வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்.
"ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார். அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.
பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார். எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், "என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே. நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன். உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்" என்று சொல்லிக்கொண்டார்.
உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்" என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, "முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான், மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான் மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, "இதெல்லாம் என்ன?" என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், "உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்" என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், "பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பிவந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே" என்றார்.
அதற்குத் தந்தை, "மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான், மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான் மீண்டும் கிடைத்துள்ளான்" என்றார்.
காணாமற்போன மகன் உவமை
லூக்கா 15 11-32
கெட்ட குமாரன் என்றும் காணாமற்போன மகன் என்றும் அறியப்படும் இந்த உவமையில் ஒரு தந்தையும் இரண்டு மகனும் உள்ளார்கள். அவர்கள் யார்? என்பது 2000 ஆண்டுகளாக அறியப்படவில்லை. அந்த உண்மை இங்கு அறிவிக்கப்படுகிறது.
தந்தையும் இரண்டு மகனும் யார்? வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார். (லூக்கா 15 1-3).
இந்த முன்னுரையில் பாவிகளுடன் இயேசு உணவருந்துவதை பரிசேயர் குறைகூறினார்கள். அதைப்போலவே, இந்த உவமையில், இளையமகனுடன் தந்தை உணவருந்துவதை மூத்த மகன் குறைகூறினான். எனவே, உவமையில் கூறப்படும் தந்தையையும் அவருடைய இரண்டு மகன்களும் யார்? என்பதை நாம் எளிதில் அறியமுடியும்.
· பாவிகளுடன் உணவருந்தும் இயேசுவே தந்தை.
· இயேசுவுடன் உணவருந்தும் பாவிகளே இளைய மகன்.
· இயேசுவை குறைகூறி முணுமுணுத்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மூத்த மகன்.
எனவே, தந்தையையும் இளைய மகனையும் மூத்த மகனையும் இத்தோடு மறந்துவிடுங்கள். இந்த உவமை ஒரு கதை அல்ல. சரித்திரம். இஸ்ரயேலில் வாழ்ந்த பாவிகளையும், பரிசேயரையும் இயேசுவையும் குறித்துக் கூறப்பட்ட உண்மைச் சம்பவம். ஆனால், இந்த உண்மையை அறியாமல், தந்தை சொத்தைப் பிரித்துக்கொடுத்தார் என்றும், மகன் பன்றியை மேய்தான் என்றும் நாம் நம்புகிறோம். இந்தக் கட்டுரையில் உண்மை அறிவிக்கப்படுகிறது.
Parable of the Prodigal Son
பகுதி 1
தந்தையின் சொத்து – கடவுளே இஸ்ரயேலர்களின் தந்தை. திருச்சட்டமே தந்தையாகிய இறைவனின் சொத்து. சீனாய் மலையில் முதல் உடன்படிக்கை செய்து, தம் சொத்தாகிய திருச்சட்டங்களைத் தம் மக்களாகிய இஸ்ரயேலரிடம் கடவுள் ஒப்படைத்தார். அதை அவர்கள் பரம்பரையாகத் தம் வழிமரபினர் கைக்கொள்ளும்படி ஒப்புவித்தார்கள்.
பாவிகள் (இளைய மகன்) – இயேசு பிறப்பதற்கு முன்பே பாவிகளின் சரித்திரம் தொடங்குகிறது. இஸ்ரயேலில் வாழ்ந்த பாவிகள், தங்கள் தந்தையின் சொத்தாகிய திருச்சட்டங்களை கைக்கொள்ள விரும்பவில்லை. அப்போது, அவர்களின் தந்தையாகிய யேகோவா தேவன் விண்ணில் இருந்தபடியால், திருச்சட்டங்களிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக்கொண்டார்கள். தொலைநாடு என்பது இறைவனைவிட்டு விலகி பாவத்தில் வாழ்வதாகும். பாவிகள் தாம் விரும்பியபடி உல்லாசமாக வாழ்ந்து, தங்கள் தந்தையின் சொத்தாகிய திருச்சட்டங்களைப் பாழாக்கினார்கள்.
நாடு முழுவதும் ஏற்பட்ட கொடிய பஞ்சம் - கிமு 63 ஆண்டில் இஸ்ரயேல் நாடு உரோமரால் கைப்பற்றப்பட்டது. சீசருக்கும், ஏரோதுக்கும், ஆலயத்திற்கும் மிகுதியாக வரி கட்டவேண்டிய சூழ்நிலை உருவாகியது. இஸ்ரயேலில் இருந்த பாவிகள் உல்லாசமாக வாழமுடியாமல் தவித்தார்கள். பணத்திற்காக ஏங்கினார்கள்.
எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர், அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். பணத்திற்கு ஆசைப்பட்டு, பாவிகள் (இளைய மகன்) தங்கள் எதிரியாகிய உரோமரிடம் கூலியாளாக ஒட்டிக்கொண்டார்கள். உரோமர்கள் அவர்களை இஸ்ரயேல் மக்களிடம் வரி வசூலிக்கும்படி அனுப்பினார்கள். இவ்வாறு, இஸ்ரயேலில் இருந்த பாவிகள் வரிதண்டுவோராக மாறினார்கள். தங்கள் எதிரியாகிய உரோமருக்காக, தங்கள் சொந்த இஸ்ரயேல் மக்களிடம் வரி வசூலித்தார்கள். நாட்டுப்பற்று இல்லாத இந்த வேலை பன்றியை மேய்க்கும் அருவருப்பான தொழில் என்று இஸ்ரயேலர்கள் வெறுத்தார்கள். எனவே, வரிதண்டுவோருடன் உண்பதும் உறவாடுவதும் இஸ்ரயேலில் தடைசெய்யப்பட்டது. (எனவே, யூத இளைஞன் பன்றியை மேய்க்கும் காட்சியை இன்றுடன் மறந்துவிடுங்கள்)
இளையமகன் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்- இங்கு வயிற்றுப்பசி கூறப்படவில்லை. வயிற்றை நிரப்பும் பேராசை கூறப்படுகிறது. உரோமருக்காக வசூலித்த வரிப்பணத்தின்மீது வரிதண்டுவோருக்கு பேராசை உண்டாகியது. எனவே, தேவையான வரியைவிடக் கூடுதலாக வசூல்செய்தார்கள். இவ்வாறு பன்றியின் உணவாகிய இலஞ்சப் பணத்தால் தம் வயிற்றை நிரப்பினார்கள். செல்வர்களாக ஆனார்கள். மகிழ்ச்சியான உலகவாழ்வுக்காகத் தம் சொந்த இஸ்ரயேல் மக்களை ஏமாற்றினார்கள். எனவே, வரிதண்டுவோரை மக்கள் அனைவரும் வெறுத்தார்கள். வரிதண்டுவோரின் தலைவராக இருந்த சக்கேயுவை மக்கள் அனைவரும் பாவி என்றே பெயரிட்டு அழைத்தார்கள்.
இளையமகன் அறிவு தெளிந்தவராய், "என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே" என்றான் – வயிற்றுப் பசியால் இளையமகன் அறிவுதெளிந்தான் என்று இயேசு கூறவில்லை. முதலில் அவன் அறிவு தெளிந்தான். அதன்பின்னரே தான் செத்துக்கொண்டிருப்பதை அவன் அறிந்தான் என்றே இயேசு கூறியுள்ளார். அதுபோலவே, வரிதண்டுவோர் செல்வர்களாக இருந்தார்கள். அறிவு தெளிந்தபின்பே, பாவத்தில் செத்துக்கொண்டிருப்பதை அறிந்தார்கள். அவர்கள் உயிர்பிழைப்பதற்கு, தந்தையாகிய இயேசுவின் அழியாத உணவு (நற்செய்தி) தேவைப்பட்டது.
வரிதண்டுவோரின் மனமாற்றம் கிபி 29 ஆண்டில் தொடங்கியது. உவமையில் கூறப்படும் தந்தையின் கூலியாள்கள் என்பது இயேசுவின் சீடர்களாகும். அவர்களின் மூலமாக இயேசுவின் நற்செய்தியை பாவிகள் அறிந்தார்கள். அப்போது இயேசு தம் நற்செய்தியை கலிலேயாவில் அறிவித்தார். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார் என்று இயேசு அறிவித்தார் (யோவான் 6 27). வரிதண்டுவோர் தங்கள் பாவத்தை உணர்ந்தார்கள். செத்துக்கொண்டிருப்பதை அறிந்தார்கள். தங்களிடமுள்ள பன்றியின் உணவு (இலஞ்சப் பணம்) தம்மை நரகத்தில் சேர்க்கும் என்று உணர்ந்தார்கள். இயேசுவின் சீடராக மாறுவதற்கு விரும்பினார்கள்.
அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்- பாவியாகிய சக்கேயு, நாசரேத் இயேசு என்ற ஒரு மனிதரைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரைத் தேடி, மரத்தில் ஏறினார். தம் தந்தையாகிய கடவுளை அவர் இயேசுவிடம் கண்டார். உடனே தம் பாவங்களை அறிக்கையிட்டு மனம் மாறினார். ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன் எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால், நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்றார். (லூக்கா 19- 8).
