யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பைக் கடைப்பிடிப்பதில் உறுதியுடன் செயல்பட்டார்கள். எனவே, யோவானின் சீடரும், பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, "யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள். பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள் என்றார்.
மேலும் அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார், "எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த ஒட்டு பழைய ஆடையைக் கிழித்துவிடும். கிழிசலும் பெரிதாகும். புதிய துண்டு பழையதோடு பொருந்தாது. அதுபோலப் பழைய தோற்பையில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் புதிய மது தோற்பையை வெடிக்கச் செய்யும், மதுவும் சிந்திப்போகும், தோற்பையும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். அப்போது இரண்டும் வீணாய்ப் போகாது.
மேலும் பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில் "பழையதே நல்லது" என்பது அவர் கருத்து" என்றார்.
புதிய துணி, புதிய மது - இயேசுவின் புதிய உடன்படிக்கை
லூக்கா 5 36-39
இயேசு கலிலேயாவில், தம் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கியபோது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது, மனம்மாறுங்கள் என்று அறிவித்தார். அவர் புதிய உண்மைகளை அதிகாரத்துடன் அறிவித்தபடியால், சிலர் வியப்படைந்தனர், பலர் கோபமடைந்தனர்.
வரிதண்டுபவராகிய மத்தேயு இயேசுவின் சீடரானார். அவர் தம் வீட்டில் இயேசுவுக்கு விருந்தளித்தார். இயேசுவும் அவருடைய சீடர்களும் விருந்துண்பதைக் கண்டு, பரிசேயரும், திருச்சட்ட அறிஞர்களும் எரிச்சல் அடைந்தார்கள். எனென்றால், பரிசேயரின் சீடர்களும், யோவானின் சீடர்களும் வாரத்திற்கு இரண்டுநாள் நோன்பு இருந்தார்கள். மக்கள் அனைவரும் பார்க்கும்படி, முகவாட்டத்துடனும், தலையை சீவாமலும், திருச்சட்டத்தின் சடங்குகளை வெளிப்படையாகச் செய்து, தம்மை நேர்மையாளர் என்று மக்களுக்கு அறிவித்தார்கள்.
எனவே, பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவைப் பார்த்து, உம்முடைய சீடர் உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே ஏன் நோன்பிருப்பதில்லை? என்று குறைகூறினார்கள்.
புதிய உடன்படிக்கையை இயேசு அறிவித்தார் - இயேசு அவர்களை நோக்கி, இது நோன்பின் நேரமல்ல, மகிழ்ச்சியான மணவிருந்தின் நேரம் என்றும் தம்மை மணவாளன் என்றும் அறிவித்தார். இஸ்ரயேலருக்கு அளிக்கப்பட்ட பழைய உடன்படிக்கையை முடிந்துவிட்டது என்பதும் இறையாட்சியின் நற்செய்தியே புதிய உடன்படிக்கை என்பதும் இந்த உவமையில் அறிவிக்கப்படுகிறது..
பழைய உடன்படிக்கையும் புதிய உடன்படிக்கையும் உவமை - எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த ஒட்டு பழைய ஆடையைக் கிழித்துவிடும். கிழிசலும் பெரிதாகும். புதிய துண்டு பழையதோடு பொருந்தாது.
அதுபோலப் பழைய தோற்பையில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் புதிய மது தோற்பையை வெடிக்கச் செய்யும், மதுவும் சிந்திப்போகும், தோற்பையும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். அப்போது இரண்டும் வீணாய்ப் போகாது. மேலும் பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில் "பழையதே நல்லது" என்பது அவர் கருத்து" (லூக்கா 5 36-39)
பழைய ஆடை, பழைய மது என்ன? சீனாய் மலையில் கடவுள் இஸ்ரயேலருக்குத் திருச்சட்டத்தை கொடுத்து முதல் உடன்படிக்கை செய்தார். அது திருமுழுக்கு யோவானோடு முடிவடைந்தது. திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன (மத்தேயு 11 13). எனவே, திருச்சட்டங்களும் இறைவாக்குகளும் பழைய துணி என்றும் பழைய மது என்றும் இயேசு அறிவித்தார். இவ்வாறு, இஸ்ரயேலருடன் கடவுள் செய்த முதல் உடன்படிக்கை, இயேசுவுக்குப்பின், பழைய உடன்படிக்கையாக மாறியது.
புதிய ஆடை புதிய மது என்ன? இறையாட்சியின் நற்செய்தியே புதிய உடன்படிக்கை. அதுவே புதிய ஆடையாகவும், புதிய மதுவாகவும் இருக்கிறது.
புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து, அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; அந்த ஒட்டு பழைய ஆடையை கிழித்துவிடும் - பழைய உடன்படிக்கையின் திருச்சட்டங்களையும், புதிய உடன்படிக்கையின் நற்செய்தியையும் ஒட்டுசேர்த்து, நாம் விரும்பியபடி கைக்கொண்டால், இரண்டுமே பயனற்றுப்போகும்.
புதிய திராட்சை மது, புதிய தோற்பைகளுக்கே ஏற்றது – இயேசுவின் இறையாட்சியைப் பெறவேண்டுமானால், புதிய உடன்படிக்கையின் நற்செய்தியை அறிந்து, மனம்மாறி, புதிய தோற்பையாக மாறவேண்டும். மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என்று இயேசு நிக்கதேமிடம் கூறினார் (யோவான் 3-3).
புதிய மதுவை பழைய தோற்பைகளில் ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்.- தம் பாவங்களை அறியாதவர்களும, மனம் மாறாதவர்களும் இயேசுவின் இறையாட்சியை உள்ளத்தில் ஏற்கமுடியாது.
பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார். ஏனெனில் "பழையதே நல்லது" என்பது அவர் கருத்து - பழக்க வழக்கங்களை விட்டுவிட எவரும் விரும்புவதில்லை. இஸ்ரயேலில் இருந்த குருக்களும், தலைவர்களும், பரிசேயர்களும் பழைய மதுவாகிய திருச்சட்டங்களின் சடங்குகளைக் கைக்கொள்ளவே விரும்பினார்கள். இயேசுவிடம் குறைகளைlத் தேடிப்பிடித்து, தம்மை இயேசுவைவிட நேர்மையாளர் என்று அறிவித்தார்கள். எனவே, நிலைவாழ்வை இழந்தார்கள். உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என்று இயேசு அறிவித்தார் (மத்தேயு 21 43).
கடவுளுக்கு ஏற்புடையவர்களாகுமாறு இஸ்ரயேல் மக்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்த போதிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை. இதன் காரணம் என்ன? அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் (திருச்சட்டத்தின்) செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே தடைக்கல்லின் மேல் தடுக்கி விழுந்தனர். என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார் (உரோமர் 9 31-32).
புதிய மதுவையும் பழைய மதுவையும் கலந்து குடிக்கும் இக்கால மக்கள் – பழைய உடன்படிக்கை இஸ்ரயேலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. அது யோவானோடு முடிவடைந்தது. ஆனால், இக்காலத்தில் பிறஇனத்தாராகிய பலர். முடிந்துபோன பழைய உடன்படிக்கையின் பழைய மதுவை விரும்பிக் குடிக்கிறார்கள். பழைய ஆடையில் புதிய துண்டை ஒட்டுகிறார்கள். பரிசேயரைப்போல், பழையதே நல்லது என்றும் அறிவிக்கிறார்கள். எனென்றால். இயேசுவின் புதிய மதுவாகிய புதிய உடன்படிக்கை அந்த வெளிவேடக்காரர்களை கிழித்துவிடுகிறது.