சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.
ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை, மக்களையும் மதிப்பதில்லை.
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், "என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.
நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், "நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."
பின் இயேசு அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?
விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" என்றார்.
மனந்தளராத கைம்பெண்
லூக்கா 18 1-8
இறையாட்சி எப்போது வரும்? என்று இயேசுவிடம் பரிசேயர் கேட்டார்கள். இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது என்று இயேசு பதிலளித்தார் (லூக்கா 17-20) பின்பு இயேசு தம் சீடர்களிடம் இறையாட்சி நிறுவப்படுவதற்கு இறைவனிடம் மனந்தளராமல் மன்றாடவேண்டும் என்று இந்த உவமையில் கூறினார்.
இந்த உவமையில் கூறப்படும் நேர்மையற்ற நடுவர் ஒரு ஏழைக் கைம்பெண்ணுக்கு நீதி வழங்க விரும்பவில்லை. ஏனெனில், அக்காலத்தில் நடுவர்கள் பலர் நேர்மையற்றவர்களாகவும் இலஞ்சம் பெறுபவர்களாகவும் இருந்தார்கள். மக்களுக்குத் தீர்பளிக்கும் இவர்கள், கடவுளுடைய தீர்ப்புக்கு அஞ்சுவதே இல்லை. ஆனால் அக்கைம்பெண் மனந்தளராமல் தொடர்ந்து நடுவரிடம் கெஞ்சினார். அப்பெண்ணின் தொல்லையைத் தாங்கமுடியாமல், வேறு வழியின்றி, அந்த நடுவர் அக் கைம்பெண்ணுக்கு நீதி வழங்கினார்.
இது ஒரு எதிர்மறை உவமை. கடவுள் இந்த நடுவரைப்போல் நேர்மையற்றவர் அல்ல, காலம் தாழ்த்துபவரும் அல்ல. நேர்மையளருக்கு நீதிவழங்கித் தீர்ப்பளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று இயேசு கூறினார் (லூக்கா 18 7,8).
நீதிக்காக ஏங்கிய கைம்பெண் இயேசுவின் சீடர்களே. "நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது" என்றார் இயேசு (மத்தேயு 5 10). எனவே, தீர்ப்பு நாளும், விண்ணக ஆட்சியும் விரைவில் வரும்படி தம் சீடர்கள் அல்லும் பகலும் கூக்குரலிடவேண்டும் என்று இயேசு இந்த உவமையில் அறிவித்தார்.
ஆனால் இக்காலத்தில், இறையாட்சிக்காக அந்தக் கைப்பெண்ணைப்போல் எவரும் கடவுளுக்குத் தொல்லை கொடுப்பதில்லை. உமது ஆட்சி வருக என்று வாயால் கூறுவதோடு அனைவரின் வேண்டுதல் முடிந்துவிடுகிறது. உலக வாழ்வுக்காகவே தொல்லை கொடுக்கிறோம். எனவே, இயேசு தம் கவலையைக் கடைசி வார்த்தையில் அறிவித்தார். மானிடமகன் வரும் போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?