தொலையில் வந்துகொண்டிருந்தபோதே தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். சொத்தைப் பிரிக்கும்போது இஸ்ரயேலர்களின் தந்தை அமைதியாக இருந்தார். ஏனென்றால், அப்போது, அவர்களின் தந்தையாகிய தேவன் விண்ணில் இருந்தார். ஆனால், இப்போது, கிபி 29 ஆண்டில், இஸ்ரயேலரின் கடவுள் ஒரு மனிதராக, நாசரேத் இயேசுவாக இருந்தார். இந்த உவமையில், மனம் மாறிய பாவியை ஒடிவந்து கட்டித் தழுவி வரவேற்பவர் கடவுளாகிய இயேசுவே.
(இஸ்ரயேலருக்கு திருச்சட்டத்தை அளித்த கடவுளே இப்போது நற்செய்தியை அறிவிக்கும் இயேசுவாக வந்தார் என்பது இங்கு அறிவிக்கப்படுகிறது. இந்த இடத்தில் இஸ்ரயேலருக்கு அளிக்கப்பட்ட பழைய உடன்படிக்கை முடிவுபெறுகிறது. இயேசுவின் புதிய உடன்படிக்கை தொடங்குகிறது)
பாவத்தில் செத்துக்கொண்டிருந்த வரிதண்டுவோரும் பாவிகளும் தம் பாவங்களை அறிந்தபடியால், தொலைந்துபோன ஒரு ஆடாக இருந்தார்கள். இயேசுவின் சுவிசேஷம் என்ற சத்தம் கேட்டு மனம் மாறினார்கள். இயேசு அவர்களை கட்டித் தழுவி முத்தமிட்டு, அவர்களின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக்கொண்டார். அவர்களைத் தம் தோள்மிது ஏற்றி நித்திய ஜீவனுக்கு வழிநடத்தினார்.
(இஸ்ரயேலரின் கடவுளே இயேசுவாக உலகில் வந்தார் என்பது இந்த உவமையில் அறிவிக்கப்படுகிறது)
'முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள் கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். மனம்மாறிய வரிதண்டுவோரை இயேசு நிலைவாழ்வில் ஏற்றுக்கொண்டார். கொழுத்த கன்றின் விருந்து என்று மூன்றுமுறை உவமையில் கூறப்படுகிறது. இது பாவமன்னிப்பின் புதிய உடன்படிக்கை. சீனாய் மலையில் பழைய உடன்படிக்கையில் காளையின் இரத்தம் இஸ்ரயேலரின்மேல் தெளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் புதிய உடன்படிக்கையில் மனிதராக வந்த இயேசு தம் சொந்த இரத்தத்தை தெளித்தார்.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் (யோவான் 6-51). "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை" (லூக்கா 22-20). திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. (யோவான் 1-17)
வரிதண்டுவோரும் பாவிகளும் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டார்கள். தாம் காணாமற்போனதையும், பாவத்தில் செத்துக்கொண்டிருப்பதையும் அறிந்து மனம் மாறினார்கள். எனவே, இயேசுவின் மன்னிப்பைப் பெற்றார்கள். இவ்வாறு அவர்கள் இறந்துபோயிருந்தார்கள் மீண்டும் உயிர்பெற்றார்கள். காணாமற்போயிருந்தார்கள் மீண்டும் காணப்பட்டார்கள்.
பாவிகளுடன் உண்பது ஏன்? என்று பரிசேயர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு இயேசு தம் பதிலை உவமையின் முதல் பகுதியில் தெரிவித்தார்.
பகுதி II
உவமையின் இரண்டாம் பகுதியில் தம்மை நேர்மையாளர் என்று எண்ணியதால் வெளிவேடக்காரப் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் (மூத்த மகன்) இயேசுவின் மன்னிப்பை இழந்தார் என்பது கூறப்பட்டது.
அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். ஆடல் பாடல்களைக் கேட்டு அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். பரிசேயர்களும் திருச்சட்ட அறிஞர்களும் தந்தையின் மூத்த மகன். அவர்கள் தம் தந்தையின் வீடாகிய எருசலேம் திருக்கோவிலில் இருந்தார்கள்.
ஆடல் பாடல்கள் என்பது, பாவிகளின் மனமாற்றத்தால் இயேசுவுக்கும் பரலோகத்தில் உள்ள தூதருக்கும் உண்டான மகிழ்ச்சியை அறிவிக்கிறது. ஆனால் பரிசேயர்களோ எரிச்சல் அடைந்தார்கள். இயேசு ஓய்வுநாளை மீறினார் என்று முதலில் குறைகூறினார்கள். இப்போது, யூத சமுதாயத்தால் விலக்கப்பட்ட பாவிகளுடன் இயேசு மகிழ்ச்சியாக விருந்து உண்பதை அறிந்து கோபமடைந்தார்கள்.
