இயேசுவும் சீடர்களும் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும், இயேசு அங்கு கோவிலுக்குள்ளேயே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. அவர்களிடம் "என் இல்லம் 'மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று அவர்களுக்குக் கற்பித்தார்; "ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.
தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், மக்களின் தலைவர்களும் இதைக் கேட்டு அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர். கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால், அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் அவரை நோக்கி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்" என்றார்கள்.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். யோவானுக்கு திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா? எனக்குப் பதில் சொல்லுங்கள்" என்று அவர் கேட்டார்.
அவர்கள், "விண்ணகத்திலிருந்து வந்தது" என்போமானால், "பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை" எனக் கேட்பார். எனவே 'மனிதரிடமிருந்து வந்தது' என்போமா?" என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். "மனிதரிடமிருந்து வந்தது' என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர்" என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் மக்கள் அனைவரும் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர். எனவே அவர்கள் இயேசுவிடம், "எங்கிருந்து வந்தது என எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.
இயேசுவும் அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன்" என்றார்.
மேலும் இயேசு தலைமைக் குருக்களையும், மறைநூல் அறிஞர்களையும், மக்களின் தலைவர்களையும் பார்த்து, "இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், "மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்றார். அவன் மறுமொழியாக, "நான் போக விரும்பவில்லை" என்றான். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தான். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவன் மறுமொழியாக, "நான் போகிறேன் ஐயா" என்றான். ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?" என்று கேட்டார்.
அவர்கள் "மூத்தவரே" என்று விடையளித்தனர்.
இயேசு அவர்களிடம், "வரிதண்டுவோரும், விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக, வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்தபின்பும், நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை, அவரை நம்பவுமில்லை" என்றார்.
இரு புதல்வர்கள்
மத்தேயு 21, 23-32
சீனாய் மலையில் கடவுள் இஸ்ரயேலரோடு செய்த முதல்-உடன்படிக்கை திருமுழுக்கு யோவானோடு முடிவடைந்தது. திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன (மத்தேயு 11-13). ஆனால், எருசலேமிலிருந்த குருக்களும், தலைவர்களும் பரிசேயர்களும், திருச்சட்ட அறிஞரும் கோவிலில் சடங்குகளைச் செய்து, தம்மை மோசேயின் சீடர் என்றும், யோவானை பேய்பிடித்தவன் என்றும் அறிவித்தார்கள். இயேசுவையும் குறைகூறி, அவருடைய புதிய-உடன்படிக்கையையும் அறிந்துகொள்ள விரும்பவில்லை. இயேசு மூன்றரை ஆண்டுகளாக அவர்களிடம் கனியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் அவர்கள் மனம்மாறவில்லை. எனவே, தாம் இறப்பதற்குமுன் இயேசு அவர்களுக்கு எருசலேம் கோவிலில் தீர்ப்பளித்தார் முதல்-உடன்படிக்கையின் கடைசி இறைவாக்கினராகிய யோவானின் மூலம் தீர்ப்பை அறிவித்தார்..
இந்த உவமையில் திருமுழுக்கு யோவானே தந்தை -. யோவானே இஸ்ரயேலருக்கு அனுப்பப்பட்ட கடைசி இறைவாக்கினர். ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும் என்று யோவான் இஸ்ரயேலருக்கு அறிவித்தார் (லூக்கா 3-9).
வரிதண்டுவோரும் விலைமகளிருமே மூத்த மகன் – கடவுளைவிட்டு விலகிவாழ்ந்த பாவிகள் யோவானின் அறிவுரையை ஏற்று, மனம்மாறினார்கள். திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் யோவானுடைய வார்த்தையைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர். (லூக்கா 7- 29).
குருக்களும், தலைவர்களும், திருச்சட்ட அறிஞர்களும் இளைய மகன் – கோவிலில் கடவுளைத் தொழுகைசெய்த நேர்மையாளராகிய குருக்களும் தலைவர்களும் யோவானிடம் திருமுழுக்குப் பெறவில்லை. பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள் (லூக்கா 7- 30).
இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?" என்று இயேசு குருக்களிடமும் தலைவர்களிடமும் கேட்டார். இயேசு எதிர்பார்த்தபடியே, தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் மூத்தவரே (வரிதண்டுவோரும் பாவிகளுமே) என்று அவர்கள் பதில் அளித்தார்கள். அவர்கள் கூறியபடியே இயேசு முதல்-உடன்படிக்கையின் மக்களுக்குத் தீர்ப்பளித்தார்.
இயேசுவின் தீர்ப்பு - வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே
இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரயேலில் இருந்த வரிதண்டுவோரும், விலைமகளிரும் இறைவாக்கினர் யோவானிடம் திருமுழுக்குப்பெற்றதால், நிலைவாழ்வில் ஏற்கப்பட்டார்கள்.
இஸ்ரயேல் தலைமை குருக்கள், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள் நிலைவாழ்வை இழந்தார்கள். யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக, அவர்களைப் பார்த்தபின்பும், நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை, அவரை நம்பவுமில்லை.. எனவே,. உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; என்று இயேசு தீர்ப்பளித்தார்.(மத்தேயு 21 43). இதுவே, பழைய-உடன்படிக்கையின் முடிவு.