எருசலேம் கோவில்
இயேசு எருசலேம் கோவிலில் பரிசேயரையும் மறைநூல் அறிஞர்களையும் குருக்களையும் மக்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது, "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், "நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார். வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.
அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
பின்னர் தம் பணியாளர்களிடம், "திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்றார்.
அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில்கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.
அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, "தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்றுகேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.
அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், "அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.
திருமண ஆடை
மத்தேயு 22 1-14
திருமண ஆடை (திருமண விருந்து) உவமையும், பெரிய விருந்து உவமையும், ஒன்றுபோல் தோன்றினாலும், கருத்தில் வேறுபடுகின்றன. இயேசுவின் புதிய-உடன்படிக்கையின் நற்செய்தியே பெரிய விருந்து. இந்தப் பெரிய விருந்துக்கு இஸ்ரயேலரை நேரடியாக அழைப்பதற்காக, கடவுளாகிய இயேசுவே வானத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.(யோவான் 1 11).
திருமண ஆடை, திருமணவிருந்து. என்றும் கூறப்படும் உவமை இயேசுவின் தீர்ப்புநாளை அறிவிக்கிறது.. அப்போது, பிறஇனத்தார் சிலர் நிலைவாழ்வை இழப்பார்கள். இந்த இரண்டு உவமையிலும் அழைப்புப் பெற்றவர் பலர், ஆனால், தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர் என்ற எச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது
அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். கடவுளே அரசர். நிலைவாழ்வே திருமண விருந்து, மனிதராக வந்த இயேசுவே மணமகன்.
அழைக்கப் பெற்றவர்களோ வர விரும்பவில்லை. முதல் உடன்படிக்கையின் மக்களாகிய இஸ்ரயேலரே நிலைவாழ்வுக்கு அழைக்கப்பட்வர்கள். இயேசுவின் வருகைக்கு ஆயத்தம்செய்ய திருமுழுக்கு யோவன் போன்ற தீர்க்கத்தரிசிகள் வந்தார்கள் ஆனால், இஸ்ரயேலர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை
மீண்டும் வேறு பணியாளரிடம் "காளைகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது திருமணத்திற்கு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார். இஸ்ரயேலர்கள் நீண்டநாள் எதிர்பார்த்த மெசியாவாகிய இயேசுவே நேரில் வந்து அழைத்தார். காளைகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் என்பது, இயேசுவின் நற்செய்தியால் கிடைக்கும் நிலைவாழ்வும், இயேசுவின் மரணத்தால் கிடைக்கும் பாவமன்னிப்பும் ஆகும். இயேசுவின் பன்னிரு சிடரும், எழுபது சீடரும் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேலரைத் தேடி அலைந்தார்கள். இஸ்ரயேலருக்கு இதுவே கடைசி அழைப்பு.
அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார். வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். இஸ்ரயேலர் மெசியாவாகிய இயேசுவை, கடவுளைப் பழிப்பவன், பாவிகளோடு உண்பவன், ஓய்வுநாளைக் கைக்கொள்ளாதவன், பெயல்செபூல், பெருந்தீனிக்காரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்று பலவாறு குறைகூறி, அவருடைய புதிய உடன்படிக்கையை புறக்கணித்தார்கள்.
இயேசு எருசலேம் கோவிலில் நுழைந்து "உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும். அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர்" என்ற அறிவித்தார். எனவே, மெசியாவாகிய இயேசுவை யூதர்கள் கொலை செய்தார்கள்.
அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். இயேசு கடைசியாக எருசலேமுக்கு வருகையில், ".ஒரு காலம் வரும். அப்போது உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை" என்றார் (லூக்கா 19 43,44).. அவ்வாறே, கி.பி 70ம் ஆண்டில், எருசலேம் பிறஇனத்தாரால் முற்றுகையிடப்பட்டு, ஏராளமானோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
பணியாளர்கள் வெளியே சென்று வழியில்கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். இயேசுவின் சீடர்கள் அறிவித்த நற்செய்தியால், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பிறஇனத்தவர் நிலைவாழ்வுக்கு அழைக்கப்பட்டார்கள். நம்பிக்கையோடு நல்லோரும், தீயோருமாக திருச்சபையில் கலந்திருக்கிறார்கள்.
இனிமேல் நடக்கப்போவதை இந்த உவமையில் இயேசு அறிவித்தார்.
திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது - நிரம்பியது என்ற வார்த்தை உலக முடிவையும், இயேசுவின் இரண்டாம் வருகையையும், தீர்ப்புநாளையும் அறிவிக்கிறது.
திருமண ஆடை – இயேசுவின் புதிய உடன்படிக்கையின் நற்செய்தியே திருமண ஆடை.. இயேசு தம் முதல் வருகையில் இஸ்ரயேலருக்குத் தம் திருமண ஆடையை அளிப்பதற்காக வந்தார். அவர்கள் பழைய உடன்படிக்கையின் பழைய ஆடையை விரும்பி.யபடியால், இயேசுவின் திருமண ஆடையை இழந்தார்கள்.
பிறஇனத்தாராகிய மக்களுக்கு பழைய உடன்படிக்கையும் கிடையாது, பழைய ஆடையும் கிடையாது. இயேசுவின் புதிய உடன்படிக்கையான நற்செய்தி என்ற திருமண ஆடை மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், பிறஇனத்தார் சிலர் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டங்களையும், தீர்க்கத்தரிசனங்களையும் தேடிக் கண்டுபிடித்து, பழைய ஆடையையும் ஒட்டுப்போட்ட ஆடையையும் அணிந்திருப்பதைக் கண்டு கோபமடைந்தார்.
"தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்று அரசர் கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். தோழரே என்ற வார்த்தை இயேசுவின் எச்சரிக்கை. அந்த மனிதரோ திருமண ஆடையை அறியாதபடியால் திகைப்படைந்தார்.
இயேசுவின் புதிய உடன்படிக்கையின் நற்செய்தி மட்டுமே இயேசுவின் சீடர்களாலும், திருத்தூதர் பவுலினாலும் பிறஇனத்தாருக்கு அறிவிக்கப்பட்டது.
இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்: (உரோமர் 3-21,22)
அவனை, புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். முதல் உடன்படிக்கையின் மக்களாகிய இஸ்ரயேலர் பலர், தம் வெளிவேடத்தால் இயேசுவின் காலத்தில் நிலைவாழ்வை இழந்தார்கள். அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர் என்று இயேசு அவர்களுக்குத் தீர்ப்பளித்தார்.
அதை அறிந்திருந்தும், பிறஇனத்தார் பலரும் இயேசுவின் புதியஉடன்படிக்கையை அறியாமல், இஸ்ரயேலரைப்போல் மாய்மாலக்காரராக இருக்கிறபடியால், அதே தீர்ப்பு, பிறஇனத்தாருக்கும் அளிக்கப்படும் என்று இந்த உவமை அறிவிக்கிறது. அழைக்கப்பட்டவர்கள் பலர், ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்பதே இக்கால மக்களுக்குக் கூறப்படும் எச்சரிக்கை.