கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்" என்றார். இயேசு அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?" என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்றார்.
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்.
"செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், "நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே." என்று எண்ணினான். "ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன். அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது "ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை. பூச்சியும் இருப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
முன்மதி இல்லாத செல்வர்
லூக்கா 12 13-34
செல்வர்களே ஐயோ உங்களுக்குக் கேடு. எனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு முடிந்துவிட்டது (லூக்கா 6 23) என்ற பொன்மொழி இந்த உவமையில் விளக்கப்படுகிறது..
செல்வர் யார்? இக்காலத்தில், தங்கம், வீட்டுமனை, தொழிற்சாலை, கல்லூரி, போன்றவை செல்வர்களின் சேமிப்பாக இருக்கின்றன. ஆனால், பதினைந்தாம் நூற்றாண்டுவரை உணவும் உடையுமே செல்வர்களின் சேமிப்பாக இருந்தன. செல்வர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோரும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். என்றே இயேசுவும் குறிப்பிட்டுள்ளார் (லூக்கா 16 19). அக்காலத்தில். அறிவியலும் போக்குவரத்தும் இல்லாதபடியால் உணவுக்குப் பஞ்சம் அடிக்கடி ஏற்பட்டது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, எலியா காலங்களில் மக்கள் உணவு கிடைக்காமல் அலைந்தார்கள். எனவே, இயேசுவின் காலத்தில் தானியமே செல்வர்களின் சொத்தாகவும் சேமிப்பாகவும், வைப்புநிதியாகவும் இருந்தது.
செல்வரின் தவிப்பு. - இந்த உவமையில் வரும் செல்வருடைய வயலில், அந்த ஆண்டில், தேவைக்கும் மிகுதியாகத் தானியம் விளைந்தது. அவருடைய களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தன. சேமிக்க முடியாத தானியத்தை என்ன செய்வது? என்று அறியாமல் அவர் தவித்தார்.
செல்வரின் முன்மதி - செல்வர் இரவுமுழுவதும் திட்டமிட்டார். இறுதியில், தம் களஞ்சியங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு, மிகப்பெரிய களஞ்சியங்களைக் கட்டினால், அனைத்து தானியங்களையும் சேமிக்கமுடியும் என்று அறிந்தார், பல்லாண்டுகள் கவலையில்லாமல் வாழலாம் என்று மகிழ்ந்தார். தம்மை அறிவாளி என்றும் முன்மதியுடையவர் என்றும் மெச்சிக்கொண்டார். நிம்மதியுடன் தூங்கினார்.
அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? என்று கடவுள் கூறினார். – தம்மை அறிவாளி என்றும், முன்மதி உடையவர் என்றும் எண்ணிய செல்வரை இயேசு “அறிவிலி” என்று அறிவித்தார். ஏனெனில், உலகில் நீண்டநாள் வாழ்வதற்கு திட்டமிட்ட செல்வர், அழியாத நிலைவாழ்வுக்குத் திட்டமிட மறந்துவிட்டார்.. விண்ணுலகில் செல்வத்தை சேர்ப்பதிற்கு கடவுள் அவருக்கு அளித்தார் நல்ல வாய்ப்பை வீணாக்கினார்.. தேவைக்கும் மேலாக விளைந்த தானியத்தைக்கூட ஏழைகளுக்கு அளிக்க அவர் விரும்பவில்லை. பஞ்சத்தை உருவாக்கி, ஏழைகளை பட்டினிக்கு வழிநடத்தினார். எனவே, தம்மை அறிவாளி என்று எண்ணியவர் அறிவிலி ஆனார். எனெனில், நீண்டநாள் உயிர்வாழ்வதற்காகச் செல்வர் திட்டமிட்டுச் சேமித்த தானியமே அவருடைய உயிரைப் பறித்தது.
காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே என்று பட்டினத்தார் கூறியபடி, அவர் சேமித்த தானியம் அனைத்தும் அன்றே அவரைவிட்டுப் பிரிந்தது. "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை" என்று வள்ளுவர் கூறியுள்ளபடி, அந்த இரவிலே, தம் உலக வாழ்வை மட்டுமல்ல, நிலைவாழ்வையும் அவர் இழந்தார்..
இந்தச் செல்வரைப்போலவே,.நம்மில் பலரும் உலகில் நீண்டநாள் வாழ்வதற்கே திட்டமிடுகிறோம். செல்வத்தை சேமிக்கிறோம். ஆனால், உலகச் செல்வம் நமக்குரியதல்ல, இறைவனுக்குரியது. நம் அறிவும், திறமைகளும்.கூட இறைவனுக்குரியதே. இவை அழியக்கூடியது சிறிதுகாலம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடவுளின் செல்வத்தை நாம் தன்னலத்துடன் கையாண்டால், நிலை.வாழ்வை இழப்போம் என்பதே இந்த உவமை கூறும் உண்மை.
நிலைவாழ்வைப் பெறுவதற்கு இயேசு கூறுவது என்ன? 1. உலகில் செல்வத்தை மிகுதியாகச் சேமிக்காதீர். 2. உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள். இயேசுவின் இந்த அறிவுரை, மனிதர்களின் சேமிப்புத் திட்டத்திற்கும் முன்மதிக்கும் எதிர்மாறாக இருந்தாலும், இதுவே உண்மை.
1. செல்வத்தை (மிகுதியாக) உலகில் சேமிக்காதீர். -. உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர் (லூக்கா 12 22 ). எனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார் என்றார் இயேசு (மாற்கு 8 35). நாம் வேலைசெய்யாமல் சோம்பேறியாக வாழும்படி இங்கு இயேசு கூறவில்லை. பேராசையோடு தன்னலத்துடன் மிகுதியாகச் சேமிப்பதை இயேசு கண்டித்தார். ஐந்து அறிவுடைய பறவைகளை சுட்டிக்காட்டி, ஆறு அறிவுடைய மனிதரின் சேமிப்பை இயேசு கேலிசெய்தார். காகங்களைக் கவனியுங்கள்; அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா? என்றார் (லூக்கா 12 24). எனவே, அன்றன்றுள்ள உணவை எங்களுக்கு இன்று தாரும். என்று வேண்டும்படியே இயேசு கூறினார். எனவே, மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு நிலைவாழ்வு வந்துவிடாது என்பதே இந்த உவமையில் இயேசு கூறும் உண்மை..
2. உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள் - இயேசு தம் சீடரிடம், உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; விண்ணுலகில் குறையாத செல்வத்தை தேடிக் கொள்ளுங்கள் என்றார் (லூக்கா 12 33). எனவே, நற்செயலுக்காகச் செல்வத்தை இழக்கும்போது நம் உயிரை நாம் காத்துக்கொள்கிறோம். மற்றவர்களுக்கு உதவிசெய்யும்போது, அழியக்கூடிய உலகச் செல்வம், நமக்குரிய அழியாத விண்ணுலகச் செல்வமாகிறது.. மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று கூறி, தீர்ப்புநாளில் இயேசு நம்மை வரவேற்பார் (மத்தேயு 25 40).
நம் செல்வத்தால் மற்றவர்களுக்கு உதவிசெய்யும்போது, நாம் பெருமை கொள்வதற்கும் வழியில்லை. எனெனில், கடவுள் நமக்கு அளித்த செல்வத்தின் ஒரு பகுதியையே நாம் கடவுளுக்குத் திருப்பி அளிக்கிறோம். யோபு தன் செல்வத்தை இழந்தபோது,: ஆண்டவர் அளித்தார்: ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக என்றார் (யோபு 1 21) எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம் என்றான் தாவீது (1 நாளாகம் 29 14). "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப்படும்" என்றும் "அற்றார் அழிபசி தீர்த்தல், அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி" என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.