"பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்".
காணாமற்போன திராக்மா
லூக்கா 15 8-10
பாவிகளுடன் உண்பது ஏன்? என்று பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கேட்ட இந்தக் கேள்விக்கு இயேசு கூறிய இரண்டாவது பதில் இந்த உவமையாகும்.
இயேசு கூறிய பதில் என்ன? தொலைந்துபோன திராக்மாவை கண்டுபிடித்தப் பெண்ணைப்போல், மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன் என்றார் (லூக்கா 15 10)
பெண் யார்? இஸ்ரயேலில் தொலைந்துபோன பாவிகளைத் தேடி வந்த இயேசுவே பெண்.
பத்து திராக்மா யார்? திராக்மா என்பது பெண்களின் தலையில் அணியப்படும் வெள்ளி நாணயம். அதுபோல், விண்ணுலக வாழ்வில் இயேசுவுக்கு அணிகலனாக ஒளிவீசுபவர்களே பத்து திராக்மா.
பத்து திராக்மாவில் ஒன்று காணாமற்போய்விட்டது – இயேசு இஸ்ரயேலில் மனிதராக வந்த நோக்கம் இந்த உவமையில் கூறப்படுகிறது. ஆடுகள் தொலைந்தால் ஆயரைத் தேடி அலையும். ஆனால், நாணயம் தொலைந்துபோனால், குப்பையோடு குப்பையாக மறைந்திருக்கும். தன்னுடைய உயர்ந்த மதிப்பை அறிவதில்லை. அவ்வாறே ஆபிரகாமின் மகனாகிய சக்கேயு, உலகஆசை என்ற குப்பையில் மூழ்கியிருந்தாலும் குப்பையாக மாறவில்லை. தன் பாவங்களையோ விண்ணக வாழ்வையோ அவர் அறியாமல் இருந்தார்.
அப்பெண் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? இயேசு தொலைந்துபோன திராக்மாவைத் தேடி எரிகோவுக்கு வந்தார். நற்செய்தியாகிய விளக்கை ஏற்றினார். அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. (யோவான் 1 4,5). குப்பையில் கிடந்த திராக்மாவை, காட்டு அத்தி மரத்தில் இயேசு கண்டார். இயேசுவின் ஒளியில் சக்கேயு தான் பாவத்தில் மூழ்கியிருப்பதை அறிந்தார், அழியாத விண்ணுலக வாழ்வைக் கேள்விப்பட்டார். "ஆண்டவரே, , என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறி மனம் மாறினார். (லூக்கா 19 8).
கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்பார். விண்ணிலிருந்து இறங்கிவந்த நோக்கம் நிறைவேறிவிட்டதால், இயேசு சக்கேயுவுடன் விருந்துண்டார். இவரும் ஆபிரகாமின் மகனே. இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் என்று இயேசு அறிவித்தார்.