இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கலிலேயக் கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்
"இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
1. அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன. வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.
2. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, ஈரமில்லாததால் அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.
3. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன. கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன. அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.
4. ஆனால் இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன."
இவ்வாறு சொன்னபின், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று உரக்கக் கூறினார்.
விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: விதை, இறைவார்த்தை விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்.
வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்பார்கள், .கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் சாத்தான் எடுத்துவிடுகிறான்.
பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் முதிர்ச்சி அடையாதிருந்து பயன் அளிக்க மாட்டார்கள்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் சீரிய நல் உள்ளத்தோடு இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து, அதை ஏற்றுக் கொண்டு, மன உறுதியுடன் பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.’
இந்த உவமையை கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறினார். அவர் தனியாக இருக்கையில் அவருடைய சீடரும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் உவமையின் விளக்கத்தை இயேசுவிடம் கேட்டு அறிந்தார்கள்.
விதை
விதைப்பவர்
விளைநிலம்
விளைச்சல்
இறைவார்த்தையாகிய நற்செய்தி
நற்செய்தியை சொல்லாலும் செயலாலும் அறிவிப்பவர்
திருச்சபையில் நற்செய்தியை கேட்கும் மக்களாகிய நம் உள்ளம்
இறையாட்சி
விதைப்பவர். எது விதைக்கப்படுகிறது? இயேசுவே நிலைவாழ்வு என்ற விதையாக இருக்கிறார். விதை மண்ணில் விழுந்து செத்தால்தான் அதிக பலனை அளிக்கும். நாம் நிலைவாழ்வைப் பெறுவதற்காக இயேசுவின் வாழ்வு நம் உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. இயேசு அளித்த நற்செய்தியே இறையாட்சியின் விதையாக இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, இயேசுவும், சீடர்களும் மக்கள் மனதில் நற்செய்தியை விதைத்தார்கள். அந்த நற்செய்தி, மலைப் பொழிவில், நமக்காகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நற்செய்தியாளர்களின் நூலைப் படித்து, இயேசுவின் நற்செய்தியை நம் உள்ளத்திலும் மற்றவர்களின் உள்ளத்திலும் நாமும் விதைக்க முடியும். இயேசுவின் கட்டளையைக் கைக்கொள்ளும் எவரும், தம் வார்த்தையாலும், தம் வாழ்வாலும், மக்கள் உள்ளத்தில் நற்செய்தியை விதைக்கிறார்கள்.
இயேசுவின் வார்த்தை நம் வாழ்வில் செயல்படுகிறதா? இயேசு இந்த உவமையின் விளக்கத்தை மக்களுக்கு அறிவிக்கவில்லை. தம் சீடருக்கு மட்டுமே தெரிவித்தார். எனெனில் அவர்களும் விதைப்பவர்களே. எனவே, நல்ல விதையாக இருந்தாலும், மக்களின் காதுகளும், உள்ளமும் விரும்பினால்தான் செடி வளரும் என்பதை அவர்களுக்கு அறிவித்தார். உழவர் விதைகளை வயலில் அனைத்து இடங்களிலும் விதைப்பதைப்போல், இயேசுவின் நற்செய்தி, வயிலாகிய நம் ஒவ்வொருவரின் உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. ஒரு முறையல்ல, பலமுறை இயேசுவின் வார்த்தையை திருக்கோவிலில் நாம் கேட்கிறோம். ஆனால், எத்தனை முறை விதைக்கப்பட்டாலும் நம்மில் பலரின் வாழ்வில் இயேசுவின் வார்த்தை பலனளிப்பதில்லை. எனெனில் நாம் கண்ணிருந்தும் காண்பதில்லை, காதிருந்தும் கேட்பதில்லை. நம் உள்ளம் எப்படிப்பட்டது என்பதை இயேசுவே இந்த உவமையில் அறிவிக்கிறார்.
வழியோரம். வழியோரம் என்பது விதை முளைக்கமுடியாத கடினமான இடம். நம் உள்ளம் வழிபாட்டுச் சடங்குகளாலோ அல்லது உலக வாழ்வின் இச்சைகளாலோ நிரம்பியிருக்கிறது. நற்செய்தியை நாம் நாள்தோறும் படித்தாலும், கேட்டாலும், இறைவேண்டல் செய்தாலும் அதன் கருத்தை அறிவதில்லை. நாம் கேட்டுக்கொண்டே இருப்போம். நாம் கேட்ட நற்செய்தி நம் உள்ளத்திலோ நம் வாழ்விலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. நாம் நம்பி மீட்புப் பெறாதவாறு சாத்தான் உலக விதைகளை விதைத்துவிட்டு, நற்செய்தியை நம் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறான். இறைவார்த்தையை ஒரு காதில் கேட்டு மறுகாதின் வழியே விட்டுவிட்டு, உலக மக்களைப்போல் வாழ்ந்த காரணத்தால், தீர்ப்புநாளில், நம் உள்ளமே நம்மை வாட்டும்.
