எரிகோ
இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள்.
அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்.
உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, "நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்" என்று சொன்னார்.
அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, "இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை" என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார்.
பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.
முதலாம் பணியாளர் வந்து, "ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்" என்றார்.
அதற்கு அவர் அவரிடம், "நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்" என்றார்.
இரண்டாம் பணியாளர் வந்து, "ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்" என்றார். அவர், "எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்" என்று அவரிடமும் சொன்னார்.
வேறொருவர் வந்து, "ஐயா, இதோ உமது மினா, ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன், நீர் வைக்காததை எடுக்கிறவர், நீர் விதைக்காததை அறுக்கிறவர்" என்றார்.
அதற்கு அவர் அவரிடம், "பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன், வைக்காததை எடுக்கிறவன், விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக்கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே" என்றார்.
பின்பு அருகில் நின்றவர்களிடம், "அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்" என்றார். அதற்கு அவர்கள், "ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே" என்றார்கள்.
அவரோ, "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதாரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். மேலும் அவர், "நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்" என்று சொன்னார்."
மினா நாணய உவமை
லூக்கா 19 11-27
இந்த உவமை யாருக்கு கூறப்பட்டது?
எரிகோவிலிருந்து எருசலேமுக்கு இதுவே இயேசுவின் கடைசிப் பயணம். எருசலேமில் இயேசு மெசியாவாகத் தம் ஆட்சியைத் தொடங்குவார் என்று சீடர்கள் எண்ணினார்கள்., அதை அறிந்த இயேசு தம் மரணத்தை இந்த உவமையில் அறிவித்தார். இறையாட்சியின் நற்செய்தியை தம் சீடரிடம் ஒப்படைத்தார்.
எனவே, இயேசுவின் நற்செய்தியை சீடர்கள், குருக்கள், போதகர், ஊழியக்காரர், சபைத்தலைவர் ஆகியோர் இன்றுவரை மக்களுக்கு அறிவிக்கிறார்கள்.. அவர்களில் ("அர்ப்பணம்) உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும், இல்லாதாரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்ற பொன்மொழி இங்கு விளக்கப்படுகிறது., தாலந்து உவமையிலும் இதே கருத்து அறிவிக்கப்பட்டது.
உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். விண்ணிலிருந்து இறங்கிவந்த இயேசுவே உயர்குடிமகன். அவருடைய பணி உலகில் முடிவுபெற்றது. எனவே, எருசலேமில் அவருக்கு அளிக்கப்படும் மரணத்தை ஏற்றுக்கொள்ளப் புறப்பட்டார். மறுபடியும் விண்ணிலிருந்து அரசராகத் திரும்பி வருவேன் என்று அறிவித்தார்.
தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை கொடுத்து, 'நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார். பணியாளர் அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் ஒரு மினா கொடுக்கப்பட்டது. எனவே, மினா என்பது, இயேசுவின் நற்செய்தியே. எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.24 ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். (உரோமர் 3 24)
பத்துபேர் என்பது மக்கள் அல்ல. இயேசுவின் சீடர்களும், அவர்களுக்குப்பின் வந்த குருக்கள், போதகர், ஊழியக்காரர், சபைத்தலைவர் ஆகியோரே இயேசுவின் பணியாளர்கள். இயேசுவின் நற்செய்தியை அறிவித்து,. இறையாட்சியை மக்களிடம் வளர்ப்பதே அவர்கள் செய்யவேண்டிய வாணிகம்.
அவருடைய குடிமக்களோ, 'இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை' என்று சொல்லித் தூது அனுப்பினர். இயேசுவின் குடிமக்களாகிய இஸ்ரயேலர் இயேசு உயிரோடிருக்கும்போதும் அவரை மேசியாவாக நம்பவில்லை. இயேசு பரலோகம் சென்றபின்னரும், பலர் இயேசுவின் சுவிசேஷத்தை ஏற்கவில்லை. அவருடைய சீடர்களை கொலைசெய்தார்கள். இவ்வாறு, தங்கள் எதிர்ப்பை அறிவித்தார்கள்.
இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். இரண்டாம் வருகையில் இயேசு தீர்ப்பளிக்கும் அரசராகத் திரும்பிவருவார். அவர் வரும்போது நடக்கப்போவது இந்த உவமையில் அறிவிக்கப்படுகிறது,
தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர்களைக் கூப்பிட்டார். இயேசு தம் நற்செய்தியை ஒப்படைத்த சீடர்களையும், குருக்களையும், போதகர்களையும், ஊழியக்காரனையும் அழைத்தார்.
