விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம். நெடும் பயணம் செல்லவிருந்த தலைவர் ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும், வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
ஐந்து தாலந்தைப் பெற்றவர், போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர், மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ, போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, "ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர். இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்" என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்" என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, "ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்" என்றார். அவருடைய தலைவர் அவரிடம், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்" என்றார்.
ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, "ஐயா, நீர் கடின உள்ளத்தினர், நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர், நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால், நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது" என்றார். அதற்கு அவருடைய தலைவர், "சோம்பேறியே. பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்" என்று கூறினார்.
"எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்". ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் என்று அவர் கூறினார்.
தாலந்து உவமை
மத்தேயு 25 14-30
இந்த உவமை யாருக்கு கூறப்பட்டது? இயேசுவின் நற்செய்தியை மக்களுக்குக் கற்பிக்கும் குருக்கள், போதகர், சீடர்கள், ஊழியக்காரர் போன்றவர்களுக்கு இந்த உவமை எச்சரிக்கையாகக் கூறப்பட்டது. உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும், இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்ற பொன்மொழி இந்த உவமையில் விளக்கப்படுகிறது. இதே கருத்து, மினா உவமையிலும் கூறப்பட்டுள்ளது.
நெடும்பயணம் செல்லும் தலைவர் யார்? விண்ணிலிருந்து மனிதராக இறங்கிவந்த இயேசுவின் பணி உலகில் முடிந்துவிட்டது. இன்னும் மூன்றுநாளில் மரித்து விண்ணுலகம் செல்வதால், நெடும்பயணம் செல்லப்போவதாக அறிவித்தார்.
தலைவரின் உடைமைகள் என்ன?. தாலந்து என்பது இறையாட்சியின் நற்செய்தியே. இயேசு விண்ணுலுகம் செல்லும் முன்னர், தம் புதிய உடன்படிக்கையின் நற்செய்தியை தம் பணியாளரிடம் ஒப்படைத்தார். இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது: இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்: ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர். ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர் (உரோமர் 3 21-,24)).
பணியாளர் யார்? இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்பவர்களே இயேசுவின் பணியாளர். இயேசுவின் சீடர்களும், குருக்களும் போதகர்களும் சபைத் தலைவர்களும் இயேசுவின் பணியாளர்களாக இருக்கிறார்கள்..
பணியாளரின் திறமைக்கேற்ப, ஐந்து, இரண்டு, ஒன்று தாலந்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். தலைவர் தம் பணியாளர்களுக்கு அவர்களின் திறமைகளுக்கேற்ப இறையாட்சியின் நற்செய்தியை அளித்தார்
ஐந்து தாலந்தையும் இரண்டு தாலந்தையும் பெற்றவர்கள் வணிகம் செய்து வேறு ஐந்து தாலந்தையும் இரண்டு தாலந்தையும் ஈட்டினார்கள். - வாணிகம் என்பது இயேசுவின் இறையாட்சியை மக்களிடைய வளர்ப்பதாகும். இயேசுவின் சீடர்களும் ஊழியக்காரர்களும் இஸ்ரயேலில் மட்டுமல்ல, பிற நாடுகளிலுள்ள பிற இனத்து மக்களுக்கும் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்கள். இறையாட்சியை வளர்த்தார்கள்.
ஒரு தாலந்து பெற்றவரோ, போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். இவரும் இயேசுவின் பணியாளரே. ஆனால், இயேசுவின் இறையாட்சியை அவர் அறிந்துகொள்ளவோ, அறிவிக்கவோ விரும்பவில்லை. ஆனால், முடிந்துபோன பழைய உடன்படிக்கையையும் திருச்சட்டத்தையும், பழைய ஏற்பாட்டின் உலக நன்மைகளையும், மக்களுக்கு அறிவித்தார். இவ்வாறு, இயேசுவின் புதிய உடன்படிக்கையைப் பயனின்றிப் புதைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பின், அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து, அவர்களிடம் கணக்குக் கேட்டார்.. கணக்கு கேட்பது என்பது இயேசுவின் தீர்ப்புநாள்.ச
நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். ஐந்து மற்றும் இரண்டு தாலந்தைப் பெற்ற இயேசுவின் பணியாளர்கள் விண்ணரசின் இறையாட்சியை தம் சொல்லாலும் செயலாலும் உலகில் வளர்த்தார்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும் என்ற பொன்மொழி நிறைவேறியது.
ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவர், நீர் கடின உள்ளத்தினர், நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர், நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர். உமக்கு அஞ்சி உம்முடைய தாலந்தைப் புதைத்துவைத்தேன் என்றார். இயேசு இஸ்ரயேலில் மட்டுமே நற்செய்தியை விதைத்தார். ஆனால், ’உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மத்தேயு 28 19). என்று இயேசு கூறியபடியால், நீர் விதைக்காத இடத்திலும் அறுவடைசெய்பவர் என்று இந்தப் பணியாளர் இயேசுவைக் குறைகூறினார். இவர், இயேசுவின் நற்செய்தியை அறிந்துகொள்ளவோ, மற்றவர்களுக்கு அறிவிக்கவோ விரும்பவில்லை. ஆனால் உலக நன்மைகளை அறிவிக்கும் பழைய உடன்படிக்கையை அறிவித்தார். தீர்ப்புநாளில், அவர் இயேசுவின் புதிய உடன்படிக்கையை இயேசுவிடமே திருப்பிக்கொடுத்தார். தன்னிடம் குற்றம் இல்லை என்று அறிவித்தார்.
சோம்பேறி என்று இயேசு கூறுவது ஏன்? இயேசுவின் பணியாளராக இருந்தாலும், இயேசுவின் புதிய உடன்படிக்கையை அவர் அறிந்துகொள்ள விரும்பவில்லை. எனவே இயேசு அவரை சோம்பேறி என்று அறிவித்தார்..
பொல்லாத பணியாளனே, ஏன் என் பணத்தை வட்டிக்கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே இந்தப் பணியாளன் இறையாட்சியின் நற்செய்தியை அறியாமல் இருந்ததோடு மட்டுமல்ல, மக்களையும் தவறாக வழிநடத்தினபடியால், பொல்லாத பணியாளர் என்று கூறப்பட்டார். நற்செய்தியை அறிவிக்காத இறைப் பணியாளர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்பட்டது. இயேசு, இவரைப் பார்த்து, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை என்றார் (மத்தேயு 23-13). என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக என்று யாக்கோபு கூறினார் (யாக்கோபு 3 1).
இந்த ஊழியக்காரர் இயேசுவின் தாலந்தாகிய இறையாட்சியின் நற்செய்தியை வீணாக்கியபடியால், அவர் நிலைவாழ்வை இழந்தார் இல்லாதாரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்ற இயேசுவின் பொன்மொழி நிறைவேறியது