யூதேயா
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.
அவர் அவர்களிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்") என்று கற்பித்தார்.
மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார், "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், "எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது" என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி.
நண்பரும் தந்தையும் இறைவனும்
லூக்கா 11 1-13
நம் நண்பரையும், தந்தையையும்விட கடவுளே மிகுந்த அன்பு உடையவர் என்பதை இயேசு இந்த உவமையில் அறிவித்தார்.
1. கடவுள் நம் நண்பரைவிட, மேலானவர் – அப்பத்துக்காக, நடு இரவில், நண்பர்களின் வீட்டுக்கதவை நாம் தட்டும்போது, முதலில் அவர்கள் உதவிசெய்யத் தயங்குவார்கள். ஆனால், நம் அவசரத் தேவையை அறிந்து, அப்பத்தைக் கொடுப்பார்கள்.
ஆனால், கடவுளோ, நம் நண்பர்களைவிட மேலானவர் என்று இயேசு அறிவித்தார். எனென்றால், நாம் கேட்பதற்குமுன்பே நம் தேவையை அறிந்திருக்கிறார். நாம் விரும்பிக் கதவைத் தட்டும்போது, இறையாட்சியை உடனே கொடுப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கிறார். தட்டுவோருக்குத் திறக்கப்படும் என்று இயேசு அறிவித்தார்.
கேளுங்கள், தட்டுங்கள், தேடுங்கள் - உலக வாழ்வுக்காகவே நாம் எந்நேரமும் கடவுளிடத்தில் வேண்டுதல் செய்கிறோம். கதவைத் தட்டுகிறோம். ஆனால், உலக வாழ்வுக்காக கடவுளிடத்தில் வேண்டுதல் செய்யவேண்டாம் என்று இயேசு அறிவித்தார். எனெனில் உலகைப் படைக்கும்போதே நமக்குத் தேவையான உணவையும் உடையையும் கடவுள் உலகில் வைத்துவிட்டார். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். என்றார் இயேசு (யோவான் 6 27). அழியாத இறையாட்சியே நமக்குத் தேவை. அதைக் கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும் என்று இயேசு அறிவித்தார்.
2. கடவுள் நம் தந்தையைவிட, மேலானவர் - பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி. (லூக்கா 11 11-13).
மனிதர் எல்லாரும் பொய்யர்" என்று திருத்தூதர் பவுல் குறிப்பிட்டார் (உரோமர் 3 4). மனிதர்களாகிய நாம் தன்னலத்துடன், தீயோராகவும் பொய்யராகவும் உலகில் வாழ்கிறோம். ஆனால், நாம் தீயோராக இருந்தாலும் நம் பிள்ளைகளுக்கு தீமை செய்வோமா? மீனுக்குப்பதிலாகப் பாம்பைக் கொடுப்போமா? நம் பிள்ளைகளுக்கு நாம் எப்போதும் நன்மைகளையே கொடுக்கிறோம். அவர்களுக்கு உணவு, ஆடை, கல்வி, செல்வம் ஆகிய உலகச் செல்வங்களை அளித்து மகிழ்கிறோம்.
இறைவனோ உலகத் தந்தையைவிட மிகவும் உயர்ந்த தந்தையாக இருக்கிறார் என்று இயேசு அறிவித்தார். அழியக்கூடிய உணவை அல்ல, அழியாத உணவை தம் பிள்ளைகளுகிய நமக்கு அளிக்க காத்துக்கொண்டிருக்கிறார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு-தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்றார் இயேசு (யோவான் 6 51). அதுவே இறையாட்சி. அது அழியாத நிலைவாழ்வுக்கு நம்மை வழிநடத்துகிறது. கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படுகிறது.
"யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார் இயேசு. தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். (யோவான் 7 37-39).