தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார். இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.
பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார், "கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரம் போன்ற மற்ற மக்களைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்."
ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார்.
இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
இந்த உவமையில் இஸ்ரயேலில் இருந்த இரண்டுவகை மக்களிலிருந்து இருவர் கோவிலில் இறைவேண்டல் செய்கிறார்கள். அவர்களின் வேண்டுதலை அடிப்படையாகக்கொண்டு, கடவுளுக்கு ஏற்புடையவர் யார்? என்பதை இயேசு அறிவித்தார்.
பரிசேயர் மோசேயின் திருச்சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் பரிசேயர் உறுதியுடன் செயல்பட்டனர். வரிதண்டுவோர், சமாரியர், பிறஇனத்தவர், விலைமகளிர் ஆகியோரைப் பாவிகள் என்று பட்டியலிட்டு, அவர்களோடு பரிசேயர் கலந்துகொள்வதில்லை. மக்கள் அனைவரும் பரிசேயரை ரபி (குரு) என்று உயர்வாக அழைத்தார்கள். திருமுழுக்கு யோவானும், இயேசுவும் இறைவாக்கினர் அல்ல என்றே மிகுதியான பரிசேயர் எண்ணினார்கள்.
பரிசேயரின் வேண்டுதல். கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரம் போன்ற மற்ற மக்களைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். மக்களால் நேர்மையாளர் என்று போற்றப்பட்ட பரிசேயரைப்பற்றி இறைவன் என்ன நினைக்கிறார்? பரிசேயர் செய்த இறைவேண்டலின் வாயிலாகவே, இயேசு அவர்களின் உள்ளத்தை வெளிப்படுத்தினார். பரிசேயர் கோவிலின் முன் பகுதிக்குச் சென்று கடவுள் வேண்டலில் மற்றவர்களை கொள்ளையர்கள் என்றும் பாவிகள் என்றும் இகழ்ந்தார். ஆனால், தன்னைத் தானே போற்றிப் புகழ்ந்தார். வாரத்திற்கு இரண்டுமுறை நோன்பு இருப்பதையும், புதினா, சோம்பு, சீரகம் போன்ற வாசனைப் பொருள்களின் காணிக்கையையும் தம்பட்டம் அடித்தார். திருச்சட்டம் சார்ந்த செயல்களால் தாம் மீட்கப் பட்டவர் என்று நம்பினார். எனவே, அவர் கடவுளிடம் எந்த மன்னிப்பையும் வேண்டவில்லை. மன மாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிக்க வந்த மெசியாவாகிய இயேசுவையும், அவருடைய புதிய உடன்படிக்கையையும் அவர் ஏற்கவில்லை.
வரிதண்டுவோர் இஸ்ரயேல் நாட்டை அடிமைபடுத்திய உரோம அரசால் மக்களிடம் வரிவசூலிக்க நியமிக்கப்பட்ட யூதர்களே வரிதண்டுவோர் ஆவார். பிற இனத்தாராகிய உரோமருக்காக வரி வசூலித்ததாலும், கூடுதலாக வசூலித்து மக்களை ஏமாற்றியதாலும், பணஆசை உடைவர்களாக இருந்தபடியாலும், திருச்சட்டங்களைக் கைக்கொள்ளாதபடியாலும், பெரிய பாவியாக எண்ணப்பட்டு, யூதர்களால் வெறுக்கப்பட்டார்கள்.
வரிதண்டுபவரின் வேண்டுதல். வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். வரிதண்டுபவர் தன்னைப்பற்றிப் பெருமைப்படவில்லை. தன்னைத் தாழ்த்தினார். தான் பாவி என்பதை உணர்ந்து, தொலைவில் நின்று, தலை குனிந்து, தன் மார்பில் அடித்து பாவத்தை அறிக்கை செய்தார். கடவுளின் மன்னிப்பை வேண்டினார்.
பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். பாவியாக எண்ணப்பட்டு, யூதர்களால் ஒதுக்கப்பட்ட வரிதண்டுபவரின் பாவத்தைக் கடவுள் மன்னித்துவிட்டார், ஆனால் திருச்சட்டங்களைத் தவறாமல் கைக்கொள்பவர் என்றும் போதகர் என்றும் மதிக்கப்பட்ட பரிசேயர் மன்னிக்கப்படவில்லை. இயேசு இவ்வாறு அறிவித்தார். உவமையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் இயேசுவின் தீர்ப்பைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
பரிசேயர் கடவுளால் ஏற்கப்படாதது ஏன்? தங்களை நேர்மையானவர் என்று நம்புவதும், மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குவதும் கடவுள் பார்வையில் அருவருப்பாகும் என்று உவமையின் முன்னுரையிலே இயேசு கூறினார். எனவே, கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை அறிவிக்கவே இயேசு வந்தார். இஸ்ரயேலரிடம் கடவுள் செய்த பழைய உடன்படிக்கையை நிறைவு செய்யவும், புதிய உடன்படிக்கையை அறிவிக்கவும் இயேசு வந்தார். தம் பாவங்களை அறிந்து மனம் மாறுபவர்கள் இயேசுவால் மன்னிக்கப்படுகிறார்கள். தாங்கள் பாவிகளல்ல என்று எண்ணுபவர்கள் இயேசுவின் மன்னிப்பை இழக்கிறார்கள்.
யூதர்களின் தவறுகளை அறிவித்து, அவர்களை மீட்கவே இயேசு புதிய உடன்படிக்கையை அவர்களிடம் அறிவித்தார். ஆனால், யூதர்களோ தாம் ஏற்கனவே மீட்கப்பட்டவர்கள் என்று எண்ணி, திருச்சட்டத்தின் சடங்குகளையே கைக்கொண்டு வெளிவேடதாரிகளாக வாழ்ந்தார்கள். தங்கள் பாவங்களை அறியாமல், மற்றவர்களிடமும், இயேசுவிடமும் குற்றம் கண்டுபிடித்தார்கள். தங்களின் தற்பெருமையால், இயேசுவின் தாழ்மையில் தடுக்கி விழுந்தார்கள். அவர்கள் மனம்மாறவோ, இயேசுவின் மன்னிப்பைப் பெறவோ விரும்பாதபடியால் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியவில்லை. ஆனால், வரிதண்டுபவரோ தன் பாவங்களை அறிந்து இறைவனிடம் மன்னிப்பை வேண்டினார். இயேசுவின் மன்னிப்பைப் பெற்று, கடவுளுக்கு ஏற்புடையவரானார்.
இக்காலத்தில், இயேசுவின் புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள நம்மில் பலர் இன்றும் பரிசேயரைப் போலவே வாழ்கிறோம். நாம் திருச்சபையில் இருப்பதால், மீட்கப்பட்டவர் என்று எண்ணுகிறோம். வழிபாட்டில் பங்கேற்பதும், இறைவார்த்தைகளைக் கேட்பதும், இறைவனைப் போற்றுவதும், காணிக்கை அளிப்பதும் நம் வழக்கமான சடங்காக மாறிவிட்டது. நம்மை நேர்மையாளர் என்று எண்ணுவதால், நம் பாவங்களை அறிவதில்லை. கடவுள் நம்மிடம் என்ன விரும்புகிறார் என்பதை இந்த உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் மலைப் பொழிவில் இயேசு கூறிய கட்டளைகளை நாம் கைக்கொள்கிறோமா? மனம் மாறியிருக்கிறோமா? நம் வாழ்வில் அன்பு, பரிவு, தாழ்மை, பொறுமை, மன்னிப்பு போன்ற இறையாட்சியின் கனிகள் வெளிப்படுகிறதா? நாம் நம்மைச் சோதித்து அறியவேண்டும். அப்போது, இயேசுவின் புதிய உடன்படிக்கையின்படி நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் இறைவனின் பிள்ளைகளாக நாம் ஏற்கப்படுவோம்.