இயேசு தம் சீடரிடம் "எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார் அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" என்றார்.
பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர். இயேசு அவர்களிடம் கூறியது "நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்."
செல்வரும் இலாசரும் உவமை
செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.அவர், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். இலாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்" என்று உரக்கக் கூறினார்.
அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய். அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது" என்றார்.
அவர், "அப்படியானால் தந்தையே, இலாசரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே" என்றார்.
அதற்கு ஆபிரகாம், "மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்" என்றார். அவர், "அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்" என்றார். ஆபிரகாம், "அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்" என்றார்.
செல்வரும் இலாசரும்
லூக்கா 16 19-31
இயேசு இந்த உவமையைக் கூறும் காரணம் என்ன? இயேசு தம் சீடரிடம் "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" என்று கூறியபோது, பணஆசை மிகுந்த பரிசேயர்கள் இயேசுவை எளனம் செய்தார்கள் (லூக்கா 16 14-16). ஏனெனில், செல்வர்கள் கடவுளின் ஆசிபெற்றவர்கள் என்றும், ஏழைகளும் உடல்-ஊனமுற்றோரும் பாவிகள் என்றும் யூதர்கள் அக்காலத்தில் நம்பினார்கள்.
உலகச் செல்வம் அனைத்தும் கடவுளுடையது என்ற உண்மையை இயேசு அவர்களுக்கு அறிவித்தார். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். என்ற பொன்மொழி இந்த உவமையில் விளக்கப்படுகிறது (மத்தேயு 5-7)
செல்வர் யார்? உவமையில் கூறப்படும் செல்வர் பரிசேயரே. செல்வரைப் போல், பரிசேயர்கள் தங்கள் வாசகப்பட்டைகளை அகலமாக்கி, தங்கள் அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், விரும்பினார்கள் (மத்தேயு 23 5-7). செல்வர் தம் ஐந்து சகோதரர்களிடம் அன்பாயிருந்தார். அதுபோலவே, பரிசேயர்களும் தம்மைப் போன்ற பரிசேயர்களிடம் அன்பாயிருந்தார்கள். ஊனமுற்றவர்களை பாவி என்று குறைகூறினார்கள்.
இலாசர் யார்? ஏழைகளும், உடல் ஊனமுற்றவர்களும், மனநலம் குன்றியவர்களும், நோயால் வருந்துபவர்களும், நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோரும் உவமையில் இலாசர் என்ற ஏழையாக் கூறப்படுகிறார்கள்.. மிகவும் சிறிவர்களாகிய என் சகோதரர் என்று இயேசு இவர்களைக் குறிப்பிட்டார் (மத்தேயு 25 40).
ஆபிரகாம் ஏன் வருகிறார்? பரிசேயர்கள் தம்மை ஆபிரகாமின் வழிமரபினர் என்றும் மோசேயின் சீடர் என்றும் உடன்படிக்கையின் மக்கள் என்றும் பெருமைகொண்டார்கள். ஆபிரகாம் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியஞ்செய்தார் என்று தவறாக எண்ணினார்கள். எனவே, அவர்களின் தந்தையாகிய ஆபிரகாம் வாயாலே பரிசேயர்களுக்கு இயேசு அறிவுரை கூறினார்.
ஆபிரகாமின் அறிவுரை - மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.
இயேசு மலைப்பொழிவில் அறிவித்த புதிய உடன்படிக்கையின் தீர்ப்பை ஆபிரகாம் தம் வாயால் இருவருக்கும் அறிவித்தார். செல்வர்களே ஐயோ உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள் இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். (லூக்கா 6 21,24).
தீர்ப்புக்குமுன்பு செல்வர் நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். ஆனால் ஏழை இலாசரோ நோயாலும் பசியின் தீயாலும் வேதனைப்பட்டார், எனவே, தீர்ப்புக்குப்பின்பு, இலாசர் ஆபிரகாம் மடியில் இளைப்பாறினார். செல்வரோ தீப்பிழம்பில் வேதனைப்பட்டார்.
தீர்ப்புக்கு முன்பு நாய் இலாசரின் புண்களை நக்கி நன்மை செய்தது. ஆனால் கண்ணெதிரே வாசலில் கிடந்த இலாசருக்கு தம்முடைய உணவுக் கழிவுகளைக்கூட செல்வர் கொடுக்கவில்லை. அதுபோலவே, தீர்ப்புக்குப்பின் செல்வர் இலாசரிடமிருந்து ஒரு சொட்டு நீருக்காக ஏங்கினார், அது அவருக்குக் கொடுக்கப்படவில்லை.
தீர்ப்புக்குமுன் செல்வருக்கும் இலாசருக்கும் நடுவே ஒரு சிறு வாயில் மட்டுமே இருந்தது. செல்வர் அதை கடந்துசென்று உதவிசெய்ய விரும்பவில்லை. எனவே, தீர்ப்புக்குப்பின், அந்தச் சிறிய இடைவெளி, எவரும் கடக்கமுடியாத பெரும் பிளவாக மாறியது. எனவே, இலாசரிடம் செல்வர் உதவிபெற முடியவில்லை
உவமை கூறும் உண்மை - உலகச் செல்வம் அனைத்தும் கடவுளுடையது. சிறிதுகாலம் மட்டுமே மனிதர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே யோபு தன் செல்வத்தை இழந்தபோது, ஆண்டவர் அளித்தார்: ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக! என்றார் (யோபு 1 21).
ஆகவே, உலகில் செல்வர் பெற்ற உணவு, உடை, இருப்பிடம், ஆரோக்கியம் அனைத்தும் கடவுளின் அருள், இலாசர் பெற்ற நோயும் துன்பங்களும் கடவுளிடமிருந்து வந்தவையே. ஆனால். தன்னுடைய தேவைக்கும் மிகுதியான செல்வம் இருந்தபோதும், உதவிசெய்யும் வாய்ப்பு இருந்தபோதும், இலாசருக்கு செல்வர் உதவிசெய்யவில்லை. எனவே, மரணத்திற்குப்பின் பரிசேயருக்கு நற்சாட்சி சொல்லவோ, உதவிசெய்யவோ நண்பர் எவரும் இல்லை.
எனவே, உலகச் செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள் அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள் என்று இயேசு அறிவித்தார். (லூக்கா 16 9)
செல்வரின் ஐந்து சகோதரர்கள் யார்?. உவமையில் வரும் செல்வர் தம் மரணத்திற்குப் பின்னரே தவறை உணர்ந்தபடியால் மனம்மாற அவருக்கு வாய்ப்பு இல்லை. செல்வரின் ஐந்து சகோதரர்களும் உயிரோடு இருந்தார்கள் என்று உவமையில் கூறப்படுகிறது. எனவே உயிரோடு இருக்கும் மக்களுக்கு இந்த உவமை இயேசுவின் எச்சரிக்கை.
மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்தெழுந்து போனாலும், நம்பமாட்டார்கள்" இஸ்ரயேலில் இருந்த பரிசேயர்கள் மோசேக்கும் தீர்க்கத்தரிசிகளுக்கும் செவிகொடாதபடியால், முதல்-உடன்படிக்கையின் நித்தியஜீவனை இழந்தார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவின் சுவிசேஷத்துக்கு செவிகொடாதவருக்கும் அதே தீர்ப்பு அளிக்கப்படும் என்பதை இயேசு அறிவித்தார்.