(இந்த இடத்தில், இயேசு கூறிய உவமையும், இயேசுவின் வாழ்க்கையும் ஒன்றாகச் சேர்ந்தன. உவமையில், இளைய மகனுடன் விருந்துண்ட தந்தையை மூத்த மகன் குறைகூறிக் கண்டித்தான். அதுபோலவே யூதேயாவில் பாவிகளுடன் உணவு உண்ட இயேசுவை பரிசேயர் குறைகூறிக் கண்டித்தார்கள்.)
உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. தந்தையின் சொத்தாகிய திருச்சட்டங்கள் பரிசேயர்களின் கையில் இருந்தன.. காணிக்கை, ஒய்வுநாள் ஆசரிப்பு, உணவுக்கட்டுப்பாடு, சடங்குகள் போன்றவையே அவர்களின் நெறிமுறைகள். மற்றவர்களிடம் குறைகளைக் கண்டுபிடித்து, தம்மை நேர்மையாளர் என்று அறிவிப்பதே அவர்களின் பக்தி. விண்ணரசும், பாராட்டும் விருந்தும் திருச்சட்டத்தைக் கைக்கொள்ளும் தமக்கே கொடுக்கப்படுவேண்டும் என்று அவர்கள் அறிவித்தார்கள். பாவிகளுடன் விருந்துண்ட இயேசுவை குறைகூறினார்கள்..
தந்தை, மூத்த மகனிடம், நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்றார், மூத்த மகனாகிய பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் மனம்மாறவேண்டும் என்றே இயேசு விரும்பினார். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்: அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.5குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்: மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். (ரோமர் 9 4-5). ஆயினும், தம் அருகில் தாழ்மையான மனிதராக வந்த தங்களுடைய கடவுளை, வெளிவேடக்காரப் பரிசேயரால் அறியமுடியவில்லை.
இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும் எனெனில், உன் தம்பி இறந்து போயிருந்தான், மீண்டும் உயிர்பெற்றுள்ளான் காணாமற்போயிருந்தான் மீண்டும் கிடைத்துள்ளான்.- இந்த உவமை கூறும் உண்மை இதுவே. இயேசுவோடு விண்ணுலகில் விருந்துண்டு மகிழ்வோர் யார்? என்பது இங்கு அறிவிக்கப்படுகிறது. நேர்மையாளரா? அல்ல, எனெனில் நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர் (உரோமர் 3-10,23). எனவே, இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு, தாம் பாவத்தில் மரித்திருப்பதையும், காணாமற்போனதையும் அறிந்து மனம்மாறும் பாவிகளே தந்தையாகிய இயேசுவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறார்கள். எனவே இயேசு நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார் (மத்தேயு 9-13)
ஆனால், மூத்த மகனாகிய பரிசேயரும் மறைநூல் அறிஞரும் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்து, தம்மை திருச்சட்டத்தின் பாதுகாவலர் என்றும் மனம்மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர் என்றும் அறிவித்தார்கள். தாம் பாவத்தில் மரித்திருப்பதையோ, காணாமற்போனதையோ அறியவில்லை. எனெனில் அவர்களுடைய பாவம் மறைவாக இருந்தது.. தம் தந்தையின் வீடாகிய எருசலேம் கோவிலில் இருந்துகொண்டே, தம் தந்தையின் சொத்தாகிய திருச்சட்டத்தை மூத்த மகனும் பாழாக்கினான். அந்த விவரத்தை மத்தேயு 23 அதிகாரத்தில் ஐயோ உங்களுக்குக் கேடு என்று இயேசு அறிவித்தார்.
உறங்குபவரை எழுப்பலாம் ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவரை எழுப்புவது கடினமே. அவ்வாறே, பாவிகள் மனம்மாறக் கூடும், ஆனால், தம்மை நேர்மையாளர் என்று நம்புவோர் மனம்மாறுவது கடினம். எனவே, பரிசேயர்களின் வெளிவேடத்தை எருசலேம் கோவிலில் நேரடியாக அவர்களுக்கு அறிவித்தபோது, அவர்கள் மனம்மாறுவதற்குப் பதிலாக, இயேசுவின்மீது கோபம் கொண்டார்கள். உண்மையை அறிவித்த இயேசுவை கொலைசெய்தார்கள். இவ்வாறு, இயேசுவின் அருட்கொடையாகிய புதிய உடன்படிக்கையின் பாவமன்னிப்பை இழந்தார்கள்.