பாறை நிலம். பாறைப் பகுதியில் மேற்புறத்தில் சிறிது மண் இருப்பதால் விதை முளைக்கிறது. நம்மில் சிலர் நற்செய்தியைக் கேட்டவுடன், மகிழ்ச்சியுடன் செயல்படத் தொடங்குகிறோம். ஆனால், நற்செய்தியின்படி வாழும்போது, வேதனையும், இன்னலும் நெருக்கடியும் உண்டாகிறது. நாம் நற்செய்தியின் உண்மையை முழுமையாக அறியாதபடியால், நம்மிடம் நம்பிக்கை ஆழமாக இல்லை. எனவே, துன்பத்தை எதிர்கொள்ளும் வலிமை நம்மிடம் இல்லை. இயேசுவின் நற்செய்தி உலக துன்பத்தால் காய்ந்துவிடுகிறது. எனவே, நற்செய்தியை கைக்கொள்ளுவதை விட்டுவிட்டு, நம் பழைய வாழ்வைத் தொடர்கிறோம். இறையாட்சியை அறிந்தபின்னும், அதைக் கைவிட்டபடியால், நம் தவறு உள்ளத்தில் நிலைத்திருந்து தீர்ப்புநாளில் நம்மை வாட்டும்.
முள்ளுள்ள இடம். நம்மில் சிலர் நற்செய்தியை விருப்பத்துடன் கேட்கிறோம். நம் உள்ளத்தில் இறையாட்சி வளரத் தொடங்குகிறது. ஆனால் நம் வாழ்வில் செல்வ மாயை, வாழ்வின் இன்பங்கள், தற்பெருமை, பேராசை போன்றவைகளை நாம் விட்டுவிட விரும்புவதில்லை. இரண்டுக்கும் நாம் இடம் கொடுக்கிறோம். வெளிவேடக்காரராக நாம் வாழ்கிறோம். இறைவார்த்தையைக் கேட்பதால், நாம் மீட்பு பெற்றவர் என்றும் நிலைவாழ்வில் நிச்சயமாக இயேசுவுடன் இடம்பெறுவோம் என்றும் பெருமை கொள்கிறோம். சபையின் ஆராதனைகளிலும், கூட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கு பெறுகிறோம். ஆனால், நம் வாழ்வில் அன்பு, பரிவு தாழ்மை போன்ற தூயஆவியின் நற்செயல்கள் இருப்பதில்லை. கதிர் இல்லாமல் இலைமட்டுமே இருக்கும் செடியைப் போலவும், கனியில்லாத அத்தியைப்போலவும் நம் வாழ்வும் தொடர்கிறது. பணஆசை மிக்க பரிசேயரைப் போலவே வெளிவேடக்காரராக வாழ்வதை நாம் அறிவதில்லை. நம்பிக்கையோடு நிலைவாழ்வை எதிர்பார்க்கும் நமக்குத் தீர்ப்புநாளில் ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும்.
நல்ல நிலம். விதை முளைத்து வளர்வதற்கு ஏற்ற நல்ல நிலமாக நம்மில் சிலர் இருக்கிறோம். உலக வாழ்வின் நோக்கம் இறையாட்சியே என்பதை உணர்கிறோம். உலகின் தற்பெருமை, பேராசை, குறைகூறுதல் போன்ற களைகள் நம் வாழ்வில் வளராதபடி காத்துக்கொள்கிறோம். மிகவும் சிறியவர்களான எளியோருக்கும், ஊனமுற்றோருக்கும், நீதியின்பொருட்டு துன்புறுத்தப்படுவோருக்கும் உதவிசெய்து அன்பு, பரிவு, தாழ்மை போன்ற விண்ணுலகச் செல்வங்களைச் சேர்த்து, 100, 60, 30 என்ற அளவில் இறையாட்சியின் விளைச்சலைக் கொடுக்கிறோம். உலகில் நாம் அன்புள்ளவர்களாகவும், நிலைவாழ்வில் இறைவனின் பிள்ளைகளாயும் என்றும் மகிழ்ச்சியோடு வாழ்வோம்.
இந்த உவமை நமக்கு அறிவிப்பது என்ன? ’கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்’ என்று இயேசு நமக்குத்தான் கூறுகிறார். ’கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப்படாத செவி’ என்று வள்ளுவரும் கூறியுள்ளார். திருச்சபையில் நற்செய்தியை நாம் அனைவரும் கேட்டவர்களாக இருந்தாலும், நம்மில் சிலருடைய உள்ளத்தில் மட்டுமே வார்த்தை வளர்ந்து இறையாட்சியாக நிறைவு பெறுகிறது. பலருடைய உள்ளத்தில் இயேசுவின் இறையாட்சி முளைக்க முடியாமலும், வளரமுடியாமலும், கருகிய செடியாகவும், முள்ளால் நெருக்குண்டு கதிர் இல்லா செடியாகவும் இருக்கிறது. இதை நாம் அறியாதவர்களாகவே கோவிலுக்குச் சென்று வருகிறோம். நாம் வெளிவேடக்காரராக வாழ்வதை அறியவேண்டும். மலைப்பொழிவில் இயேசு அறிவித்த கட்டளைகளை அறிந்து, வாழ்வில் கைக்கொள்ளவேண்டும். நம் பாவங்களை அறிந்து, மனம் மாறி, அன்பு, பரிவு, தாழ்மை போன்ற இறையாட்சியின் செல்வங்களைச் சேர்க்க வேண்டும்.