வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
இந்த உவமையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று.
வணிகர்
உயர்ந்த நல்முத்து
யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார்
உலக வாழ்வின் நோக்கத்தை அறிய விரும்பும் அறிஞர்
இயேசுவின் நற்செய்தி அளிக்கும் இறையாட்சி
உலக ஆசைகளைத் துறந்து, மனம் மாறி, இயேசுவின் மீட்புக்குள் வருகிறார்
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். இந்த உவமையில் வரும் வணிகர், வாழ்வின் நோக்கத்தை அறிய விரும்பும் அறிஞரைக் குறிக்கிறது. அவர் உண்மையையும் இறைவனையும், அறிவதற்காக முயற்சிகளை மேற்கொள்கிறார். பல புத்தகங்களையும், அறிஞர்களின் வார்த்தைகளையும் படிக்கிறார். எதிலும் மன நிறைவு அடையாதபடியால் மேலும் மேலும் தேடிக்கொண்டே இருக்கிறார்.
விலை-உயர்ந்த ஒரு முத்தைக் காண்கிறார். இயேசுவின் நற்செய்தியை அந்த அறிஞர் கேட்கிறார், படிக்கிறார். நிலைவாழ்வைத் தரும் இறையாட்சியைப் பெறுவதே நம் வாழ்வின் நோக்கம் என்பதை அறிந்தார். அத்துடன் அவரது தேடல் முடிவுற்றது. அவர் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறிவிட்டது.
தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். இயேசுவின் நற்செய்தியைக் கைக்கொள்கிறார். உள்ளத்திலுள்ள பெருமை, பேராசை, தன்னலம் போன்ற பாவங்களை அறிந்து, விட்டுவிடுகிறார். மனம் மாறி, இயேசுவின் இறையாட்சியைப் பெற்று, நிலைவாழ்வுக்கு உரியவராகிறார்.
திருமுழுக்கு யோவானிடம் சீடராக இருந்த அந்திரேயாவும் மற்றொரு சிடரும், இயேசுவை அறிந்தார்கள். அவர்கள் தேடிய நல்முத்தை கண்டுகொண்டார்கள். யோவானை விட்டு நீங்கி, இயேசுவைப் பின்பற்றினார்கள். கலிலேயக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுருவும், யோவானும், யாக்கோபும் அவ்வாறே எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினர்.
நிலைவாழ்வை விரும்பிய செல்வர் ஒருவரும் இயேசுவிடம் வந்தார். இயேசு அவரிடம் "நிறைவுள்ளவராக விரும்பினால், நீர் போய் உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று கூறுகிறார். மிகுந்த செல்வராகிய அவர் அனைத்தையும் விட்டுவிட விரும்பவில்லை. நிலைவாழ்வை அவர் இழந்தார்.
இயேசு கூறியது, "என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயையும், நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும், மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்"