முதலாம், இரண்டாம் பணியாளர்கள் வந்து, உமது மினாவைக் கொண்டு பத்து மினா, ஐந்து மினா சேர்த்துள்ளேன் என்றார்கள் - இயேசுவின் பணியாளராகிய சீடர்களும், குருக்களும், போதகரும், ஊழியக்காரரும் தங்கள் திறமைக்கேற்ப, இயேசுவின். புதிய உடன்படிக்கையின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். இறையாட்சியை இஸ்ரயேலில் மட்டுமல்ல பிற நாடுகளிலுள்ள பிறஇனத்து மக்களுக்கும் அறிவித்தார்கள்.
நன்று, நல்ல பணியாளரே, பத்து, ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும். உலகில் இயேசுவின் இறையாட்சியை வளர்த்தவர்கள் தங்களின் உழைப்பிற்கு ஏற்றபடி தீர்ப்புநாளில் இயேசுவின் பாராட்டைப் பெற்றார்கள். முயற்சி உள்ளவருக்குக் கொடுக்கப்படும், என்ற பொன்மொழி நிறைவேறியது.
வேறொருவர் வந்து, "ஐயா, இதோ உமது மினா, ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன் என்றார். நற்செய்தியை அறிவித்த பத்து பணியாளர்களில் ஒரு பொல்லாத பணியாளரும் இருந்தார். அவர் இயேசுவின் நற்செய்தி இவருடைய கையில் இருந்தாலும், அதை அவர் அறிந்துகொள்ளவில்லை, மக்களுக்கும் அறிவிக்க விரும்பவில்லை. மாறாக, முடிந்துபோன பழைய உடன்படிக்கையின் உலக நன்மைகளை, மக்களுக்கு அறிவித்தார். தீர்ப்புநாளில், இயேசுவின் புதியஉடன்படிக்கையின் நற்செய்தியை அவர் இயேசுவிடமே திருப்பிக்கொடுத்தார். தன்னிடம் குற்றம் இல்லை என்று அறிவித்தார்.
நீர் வைக்காததை எடுக்கிறவர், நீர் விதைக்காததை அறுக்கிறவர். இயேசு இஸ்ரயேலில் மட்டுமே நற்செய்தியை விதைத்தார். ஆனால், தம் பணியாளரிடம், நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்று இயேசு கூறியபடியால், நீர் விதைக்காத இடத்திலும் அறுவடைசெய்பவர் என்று குறைகூறினார் (மத்தேயு 28 19).
பொல்லாத பணியாளனே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். ஏன் என் பணத்தை வட்டிக்கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே' – இயேசுவின் புதிய உடன்படிக்கையின் நற்செய்தியை இந்தப் பணியாளர் தானும் அறியவில்லை. பிறமக்களும் அறிவிக்கவில்லை. இயேசுவின் பெயரில் மக்களைத் தவறாக வழிநடத்தியபடியால் அவரைப் பொல்லாத பணியாளர் என்று இயேசு அறிவித்தார்.
ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை என்றார் இயேசு (மத்தேயு 23-13).
இவ்வாறு போதகர்கள் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளானார்கள். எனவே, யாக்கோபு, என் சகோதர சகோதரிகளே, உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம். போதகர்களாகிய நாங்கள் மிகக் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளாக வேண்டுமென உங்களுக்குத் தெரியும் என்றார் (யாக்கோபு 3-1).
அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்துமினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள். இல்லாதாரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். இயேசுவின் நற்செய்தியை தவறாக போதித்த பணியாளர்கள் இயேசுவின் புதியஉடன்படிக்கையின் மன்னிப்பை இழந்தார்கள். இல்லாதாரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்ற பொன்மொழி நிறைவேறியது.
நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை என்முன் படுகொலை செய்யுங்கள். இஸ்ரயேலர்கள் தங்கள் அரசனாகிய இயேசுவைக் கொலைசெய்தபடியாலும், சீசரே எங்கள் அரசர் என்று கூறியபடியாலும், கடவுள் அவர்களுடன் செய்த முதல்-உடன்படிக்கையை நீக்கப்பட்டது. அதுவே அவர்களுக்கு அளிக்கப்பட்டப் படுகொலை.