பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட, படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார். அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார், இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
இயேசு அவரைப் பார்த்து, "சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்" என்றார். அதற்கு அவர், "போதகரே, சொல்லும்" என்றார். அப்பொழுது அவர், "கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார்.
சீமோன் மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்" என்றார். இயேசு அவரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன் இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார். "பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
கடன்பட்ட இருவர்
லூக்கா 7 39-48
தம்மை நேர்மையாளர் என்று நம்புவோர் அனைவரும் தம் பாவங்களை அறியாத வெளிவேடக்காரராகவே இருக்கிறார்கள் என்பது இந்த உவமையில் அறிவிக்கப்படுகிறது. நேர்மையாளரை அல்ல பாவிகளையே மனம்மாற அழைக்க வந்தேன் என்ற பொன்மொழி இங்கு நிறைவேறியது (மத்தேயு 9 13).
இயேசுவை வரவேற்ற இருவர் – இயேசு கலிலேயாவில் தம் நற்செய்தியை அறிவித்தார். பரிசேயர் சிமோன் தம் வீட்டில் இயேசுவுக்கு விருந்தளித்தார். பரிசேயர்கள் தம்மை நேர்மையாளர் என்று நம்பினார்கள். மக்களால் போதகர் என்றும், ரபி மதிக்கப்பட்டார்கள். எனவே, சீமோன் இயேசுவின் கால்களைக் கழுவவில்லை, முத்தமிட்டு வரவேற்கவுமில்லை. தம் வழக்கப்படி இயேசுவிடம் குற்றம் குறைகளைத் தேடினார்.
இயேசு விருந்து உண்ணும்போது, பாவியான பெண் ஒருத்தி இயேசுவின் கால்களைத் தொட்டு பரிமளத் தைலம்பூசி முத்தமிட்டாள். அவள் பாவி என்பதை அறியாமல் அவளுடைய உபசரிப்பை இயேசு ஏற்றுக்கொண்டபடியால், இயேசு இறைவாக்கினர் அல்ல என்று சீமோன் தனக்குள் சொல்லிக்கொண்டார்.
இயேசுவின் புதிய உடன்படிக்கையின் மன்னிப்பு - தம் புதிய உடன்படிக்கையின்படி இயேசு தம்மை வரவேற்ற இந்த இருவரின் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டார். அதை இந்த விடுகதையில் அறிவித்தார்.
இயேசு கூறிய விடுகதை - தலைவரிடம். ஒருவர் 50 தெனாரியமும் மற்றவர் 500 தெனாரியமும் கடன்பட்டிருந்தனர். இருவராலும் கடனை அடைக்கமுடியவில்லை. தலைவர் இரக்கப்பட்டு, அந்த இருவரின் கடனையும் தள்ளுபடி செய்தார். இந்த இருவரில், எவர் தலைவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்? இதுவே விடுகதை. அறிவாளியாகிய சீமோனிடம் இயேசு தீர்ப்பை ஒப்படைத்தார்.
சீமோனின் பதில் – தலைவரிடம் மிகுதியாக (500 தெனாரியம்) கடன்பட்டவரே தலைவரிடம் மிகுதியாக அன்பாயிருப்பான் என்று சீமோன் பதிலளித்தார்.
இயேசுவின் தீர்ப்பு – கடன் என்பது பாவம். தள்ளுபடி என்பது இயேசுவின் மன்னிப்பு. சீமோன் கூறியபடியே தம்மை உபசரித்த இருவரின் பாவங்களையும் இயேசு தம்மீது ஏற்றுக்கொண்டார் இதுவே இயேசுவின் புதிய உடன்படிக்கை.
பாவியான பெண் மிகுதியாக மன்னிக்கப்பட்டாள் – பாவியான அந்தப் பெண் தன் பாவங்கள் அனைத்தையும் (500 தெனாரியம்). அறிந்தாள். வருந்தினாள் இயேசுவின் கால்களைத் தன் கண்ணிரால் கழுவி, அன்புகூர்ந்தார். இயேசு, அவளுடைய பாவம் அனைத்தையும் (500 தெனாரியம்) தம்மீது ஏற்றுக்கொண்டார். அவள் மன்னிப்பின் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
நேர்மையாளராகிய சீமோன் மன்னிப்பை இழந்தார்– தற்பெருமை, வெளிவேடம், குறைகாணுதல், தீர்ப்பளித்தல் போன்ற பல பாவங்கள் சீமோனிடம் இருந்தன. எனவே, சீமோனின் பாவங்களும் மிகுதியே (500 தெனாரியம்). ஆனால், தம் பாவங்கள் எதையுமே அவர் அறியாதபடியால் தம்மை நேர்மையாளர் என்று எண்ணினார். எனவே இயேசுவின் மன்னிப்பை இழந்தார். ஆயினும், அவர் இயேசுவை அறிந்துகொள்ள விரும்பியதாலும், அவருக்கு விருந்தளித்தபடியாலும் அவருடைய பாவங்களில் சிறிதளவு மட்டும் (50 தெனாரியம்) மன்னிக்கப்பட்டது. நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். என்றார் இயேசு (மத்தேயு 7 2). அதன்படி, சீமோன், தம் வாயாலே தமக்குரிய தீர்ப்பை இயேசுவிடம் பெற்றுக்கொண்டார். அவருடைய பாவங்கள் பல மன்னிக்கப்படவில்லை.
பிறரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப்போக்குச் சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள், என்று பவுல் கூறினார். (ரோமர் 2 1). இது வெளிவேடக்கார சீமானின் வாழ்வில் நிறைவேறியது.
சீமோனுக்கு இயேசுவின் அறிவுரை - நமக்கு விருந்தளித்தவரிடம் உள்ள குறைகளை நேருக்கு நேராக அவரிடம் கூறுவதற்கு நாம் தயங்குவோம். ஆனால் இயேசுவோ, சீமோனின் தற்பெருமையை நேரடியாக அவரிடம் அறிவித்தார் சீமோன் தம் கால்களைக் கழுவவேண்டும் என்று இயேசு விரும்பினாரா?. சீமோனிடம் அன்பும் தாழ்மையும் இல்லை என்பதையே இதன்மூலம் சுட்டிக்காட்டினார். தன் பாவங்களை அறிந்து, சீமோன் மனம்மாறினாரா என்பது நற்செய்தியில் கூறப்படவில்லை. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதிமொழிகள் 28 13).