயதம் தாங்கித் காக்கிறபோது அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது. மக்களின் உள்ளத்தில் பேராசை, தற்பெருமை, சினம், குடிவெறி போன்ற படைக்கலங்களோடு, சாத்தான் வலியவராக ஆட்சிபுரிகிறான். எனவே, சாத்தானை மேற்கொள்வதும், மக்களின் உள்ளங்களை பாவத்திலிருந்து மீட்பதும் மிகக் கடினமாக இருக்கிறது.
அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். சாத்தானின் ஆட்சியிலுள்ள உலகில், பாவமில்லாத மனிதராக இயேசு வாழ்ந்தார். நாற்பது நாள் நோன்பிருந்து, வலிமை மிகுந்த தூய ஆவியால் சாத்தானை மேற்கொண்டார். சாத்தானின் கட்டிலிருந்த நம் உள்ளங்களை விடுதலை செய்து, அங்கு அன்பு, பரிவு, தாழ்மை போன்ற நற்செயல்களை வெளிப்படுத்தும் இறையாட்சியை நிறுவினார்.
மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் எவரும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறமாட்டார். பரிசேயர்கள் இயேசுவைப் பலவாறு பழித்தார்கள். "இவன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாதவன், பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்று பழித்தார்கள். தமக்கு எதிராகப் பரிசேயர் கூறிய பழிப்புரைகளை இயேசு மன்னித்தார். ஆனால், இப்போது, இயேசுவின் வருகையின் நோக்கத்தையும், தூயஆவியின் இறையாட்சியையும் பரிசேயர்கள் பழிப்பதால் இயேசு பரிசேயர்களை எச்சரித்தார். அவர்களின் இந்தப் பழிப்புரை இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப் படுவதில்லை என்று அறிவித்தார்.
பரிசேயருக்கு மட்டுமல்ல, இயேசு நமக்குக் கூறும் எச்சரிக்கையாகவும் இது இருக்கிறது. தூயஆவிக்குரிய நற்செயல்களைச் செய்பவரோடும், இறையாட்சியை இயேசுவின் வழியில் அறிவிப்பவர்களுக்கும் எதிராக நாம் செயல்படக்கூடாது. நாம் அவர்களோடு இணைந்திருக்கவேண்டும். திருத்தூதர் பவுல் தூயஆவியுடையோரை அடையாளம் காட்டுகிறார். "அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்" என்பவைகளே தூயஆவியுடையோரின் செயல்களாகும். தூயஆவியின் வழியில் செயல்படுபவர்களை குற்றப்படுத்தாமலும், தூயஆவியின் தன்மையுடனும் நாம் வாழவேண்டும்.
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். இயேசு தம்முடைய இறையாட்சிக்கு பெரிய எதிரி யார் என்பதை இங்கு அறிவித்தார். சாத்தான் மட்டும் இயேசுவுக்கு எதிரியல்ல. வெளிவேடக்காரராகிய பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவுக்கு எதிராகவே செயல்பட்டார்கள். பரிசேயரின் வெளிவேடத்தால் மக்கள் தடுமாற்றம் அடைந்து, சாத்தானின் ஆட்சிக்கு வழிமாறினார்கள்.
பரிசேயரின் ஏழு விதமான வெளிவேடம் பரிசேயரின் வெளிவேடத்தை மலைப் பொழிவில் இயேசு அறிவித்தார். "தன் கண்ணிலுள்ள மரக்கட்டையைப் பார்க்காமல் பிறர் கண்ணிலுள்ள துரும்பை குறைசொல்லுதல், குருடாக இருந்துகொண்டே குருடாயிருக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டுதல், தாம் செய்த அறச்செயல்களைத் தம்பட்டம் அடித்தல், நோன்பு இருப்பதை முகவாட்டத்தால் காட்டுதல், மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்தல், இறைவேண்டல் செய்யும்போது, மிகுதியான சொற்களால் பிதற்றுதல், கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்தல்" ஆகிய வெளிவேடங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டு, வழிதவறினார்கள்.
"எனவே, மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது" என்று இயேசு அறிவித்தார். திருத்தூதர் பவுல், "இத்தகையோர் போலித் திருத்தூதர்கள். வஞ்சக வேலையாள்கள் கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள். இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே? ஆகவே அவனுடைய தொண்டர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அவர்களது முடிவு அவர்களுடைய செயலுக்கு ஏற்பவே அமையும்" என்று கூறுகிறார்.
உலகில் இறையாட்சி, சாத்தானின் ஆட்சி என்ற இரண்டு மட்டுமே உள்ளன. இடுக்கமான வழி, அகன்ற வழி என்ற இரண்டு வழிகளே இருக்கின்றன. ஒன்று நிலைவாழ்வுக்கும், மற்றது நித்திய அழிவுக்கும் வழிநடத்துகிறது. இறையாட்சி என்ற பெயரில் பலர் வெளிவேடக்காரராக நடித்து மக்களை வஞ்சிக்கிறார்கள். கொடுஞ்செயல்களைச் செய்யும் தீயோரைவிட, நல்லவரைப்போல் நடிக்கும் வெளிவேடக்காரரே இறையாட்சியிலிருந்து மக்களைச் சிதறச் செய்கிறார்கள். இயேசுவைப் பின்பற்றாதவர்களைவிட, இயேசுவைப் பின்பற்றுபவர்களைப்போல் நடிப்பவர்களே மக்களைச் சிதறடிக்கிறார்கள். அன்பையும் பரிவையும் இரக்கத்தையும் பொறுமையையும் மறந்து, இறைவணக்கச் சடங்குகளுக்கும், தற்பெருமைக்கும் அவர்கள் முதலிடம் அளிக்கிறார்கள். நாம் வெளிவேடக்காரராக இருந்தால், நம்மை மட்டுமல்ல, மற்றவர்களையும் இறையாட்சியிலிருந்து சிதறிப்போகச் செய்கிறோம்.