கலிலேயா
பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?“ எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது "ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.
உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, "என்னைப் பொறுத்தருள்க, எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, "நீ பட்ட கடனைத் திருப்பித் தா" எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, "என்னைப் பொறுத்தருள்க, நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.
அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, "பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல, நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.
மன்னிக்காத பணியாளர்
மத்தேயு 18 21- 35
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்திருப்பதுபோல, எங்கள் குற்றங்களையும் மன்னியும்” என்று நாம் தினமும் இயேசுவிடம் வேண்டுதல் செய்கிறோம். அதன்படி, மற்றவர் நமக்கு எதிராகச் செய்த குற்றத்தை நாம் மன்னிக்கிறோமா? அவ்வாறு மன்னிக்காதவர்கள், பலமணிநேரம் கோவிலில் வேண்டுதல் செய்தாலும், இயேசுவின் புதிய-உடன்படிக்கையின் மன்னிப்பை பெறமுடியாது என்பதையே இந்த உவமை அறிவிக்கிறது.
மன்னிக்காத பணியாளர் உவமை – தலைவர் ஒருவர், தம்மிடம் 10,000 தாலந்து. கடன்பட்டவர்மீது இரக்கம் கொண்டு, அவருடைய கடன் அனைத்தையும் தள்ளுபடிசெய்தார். ஆனால், அந்தப் பணியாளரோ, தன்னிடம் 100 தெனாரியம் மட்டுமே கடன்பட்ட தம் உடன்பணியாளர் மீது இரக்கம் கொள்ளாமல், அவரைச் சிறையில் அடைத்தார். தலைவர் இதை அறிந்தவுடன் சினமடைந்தார். தாம் தள்ளுபடி செய்த 10,000 தாலந்தை திருப்பிச் செலுத்தும்வரை முதல் பணியாளரை வதைப்போரிடம் ஒப்படைத்தார். இவ்வாறு இந்த உவமை சோகத்தில் முடிந்தது (மத்தேயு 18 21- 35)
தலைவர் யார்? பணியாளர் யார்? இந்த உவமையில் கூறப்படும் தலைவர் கடவுளாகிய இயேசுவே. மக்களாகிய நாம் அனைவரும் தலைவராகிய இயேசுவின் பணியாளர்கள்.
பணியாளராகிய நாம் அனைவரும் கடவுளுக்கு எதிராக செய்யும் பாவம் மிகுதி, (10,000 தாலந்து ) -.எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர் (உரோமர் 3 23). எனவே, நாம் அனைவரும் அறிந்தும் அறியாமலும் இறைவனுக்கு எதிராகப் பாவம் பல செய்கிறோம். தன்னலம், தற்பெருமை, வெளிவேடம், குறைகூறுதல், தீர்ப்பளித்தல், பொய், சோம்பல், பேராசை, நேர்மையற்ற வாழ்வு போன்ற பாவங்கள் பல நம் அனைவரின் வாழ்விலும் இருக்கின்றன. கடவுளுக்கு எதிராக நாம் செய்த இப்பாவங்களைக் கடவுளைத் தவிர வேறு எவராலும் மன்னிக்க இயலாது. எனவே, இதுவே கடவுளிடம் நாம் பட்ட பெரிய கடன் (10000 தாலந்து).
கடவுளுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை இயேசு மன்னித்துவிட்டார் - பழைய உடன்படிக்கையில் ஆடுகளையும் காளைகளையும் இஸ்ரயேலர்கள் தங்கள் பாவங்களுக்காகப் பலியிட்டார்கள். புதிய உடன்படிக்கையில், உலகின் பாவங்களை சுமந்து தீர்க்கும் ஆட்டுக்குட்டியாக இயேசு வந்து,. நம் பாவங்கள் அனைத்தையும் தம்மீது ஏற்றுக்கொண்டார். எனவே, நாம் செய்த பாவங்களை அறிந்து அறிக்கை செய்யும்போது, அனைத்தும் (10000 தாலந்து) மன்னிக்கப்பட்டுவிட்டது.
நாம் ஒருவருக்கொருவர் எதிராகச் செய்யும் பாவங்கள் சிறிது. (100 தெனாரியம்) – நாம் கடவுளுக்கு எதிராக மட்டுமல்ல, நம் அருகில் வாழும் மனிதர்களுக்கு எதிராகவும் பாவம் பல செய்கிறோம். சினம், சண்டை, வழக்கு, வன்முறை, ஏமாற்றுதல் தன்னலம், திருட்டு, உதவி செய்யாமை போன்றவை மனிதருக்கு எதிராக மனிதர் செய்யும் சில பாவங்களாகும். நாம் முயற்சிசெய்தால், இப்பாவங்கள் அனைத்தையும் நம்மால் அறியமுடியும், நாமே ஒருவருக்கொருவர் மன்னிக்கவும் முடியும். எனவே, இப்பாவங்கள் சிறிது (100 தெனாரியம்) என்று உவமையில் கூறப்படுகிறது.
ஆனால், அடுத்தவருக்கு எதிராக நாம் செய்த இப்பாவங்களை நாம் அறியாமல், நம்மை நேர்மையாளர் என்று நம்புகிறோம். ஆனால், அடுத்தவர் நமக்குச் செய்த குற்றங்களை நாம் மறப்பதுமில்லை, மன்னிப்பதுமில்லை. சில சமயங்களில் பழிக்குப் பழி வாங்குகிறோம்.
தீர்ப்பு நாள் - உலகின் முடிவில் இயேசுவின் தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது தம் அருகிலுள்ள மனிதர்களின் சிறு குற்றங்களை (100 தெனாரியம்) மன்னிக்காதவர்கள் இயேசுவின் அளவில்லாத மன்னிப்பை (10,000 தாலந்து) இழப்பார்கள். நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். என்றார் இயேசு (மத்தேயு 7 2). எனவே, உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்பதே இந்த உவமையில் இயேசு கூறும் தீர்ப்பு (மத்தேயு 18 35). .நமக்குரிய தீரப்பை நாமே நமக்கு அளிக்கிறோம்.
இந்த உவமை சோகத்தில் முடிந்தாலும், இயேசுவின் அளவில்லா மன்னிப்பைப் பெறுவதற்குரிய எளிய வழி இந்த உவமையில் கூறப்பட்டுள்ளது.
இயேசுவின் புதிய உடன்படிக்கையின் அளவில்லா மன்னிப்பு – உலகமுடிவில் கடவுளின் மன்னிப்பை பெறவேண்டுமானால், முதலில், நம் கண்எதிரே நம் அருகில் வாழும் மனிதர்கள் நமக்கு எதிராகச் செய்யும் குற்றங்களை நாம் மன்னிக்க வேண்டும். நல்ல சமாரியனைப்போல், அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். அதுவே தீர்ப்புநாளில் நம்மை காப்பாற்றும். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இயேசு மன்னிப்பார். இயேசுவின் அளவில்லா மன்னிப்பைப்பெற இதுவே வழி. இதுவே இயேசுவின் புதிய உடன்படிக்கை.
"நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதொ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய், முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு காணிக்கையை செலுத்துங்கள்" என்றார் இயேசு. (மத்தேயு 5 24).
நம் அருகிலிருப்போரை எழுபது தடவை ஏழுமுறை மன்னிக்கவேண்டும். மன்னிப்புக்கு அளவில்லை என்பதையே இதன் கருத்து. அவ்வாறே, இயேசுவின் புதிய உடன்படிக்கையின் மன்னிப்புக்கும் அளவில்லை.