நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு நல்லது. உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும். வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை. கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
இயேசு மலைப்பொழிவில் தம் சீடரிடமும், திரளாயிருந்த மக்களிடமும் இந்த உவமையைச் சொன்னார். இயேசு தம்மை உலகத்தின் ஒளி என்று கூறினார். இந்த உவமையில் தம் சீடரையும், நற்செய்தியைக் கேட்பவர்களையும் உவர்ப்புள்ளவர்களாகவும், ஒளியாகவும், மலைமேல் இருக்கும் நகராகவும் இருக்கும்படி இயேசு அறிவுறுத்துகிறார்.
உப்பு
உவர்ப்பு
உவர்ப்பற்ற உப்பு
இறையாட்சியின் நற்செயல்களை வெளிப்படுத்தும் சீடர்கள்
தூய ஆவியின் கனிகளாகிய அன்பு, பரிவு, பொறுமை, தன்னடக்கம்
நற்செயல்கள் இல்லாத வெளிவேடக்காரர்
இயேசு தம் சீடர்களை உலகிற்கு உப்பாக இருங்கள் என்று கூறுகிறார். உவர்ப்பற்ற பொருள்களையும் உவர்ப்புள்ளதாகவும் உண்ணக்கூடியதாகவும் உப்பு மாற்றுகிறது. கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. இயேசுவின் சீடராயிருப்போர் அன்பு, பரிவு, பொறுமை, தாழ்மை போன்ற இறையாட்சியின் பண்புகளை உடையவர்களாக வாழவேண்டும். அப்போது நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மனமாற்றம் அடைந்து உவர்ப்புள்ளவர்களாக மாறுகிறார்கள். உவர்ப்புள்ளவர்களே பேறுபேற்றோர் ஆவர். நாம் உவர்ப்புள்ளவர்களாகவும், இயேசுவின் சீடராகவும் இருக்கிறோமா?
ஆனால், உலகில் தன்னலத்தோடு வாழ்பவர்கள் வெளிவேடக்காரர்களாகவும் உவர்ப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களால் உலகிற்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் உலகில் வாழ்வது வீண் என்று இயேசு அறிவித்தார். உவர்ப்பற்ற உப்பு வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் என்றும் எச்சரிக்கிறார். அவர்களுடைய உலக வாழ்வு வீணாக இருந்தபடியால், தீர்ப்புநாளில் அழிவுக்கு ஆளாவார்கள்.
மலைமேல் இருக்கும் நகர்
தண்டின்மேல் வைக்கப்பட்ட விளக்கு
மக்களுக்கு முன்மாதிரியான வாழ்வு
மக்களுக்கு வழிகாட்டும் வாழ்வு
இயேசுதம்மைஉலகின் ஒளி என்று அறிவித்தார். அருளும் உண்மையும் இயேசுகிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அவரிடம் வாழ்வு இருந்தது, அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அவருடைய சீடராகிய நாமும் அவருடைய வார்த்தையின்படி வாழும்போது ஒளி வீசுகிறோம். தன்னலமும், பெருமையும், வெறுப்பும் நிறைந்த உலகில், அன்பு, பொறுமை, பரிவு, தன்னடக்கம் போன்ற தூயஆவியின் கனிகளை வெளிப்படுத்தும் ஒளியாக நம் வாழ்வு அமையவேண்டும். மக்களின் உள்ளத்தில் கோபம், பொறாமை, பேராசை, தற்பெருமை போன்ற இருளை நீக்கி அமைதி, இரக்கம், பொறுமை போன்ற ஒளியை ஏற்றவேண்டும்.
நாம் இயேசுவை நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறோம். மலைமேல் இருக்கும் நகரைப்போல் நம் வாழ்வு, நம்மைச் சுற்றியுள்ளோருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். சுயநலத்துடன் வாழ்வோர் தமக்காகவே வாழ்கிறார்கள்.