இயேசு தம் சீடருக்குக் கூறியது "செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, "உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது" என்று அவரிடம் கூறினார்.
அந்த வீட்டுப் பொறுப்பாளர், "நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே. மண்வெட்டவோ என்னால் இயலாது, இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது, பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்" என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், "நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு குடம் எண்ணெய்" என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், "இதோ உம் கடன் சீட்டு உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்" என்றார். பின்பு அடுத்தவரிடம், "நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு மூட்டை கோதுமை" என்றார். அவர், "இதோ, உம் கடன் சீட்டு எண்பது என்று எழுதும்" என்றார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் "முன்மதியோடு" செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்.
இயேசு கூறினார் "இவ்வாறு, ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்."
"மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?"
நேர்மையற்ற பொறுப்பாளர்
லூக்கா 16 1-9
உலக மக்களின் பணஆசை - இந்த உவமையில் தலைவர், பொறுப்பாளர், கடன்பட்டவர் என்று கூறப்படும் மூவரும் உலக மக்களே. பணமே அவர்களுடைய வாழ்வின் குறிக்கோள். உலகில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே மூவரும் தங்கள் புத்தியையும் அறிவையும் பயன்படுத்தினார்கள். இந்த மூவரில் பொறுப்பாளரே மிகுந்த முன்மதியுடையவர். தலைவரின் சொத்துக்கள் அவருடைய பொறுப்பில் இருந்தபடியால், எவருக்கும் தெரியாமல் அதைத் திருடி, மகிழ்ச்சியாக வாழ்ந்தார். இதைக் கேள்விப்பட்ட தலைவர், தம் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காக, உடனே அவரை வேலையிலிருந்து நீக்கினார். வரவு- செல்வு கணக்கை ஒப்படைத்துவிட்டு உடனே வெளியேறும்படி ஆணையிட்டார். முதிர்வயதுடைய பொறுப்பாளர் உயிர்வாழ வழியில்லை. எனவே, தம் எதிர்கால வாழ்வுக்காக, கடைசி நாளிலும் தலைவரின் சொத்துக்களைத் திருடுவதற்கு முன்மதியோடு செயல்பட்டார்.
பொறுப்பாளரின் முன்மதி – தலைவரிடம் கடன்வாங்கியவர்களை இரகசியமாக அழைத்தார், அவர்கள் தலைவருக்குச் செலுத்தவேண்டிய கடனை பாதியாகக் குறைத்து, பதிவேட்டில் பதிவுசெய்தார். தாங்கள் வாங்கிய கடன் சரிபாதியாக குறைக்கப்பட்டதால், கடன்பட்டவர்கள் அனைவரும் பொறுப்பாளரின் நண்பர்களானார்கள். பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொறுப்பாளர் உயிர்வாழ்வதற்கு உதவிசெய்தார்கள்.
இயேசுவின் கட்டளை - இந்த நேர்மையற்ற பொறுப்பாளரை முன்மதியுடைவர் என்று இயேசு அறிவித்தார். உலக மக்களுக்கு இருக்கும் முன்மதி, ஒளியின் மக்களாகிய தம் சீடருக்கு இல்லையே என்று இயேசு கவலைப்பட்டார். இந்த நேர்மையற்ற பொறுப்பாளரைப் போலவே தம் சீடரும் முன்மதியுடன் செயல்படும்படி கட்டளையிட்டார். அதன் விவரம் இங்கு கூறப்படுகிறது.
தலைவர் யார்? அவருடைய சொத்து எது? உவமையில் கூறப்படும் தலைவர் கடவுளே. உலகமும் அதன் செல்வம் அனைத்தும் கடவுளின் சொத்து.
பொறுப்பாளர் யார்? தலைவராகிய கடவுள் தம் சொத்தாகிய உலகத்தை மனிதர்களின் பொறுப்பில் ஒப்படைத்தார். ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார் (தொடக்க நூல்15 2). எனவே, உலகில் செல்வராகவும், அறிஞராகவும், வலியவராகவும் வாழ்வோர் அனைவரும் கடவுளின் சொத்துக்குப் பொறுப்பாளர்.
தலைவரின் உடைமைகளைப் பொறுப்பாளர் பாழாக்கினார். கடவுளின் தோட்டமாகிய உலகைப் பண்படுத்துவதற்குப் பதிலாக, பொறுப்பாளராகிய செல்வர்கள் கடவுளை மறந்து, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடவுளின் சொத்தை தம் சுயநலத்தாலும், பேராசையாலும் சீரழித்தார். என் வயல், என் உடல், என் வீடு, என் அறிவு என்று எண்ணி, அவருக்கு முற்றிலும் சொந்தமாக இல்லாத செல்வங்களையும் தனக்குரியதே என்று நம்பினார். அனைத்தும் தமக்கே சேமித்தார்.
இவ்வாறு அறிவிலியாக இருந்த ஒரு செல்வர் தன் வயலில் விளைந்த தானியங்கள் அனைத்தையும் தனக்கே உரியது என்று சேமித்தான். அன்றிரவே அவன் தன் வாழ்வை இழந்தான் (லூக்கா 12 20), நான் கட்டிய மகா பாபிலோன் அல்லவா என்று தற்பெருமை கொண்டதால், நெபுகாத்நேச்சார் மிருகத்தைப்போல் புல்லை மேய்ந்தான் (தானியேல் 4 33). எனவே மனிதர்களாகிய நாம், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட செல்வங்களை கடவுளின் சொத்து என்று அறியவேண்டும். கடவுள் விரும்பியபடியே அதைப் பயன்படுத்தவேண்டும்.
உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது. இறைவன் ஒப்படைத்த செல்வங்கள் அனைத்தையும் தன்னலத்துடன், தனக்காகமட்டும் பயன்படுத்திப் பாழாக்கியபடியால். அந்த நேர்மையற்ற செல்வருக்கு (பொறுப்பாளருக்கு) மரணம் அறிவிக்கப்பட்டது. அதுவே இயேசுவின் தீர்ப்புநாள். அவர் கடவுளிடமிருந்து பெற்ற நன்மைகளின் கணக்கை ஒப்படைக்க ஒருநாள் மட்டும் தவணை கொடுக்கப்பட்டது. நாம் உயிர்வாழும் ஒவ்வொருநாளும் கடவுள் நமக்களித்த தவணை.
நான் என்ன செய்வேன்? மண்வெட்டவோ என்னால் இயலாது, இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. ஒரே நாளில் பொறுப்பாளரின் நிலை தலைகீழாக மாறியது. அவரிடம் இறைவனின் சொத்துக்கள் மிகுதியாக இருந்தாலும் அனைத்தையும் தன்னலத்துடன் பயன்படுத்தினார். விண்ணுலகில் சொத்து எதையும் சேமிக்கவில்லை. நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்த செல்வர் விண்ணுலகில் சேமிக்காதபடியால், மரணத்திற்குப்பின் இலாசரிடம் ஒரு சொட்டு நீர் பிச்சைகேட்டாலும் கொடுக்கப்படவில்லை (லூக்கா 16 19)
மரணத்திற்குப்பின் எவரும் மனம்மாறமுடியாது. இயேசுவின் மன்னிப்பை பிச்சையாகப் பெறவும்முடியாது. விண்ணுலகில் உழைத்துப் பிழைக்க வழியில்லை, பிச்சை கேட்பதற்கு விண்ணுலகில் அவருக்கு நண்பர் இல்லை.
தம் கடைசிநாளில், பொறுப்பாளருக்குத் தம் அருகிலுள்ள கடன்பட்டவர்கள் நினைவுக்கு வந்தார்கள்.
கடன்பட்டவர் யார்? உலகில் வாழும் அனைவரும் பொறுப்பாளராகவோ, செல்வர்களாகவோ இருப்பதில்லை. உலகில் பசியோடும், நோயோடும், இருப்பிடம் இல்லாமலும், ஏழைகளாக, உடல் ஊனமுற்றவர்களாக, பார்வையற்றவர்களாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோராக மனிதர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பிறரை நம்பியே வாழ்வதால் கடன்பட்டவர்கள் என்று உவமையில் கூறப்படுகிறார்கள். பூமி உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும் (ஆதியாகமம் 3 17)
Parable of Dishonest Manager
பொறுப்பாளர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். "இதோ உம் கடன் சீட்டு உட்கார்ந்து நூறு குடம் எண்ணெய் என்பதை ஐம்பது என்று உடனே எழுதும் என்றார். செல்வர், தன் பாவத்தை அறிந்தார். மனம் மாறினார். தன் செல்வமும் திறமைகளும் தலைவராகிய கடவுளுக்குரியவை என்று உணர்ந்தார். தனக்குத் தவணையாகக் கொடுக்கப்பட்ட கடைசிநாளை முன்மதியுடன் பயன்படுத்தினார்.
கடவுள் தம் பொறுப்பில் ஒப்படைத்த செல்வத்தால், தம் கடைசிநாளில், தம் அருகில் வாழும் கடன்பட்டவர்களுக்கு அவர் உதவிசெய்தார் பசியோடும், நோயோடும், இருப்பிடம் இல்லாமலும், ஏழைகளாக, உடல் ஊனமுற்றவர்களாக, பார்வையற்றவர்களாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்போருக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். உலகில் அவர்கள்படும் துன்பத்தைக் குறைத்தார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால் தலைவர் அவரைப் பாராட்டினார். தலைவராகிய இயேசு பொறுப்பாளரை முன்மதியுடைவர் என்று பாராட்டினார். தீர்ப்புநாளில் இயேசு அவரை நிலைவாழ்வுக்கு வரவேற்றார் நான் பசியாயிருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள். மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 25 34-40)
இயேசு தம் சீடரிடம் கூறியது, நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள் அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். இந்த பொறுப்பாளரைப்போலவே, தம் சீடர்களும் முன்மதியுடன் நண்பர்களைப் பெறவேண்டும் என்று இயேசு கட்டளையிட்டார்.
நேர்மையற்ற செல்வம் என்பது, தவறான முறையில் சேர்த்த செல்வமல்ல. உலகச் செல்வத்தின் நிலையற்ற தன்மையை அறிவிக்கிறது., உலகச் செல்வம் அழியக்கூடியது, அது தானியமாக இருந்தால் பூச்சியால் அழிக்கப்பட்டுவிடும். திருடப்பட்டால், உடனே திருடனுக்குச் சொந்தமாகிவிடும். நாம் இறந்துவிட்டால் நம்மைவிட்டு நிலையாக நீங்கிவிடும். எனவே இந்த நேர்மையற்ற உலகச் செல்வத்தை நம்பமுடியாது.
ஆனால், உலகச் செல்வத்தாலும், திறமைகளாலும் நல்ல சமாரியனைப்போல் நாம் பிறருக்கு உதவிசெய்யும்போது, அழியக்கூடிய உலகச்செல்வம் அழியாத விண்ணுலகச் செல்வமாகிறது. கடவுளின் செல்வம், நமக்குரிய செல்வமாகிறது. தீர்ப்புநாளில் நமக்கு நற்சாட்சிகூறும் நண்பர்களைத் தேடிக்கொள்கிறோம்.
Parable of Dishonest Manager
உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே. (நீதிமொழிகள் 3-27) அற்றார் அழிபசி தீர்த்தல், அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி, என்றும் தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்றும் வள்ளுவரும் அறிவிக்கிறார்.