இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார். "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்.
நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு, நீண்டகாலம் நெடும்பயணம் மேற்கொண்டார்.
பழம்பறிக்கும் பருவகாலம் நெருங்கி வந்த போது, அவர் தமக்குச் சேர வேண்டிய திராட்சைப் பழங்களைப் பெற்றுவரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள், ஒருவரைக் கொலை செய்தார்கள், ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். அவர்களை அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.
மூன்றாம் முறையாக அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர். சிலரைக் கொன்றார்கள்.
இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே, அவர் அவருடைய அன்பு மகன். பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், "நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்" என்று சொல்லிக்கொண்டார். இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார்.
தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், "இவன்தான் சொத்துக்கு உரியவன். வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது இவன் சொத்து நமக்கு உரியதாகும்" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
அவ்வாறே அவர்கள் அவரைப் பிடித்துக் கொன்று, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்."அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன செய்வார்?" என இயேசு கேட்டார்.அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார். உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்கமுன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்" என்றார்கள்.இயேசு "எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும். அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், "ஐயோ, அப்படி நடக்கக் கூடாது" என்றார்கள்.
ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று, ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது, நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று" என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் ஒருபோதும் வாசித்தது இல்லையா? இதன் பொருள் என்ன?" என்று அவர் கேட்டார். "அந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார்" என்றார்.
தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர். அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள். ஆனால் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.
கொடிய குத்தகைதாரர்
லூக்கா 20 9-19
கொடிய குத்தகைதாரர் என்ற இந்த உவமை இயேசுவின் புதிய உடன்படிக்கையின் நோக்கத்தை அறிவிக்கிறது.
திராட்சைத் தோட்டம் எது? . திராட்சைத் தோட்டம் என்பது என்பது இறையாட்சியை வளர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் தேசம். இஸ்ரயேலர்களே திராட்சைச் செடி.
திராட்சைத் தோட்ட நிலக்கிழார் யார்? கடவுளே நிலக்கிழார். இஸ்ரயேலர்கள் இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும்படி முதல் உடன்படிக்கை செய்யப்பட்டு, திருச்சட்டங்கள் அளிக்கப்பட்டன. அதுவே அவர்களுக்கு வேலியாகவும் காவல் மாடமாகவும் இருந்தன.
தோட்டத் தொழிலாளர்கள் யார்? திருச்சட்டங்களை அறிவித்து இஸ்ரயேலர்களை இறையாட்சியின் வழியில் நடத்தும்பணி இஸரயேல் குருக்களிடமும் தலைவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களே தோட்டத் தொழிலாளர்கள்.
தமக்குச் சேர வேண்டிய திராட்சைப் பழங்களைப் பெற்றுவரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். இறையாட்சியின் கனிகளாகிய நற்செயல், நல்லுறவு, மகிழ்ச்சி, பொறுமை, பரிவு, அன்பு, தன்னடக்கம், அமைதி, நம்பிக்கை ஆகியவைகளே கடவுள் இஸ்ரயேலரிடம் விரும்பிய திராட்சைப் பழங்கள். எலியா ஏசாயா சக்கரியா போன்ற இறைவாக்கினர்களே இறைவன் அனுப்பியப் பணியாளர்கள். இறுதியில் திருமுழுக்கு யோவானைத் தம் கடைசிப் பணியாளராக இறைவன் அனுப்பினார்.
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரைக் கொலை செய்தார்கள், ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். அவர்களை வெறுங்கையராய் அனுப்பினார்கள். இஸ்ரயேல் குருக்களும், தலைவர்களும் பொருளாசையினாலும், தற்பெருமையாலும் வெளிவேடத்தாலும் மக்களைப் பாவத்திற்கு வழிநடத்தினர்கள். இறைவாக்கினர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலரைக் கொன்றார்கள். எருசலேம் கனியில்லா அத்தியாக இருந்தது.
