ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு, அவர்களுக்குக் கூறிய அறிவுரை.
ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடத்தில் வந்து, "இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்" என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், "நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்" எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.
தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்று கூறினார்.
பெரிய விருந்து உவமை
இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், "இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்றார். இயேசு அவரிடம் கூறியது.
"ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே, அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, "வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது" என்று சொன்னார்.
அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், "வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன் அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்" என்றார். வேறொருவர் "நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன் அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்" என்றார். "எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று ஆகையால் என்னால் வர முடியாது" என்றார் மற்றொருவர்.
பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளிடம், "நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்" என்றார்.
பின்பு பணியாளர், "தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று இன்னும் இடமிருக்கிறது" என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, "நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.
பெரிய விருந்து
லுக்கா 14 15-24
பெரிய விருந்து உவமையும், திருமண விருந்து (திருமண ஆடை) உவமையும், ஒன்றுபோல் தோன்றினாலும் கருத்தில் வேறுபடுகின்றன.
இயேசுவின் முதல் வருகையே பெரிய விருந்து என்று கூறப்படுகிறது. அப்போது கடவுள் மனிதராக வந்து தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு புதிய உடன்படிக்கையின் பாவமன்னிப்பையும், தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவித்தார். அப்போது, பழைய உடன்படிக்கையை கைக்கொண்ட இஸ்ரயேலர் பலர் நிலைவாழ்வை இழந்தார்கள். அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.(யோவான் 1 11).
இயேசுவின் இரண்டாம் வருகையே திருமணவிருந்து என்று கூறப்படுகிறது. தீர்ப்புநாளில் பிறஇனத்தார் சிலர் நிலைவாழ்வை இழப்பார்கள் என்பது கூறப்படுகிறது.. அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்ற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
பெரிய விருந்து உவமையைஎப்போது ஏன் கூறப்பட்டது? - இயேசு, தம் நற்செய்தியை யூதேயாவில் அறிவிக்கும்போது, பரிசேயர் தலைவர் ஒருவர் இயேசுவுக்கு விருந்தளித்தார். அங்கிருந்த பரிசேயர்கள் தீவிரமாக திருச்சட்டத்தின் சடங்குகளைச் செய்து, தம்மை நேர்மையாளர் என்றும், திருச்சட்டத்தின் பாதுகாவலர் என்றும் விண்ணரசில் தமக்கே முதலிடம் என்றும் பெருமை கொண்டார்கள். அதுமட்டுமல்ல, உணவுப் பந்தி.யிலும் முதல் இடத்தை விரும்பினார்கள். அவர்கள் நிலைவாழ்வில் இடம்பெறுவதற்கு, தாழ்மையும், இரக்கமும் தேவை என்பதை இயேசு இந்த உவமையில் அறிவித்தார்..
தலைவர் ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். – பழைய உடன்படிக்கையின் திருச்சட்டங்களும் இறைவாக்குகளும் இஸ்ரயேலருக்கு அளிக்கப்பட்ட முதல் விருந்து. ஆனால், அது திருமுழுக்கு யோவானோடு முடிந்தது. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு (மத்தேயு 11 13).
இயேசுவின் புதிய உடன்படிக்கையின் இறையாட்சியே இரண்டாம் விருந்து. இதுவே பெரிய விருந்து. இந்தப் பெரிய விருந்தை இஸ்ரயேலருக்கு அளிப்பதற்காக கடவுளாகிய இயேசுவே விண்ணிலிருந்து இறங்கிவந்தார். நற்செய்தியை அறிவிக்கவும், மனிதர்களின் பாவங்களை ஏற்றுக்கொள்ளவும் மனிதனாக இறங்கி வந்தார். இந்தப் புதிய உடன்படிக்கைக்கு முதலில் அழைக்கப்பட்டவர்கள் இஸ்ரயேலரே.
விருந்து நேரம் வரவே, அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, "வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது" என்று சொன்னார். -. மலைப் பொழிவில் இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்றினார். இறையாட்சியை இஸ்ரயேலருக்கு அறிவித்தார். நிலைவாழ்வு என்ற பெரிய விருந்துக்கு இஸ்ரயேலரை இயேசுவும் அவருடைய சீடர்களும் அழைத்தார்கள்.
அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.- குருக்களும், பரிசேயர்களும் யூதர்களும் கோவிலில் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்து, தம்மை நேர்மையாளர் என்று நம்பினார்கள். இயேசுவின்மீது குறைகளைக் கூறினார்கள். தம்மை இயேசுவைவிட நேர்மையாளர் என்று அறிவித்தார்கள். இயேசு ஓய்வுநாளைக் கைக்கொள்ளாதவர், பெருந்தீனிக்காரன் குடிகாரன், கைகளைக் கழுவாமல் பாவிகளுடன் விருந்து உண்பவர். கடவுளை பழிப்பவர், பெயல்செபூல் மூலம் பிசாசுகளைத் துரத்துபவர் என்று குறைகூறினார்கள்.. இவைகளே அவர்கள் கூறிய சாக்குப்போக்கு. இயேசுவின் புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின் தாழ்மையில் தடுக்கிவிழுந்தார்கள்.
வீட்டு உரிமையாளர் சினமுற்றார். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை – இஸ்ரயேலருக்காகவே மெசியாவாக வந்த இயேசுவை குருக்களும், தலைவர்களும், பரிசேயர்களும் யூதர்களும் புறக்கணித்தார்கள். எனவே, இயேசு தாம் இறப்பதற்குமுன், திருக்கோவிலில் தம் தீர்ப்பை அவர்களுக்கு அறிவித்தார். உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார். அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்றார் (மத்தேயு 21:43)
ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும். – இஸ்ரயேலில் இரந்த வரிதண்டுவோரும் விலைமகளிரும் பாவிகளும், ஊனமுற்றோரும், குருடரும், ஏழைகளும் இயேசுவின் பாவ மன்னிப்பைப் பெற்று, இறையாட்சியில் ஏற்கப்பட்டார்கள். இயேசு அவர்களுடன் இறையாட்சியின் விருந்தை உண்டு மகிழ்ந்தார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்ற பொன்மொழி நிறைவேறியது.
வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். - இயேசுவின் மரணத்திற்குப்பின், பேதுரு, பவுல் போன்ற திருத்தூதர்களின் முயற்சியால், புதிய உடன்படிக்கையின் விருந்துக்கு, பிற இனத்தார் வற்புறுத்திக் கூட்டிவரப்பட்டார்கள். கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். என்று இயேசு கூறியது நிறைவேறியது (மத்தேயு 8 11,12)
அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்ற பொன்மொழி இஸ்ரயேலருக்கு மட்டுமல்ல, கடைசியாக அழைக்கப்பட்ட பிறஇனத்தாருக்கும் இயேசுவின் எச்சரிக்கையாக இருக்கிறது. எனவே, இந்த உவமையில் இயேசு பரிசேயருக்குக் கூறிய அறிவுரையை பிறஇனத்தாரும் செயல்படுத்தவேண்டும். "நீர் உணவு அளிக்கும்போது உம் நண்பர்களையோ, செல்வம்-படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். மாறாக, ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும். அப்போது நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்" (லுக்கா 14 13-14)