சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரை ஆளுநர் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால், இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்" என்றார்.
மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார். "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளிடம், "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன் எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?" என்றார்.
தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி, இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார்."
இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால், இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். இயேசு யூதேயாவில் மக்களிடம் நற்செய்தியை அறிவிக்கும்போது இந்த உவமை கூறப்பட்டது. அப்போது, கலிலேயரில் சிலர் பலிசெலுத்துகையில் பிலாத்துவின் படைவீரர்களால் கொல்லப்பட்டனர். கோவிலில் கொல்லப்பட்டதால், அவர்களைப் பாவிகள் என்றும், அது கடவுளின் தண்டனை என்றும் யூதர்கள் கலிலேயரைக் குறைசொல்லித் தீர்பளித்தார்கள்.
இறந்த கலிலேயர்களின்மேல் குற்றம் சுமத்தக்கூடாது என்று இயேசு அவர்களுக்கு அறிவுறுத்தினார். எருசலேமிலுள்ள சிலோவாம் கோபுரம் விழுந்து பதினெட்டு யூதர்கள் கொல்லப்பட்டதை இயேசு அவர்களுக்கு நினைவூட்டினார். அவ்வாறே, தமது நற்செய்தியைக் கேட்டும் யூதர்கள் மனம்மாறாவிட்டால், பாவிகளாகச் சாவது உறுதி என்பதை இந்த உவமையில் விளக்குகிறார்.
திராட்சைத் தோட்டம்
அத்தி மரம்
தோட்டக்காரர்
வாழ்வுதரும் தொழிலாளர்
மூன்று வருடம்
இந்த ஆண்டும் விட்டுவையும்
கொத்தி எரு போடுவது
கனி
இயேசுவின் காலத்தில்
இஸ்ரயேலர்
எருசலேமில் வாழ்ந்த யூதர்கள்
இறைவன்
இயேசு
யூதர்களுக்கு இயேசு நற்செய்தி அளித்த காலம்
யூதர்களுக்கு அளிக்கப்பட்டத் தவணைக் காலம்
தீவிர நற்செய்தி
இயேசுவின் இறையாட்சி
இக்காலத்தில்
உலகம்
திருச்சபை
இறைவன்
இயேசு
நமக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்ட காலம்
நமக்கு அளிக்கப்படும் தவணைக் காலம்
தீவிர நற்செய்தி
இயேசுவின் இறையாட்சி
ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். உவமையில் வரும் திராட்சைத் தோட்டக்காரர் இறைவனே. இஸ்ரயேலர்களே திராட்சைத் தோட்டம். எருசலேமில் வாழ்ந்த யூதர்களே இறைவன் நட்டுவைத்த அத்திமரம். அவர்களுக்குத் திருக்கோவிலும், திருச்சட்டங்களும் அளிக்கப்பட்டு மற்றவர்களைவிட மிகுதியாக உரமிடப்பட்டு இறைவனால் நேசிக்கப்பட்டார்கள்.
மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன் எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? இயேசு இறையாட்சியின் நற்செய்தியை மூன்று ஆண்டுகள் எருசலேமில் அறிவித்தார். ஆனால், யூதர்களிடம் இறைவன் தேடிய கனிகளாகிய மனமாற்றம் ஏற்படவில்லை. அவர்கள் திருச்சட்டத்தின் செயல்களில் நம்பிக்கைவைத்து, வெளிவேடக்காரராகவே வாழ்ந்தார்கள்.
இந்த ஆண்டும் இதை விட்டுவையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். இஸ்ரயேலில் இயேசுவின் பணி மூன்று ஆண்டுகள் கடந்தபின்னரும் யூதர்கள் மனம் மாறவில்லை. இறைவனிடம் இயேசு, மேலும் ஒரு ஆண்டு தவணை கேட்கிறார். யூதர்களின் மனம் மாறுவதற்காக, இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமிலும், யூதேயாவின் பிற பகுதிகளலும், தீவிரமாக நற்செய்தியை அளித்தார்கள்.
மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள். இயேசுவின் புதிய உடன்படிக்கையின் நற்செய்தியை எருசலேமில் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக எருசலேம் கோலிலுக்குள் நுழைந்து, அத்தி மரத்தில் கனியைத்தேடி ஏமாற்றம் அடைந்தார். ’எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே! இதோ! உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்’ என்று இயேசு அறிவித்தார். திருக்கோவிலில் இருந்த பரிசேயர், மறைநூல் அறிஞர், யூதர்கள், குருக்களிடம் ’உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும் அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் ’ என்றார். இறையாட்சி அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டது. மரம் வெட்டப்பட்டது. கலிலேயாவில் பலிசெலுத்தும்போது கொல்லப்பட்டவர்ளைப் போலவே, எருசலேமிலிருந்த யூதர்கள் கி.பி.70 ஆண்டில்,உரோமர்களால் கொல்லப்பட்டார்கள்.
இக்காலத்தில்
பிறஇனத்தவராகிய நாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு குறிப்பிட்ட மக்களினத்தாராக இருக்கிறோம். இறைவனின் தோட்டமாகிய உலகில் இயேசுவின் புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட அத்திமரமாக நாம் திருச்சபையில் இருக்கிறோம். இயேசுவின் நற்செய்தி, மூன்று ஆண்டுகளாக அல்ல, அதைவிடப் பலமடங்கு மிகுதியாகவே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. யூதரைப்போல் நாமும் நம்மை மீட்கப்பட்டவர் என்று நினைக்கிறோம். தூரத்திலிருந்து பார்க்கும்போது, நாமும் பசுமையான இலைகளுடன் செழிப்பாகத் தோன்றுகிறோம். இறைவன் நெருங்கிவந்து நம்மையும் உற்றுப்பார்க்கிறார். நம் வாழ்வில் அன்பு, பரிவு, தாழ்மை போன்ற தூயஆவியின் கனிகள் இல்லை. "இன்றும் மரத்தை விட்டுவையும்" என்று நமக்காக இயேசு ஒவ்வொரு நாளும் இறைவனிடம் தவணை கேட்கிறார்.
திருத்தூதர் பவுல், யூதரையும் பிற இனத்தாராகிய நம்மையும் ஒப்பிடுகிறார். "இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா? இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள். தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும் உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால் நீங்களும் தறிக்கப்படுவீர்கள்".
நாம் நற்செய்தியைக் கேட்பவராக மட்டும் இல்லாமல் கைக்கொள்ளுபவராக மாறுவதற்காக, இறைவன் நம்மீது பரிவுள்ளவராக இருக்கிறார். ஆனால், நாம் கனிகொடாமலே வாழ்ந்து, அவருடைய இறையாட்சியை வீணாக்குகிறோம். ஒவ்வொரு நாளும் நமக்காகவே இயேசுவின் தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது என்பதை அறிகிறோமா?