நான் என்ன செய்வேன்? இறுதியாக என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்" என்று சொல்லிக்கொண்டார். இறுதியாக, கடவுள் தன் அன்பு மகனாகிய இயேசுவை மெசியாவாக இஸ்ரயேலுக்கு அனுப்பினார். இஸ்ரயேலர் மனம்மாறி நற்கனிகளைக் கொடுப்பதற்காக இயேசு, தமது நற்செய்தியை அறிவித்தார்., புதிய உடன்படிக்கையின் பாவமன்னிப்பை அறிவித்தார். ஆனால், இஸ்ரயேல் தலைவர்களோ, தம்மை இயேசுவைவிட நேர்மையாளர் என்று நம்பியதால். இயேசுவின் புதிய உடன்படிக்கையை காதால் கேட்கவோ அறிந்துகொள்ளவோ விரும்பவில்லை.
இயேசு இஸ்ரயேலரைக் குறித்துக் கவலைப்பட்டார். எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே!உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோலநானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்;உனக்கு விருப்பமில்லையே (லூக்கா 13 34 35,)
தாம் உயிருடன் இருந்தபோது நடந்தவைகளை இதுவரை இயேசு கூறினார். தாம் இறக்கப் போவதையும் அதன்பின் நடக்கப்போவதையும் இதன்பின் இந்த உவமையில் அறிவித்தார்.
இவன்தான் சொத்துக்கு உரியவன். இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது இவன் சொத்து நமக்கு உரியதாகும். இருபுதல்வர்கள் என்ற உவமையின் வாயிலாக, இஸ்ரயேலருடன் செய்யப்பட்ட முதல் உடன்படிக்கை இஸ்ரயேலரிடமிருந்து நீக்கப்பட்டது. கொடிய குத்தகைதாரர் உவமையில் இஸ்ரயேல் குருக்களும், மக்கள் தலைவர்களும் கொடியவர்கள் என்றும், கொலைபாதகர்கள் என்றும் நேரடியாக எருசலேம் கோவிலில் இயேசு அறிவித்தார். இயேசு தம் உவமையில் கூறியபடியே, இயேசுவை கொலைசெய்ய அவர்கள் திட்டமிட்டார்கள்.
அவர்கள் அவரைப் பிடித்துக் கொன்று, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள். இயேசு இந்த உவமையை கூறிய சிலநாள்கள் கழித்து, குருக்களும், தலைவர்களும், பரிசேயரும் யூதர்களும் இயேசுவை சிலுவையில் கொன்று போட்டார்கள், எருசலேமுக்கு வெளியே அவர் அடக்கம் பண்ணப்பட்டார்.
திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? கடவுளின் எதிர்காலத் திட்டம் என்ன? என்பதை இயேசு திருக்கோவிலில் அறிவித்தார். ’அவர் வந்து அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் என்று இயேசு அறிவித்தார்.
உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர். - இந்த உவமையில் இரண்டு புதிய அறிப்புகளை இயேசு இஸ்ரயேல் தலைவர்களுக்கு அறிவித்தார்.
1. சீனாய் மலையில் கடவுள் இஸ்ரயேலருக்கு வாக்களித்த பழைய உடன்படிக்கையை இயேசு தள்ளுபடி செய்தார். அது முடிவுபெற்றது.
2. இயேசு, இஸ்ரயேலருக்கு அளித்த தம்முடைய புதிய உடன்படிக்கையை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக ஆக்கினார். அதை, தம் சீடருக்கு அறிவித்தார். 'பாவமன்னிப்புப் பெற மனம்மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும். (லூக்கா 24 47) எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள் என்றார் (மத்தேயு 28 19)
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. மெசியாவை நீண்டகாலம் எதிர்பார்த்த இஸ்ரயேல் தலைவர்கள் அவர் வந்தபோது தடுக்கி விழுந்தார்கள். இஸ்ரயேலரால் புறக்கணிக்கப்பட்டாலும், இயேசுவின் வாழ்வும், வார்த்தைகளும், மரணமும், உயிர்தெழுதலும் இறையாட்சியை உலகில் நிலைநிறுத்தும் என்று இயேசு அறிவித்தார்.
அந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார். பிற இனத்தார் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவதற்காக முயற்சி செய்யாத போதிலும் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டார்கள். அப்படி ஆக்கப்பட்டது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையால்தான். ஆனால், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகுமாறு இஸ்ரயேல் மக்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்த போதிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை. இதன் காரணம் என்ன? அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே தடைக்கல்லின் மேல் தடுக்கி விழுந்தனர் (உரோமர் 9 30-33)