’நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, பளிச்சிடும் மெல்லிய ஆடையணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரசமாளிகையில் அல்லவா இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ’இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதப்பட்டுள்ளது.
மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர். ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.’
இயேசு, ’இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ’நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை;. இவர்களோ அவரை, ’பேய் பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ’இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று’ என்றார்.
விளையாடும் சிறுபிள்ளைகள்
மறு அணியினர்
திருமுழுக்க யோவான்
இயேசு
நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை
பரிசேயர், மறைநூல் அறிஞர், குருக்கள், யூதர்கள்
திருமுழுக்கு யோவான், மானிடமகன் இயேசு
பழைய உடன்படிக்கையின் கடைசி இறைவாக்கினர்
புதிய உடன்படிக்கையின் மெசியா
பரிசேயரும் யூதர்களும், யோவானையும் இயேசுவையும் குறைகூறி, கடவுளின் அளித்த இரண்டு வாய்ப்புகளையும் புறக்கணித்தார்கள்
’இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? திருச்சபையில் நாம் பரம்பரையாக இருப்பதாலும், கோவிலுக்குச் செல்வதாலும், நம்மை நேர்மையாளர் என்றும், இறைவனுக்கு ஏற்புடையவர்கள் என்றும், நிலைவாழ்வுக்கு தகுதிபெற்றவர் என்றும் நாம் பெருமாயுடன் எண்ணிக்கொள்கிறோம். நம்மைப்போலவே, திருமுழுக்கு யோவான் காலத்தில் வாழ்ந்த குருக்களும், பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், மூப்பர்களும், யூதர்களும் தம்மை நேர்மையாளர் என்றும், நிலைவாழ்வில் முதலிடம் பெறுபவர் என்றும் எண்ணி வெளிவேடக்காரராக வாழ்ந்தார்கள்.
திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை;. திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர். ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவரை, ’பேய் பிடித்தவன்’ என்கிறார்கள். அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள். பரிசேயர்களும் யூதர்களும் மனம் மாறுவதற்காக, இறைவாக்கினர் யோவானை இறைவன் அனுப்பினார். வரிதண்டுவோரும் விலைமகளிரும் யோவானை நம்பி மனம் மாறினார்கள். யோவான் தன் உடை, உணவு, வாழ்க்கைமுறைகளில் மிகவும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தபடியால், பரிசேயரும், குருக்களும், யூதர்களும், அவரைப் பேய்பிடித்தவன் என்று கேலிசெய்து, அவர் மனம்திரும்புவதற்கு அளித்த திருமுழுக்கை அவர்கள் பெறவில்லை. குறுநில மன்னன் ஏரோது யோவானைக் கைது செய்யும்போது மகிழ்ச்சி அடைந்தார்கள். இவ்வாறு, திருச்சட்டத்தின் செயல்களின் வழியாக நிலைவாழ்வைப் பெற அவர்களுக்கு கடவுள் அளித்த வாய்ப்பைத் தவறவிட்டார்கள்.
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ’இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள் இப்போது, பாவமன்னிப்பை அருளும் மெசியாவாகிய இயேசு வந்துள்ளார். அவர் மக்களுடன் மக்களாக இணைந்து பழகுகிறார். ஆனால், இயேசுவை, பாவிகளுடன் உண்பவர், பெருந்தீனிக்காரன், குடிகாரன், கை கழுவாதவர், ஓய்வுநாளைக் கைக்கொள்ளாதவர்,, நாசரேத்திலிருந்து வந்தவர், பெயல் செபூல் என்று குற்றம் குறைகளைக் கூறி அவருடைய மீட்பைப் பெறுவதற்குத் தவறினார்கள்.
நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். பரிசேயர்களும், குருக்களும், யூதர்களும் விளையாடும் சிறுபிள்ளைகளைப்போல் செயல்படுகிறார்கள் என்று இயேசு இந்த உவமையில் அறிவித்தார். எனென்றால், அவர்கள் யோவானையும், இயேசுவையும் தாங்கள் விரும்பியபடி செயல்படும் தீர்க்கத்தரிசிகளாக இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இவ்வாறு யூதர்கள் மனம் மாறுவதற்காக இறைவன் அளித்த இரண்டு வாய்ப்புகளையும் அவர்கள் இழந்தார்கள்.
யூதர்களிடமிருந்து இறையாட்சி விலக்கப்பட்டு அதற்கேற்றபடி செயல்படும் பிறஇனத்தவருக்கு வழங்கப்படும் என்று தம் கடைசி நாள்களில், எருசலேம் திருக்கோவிலில் இயேசு அறிவித்தார்.
இக்காலத்திலும், பாரம்பரியமாக திருச்சபையின் உறுப்பினராக இருக்கும் நமக்கும் இந்த உவமை பொருந்துகிறது. நாமும் பரிசேயரைப் போலவே, நமக்கு ஏற்ற போதகர்களையும், நமக்கு ஏற்ற திருச்சபைகளையும் உருவாக்குகிறோம். யோவானைப் போன்றும், இயேசுவைப் போன்றும் நம் வெளிவேடத்தைக் கண்டித்து உணர்த்தும் போதகர்கள் நம்மிடையே மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.
திருத்தூதர் பவுல் கள்ளப் போதகர்களையும், அவர்களை விரும்பும் மக்களையும் குறித்துக் கூறியது இப்போது நிறைவேறுகிறது. "ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள் " என்று பவுல் கூறியிருப்பதை நாம் அறியவேண்டும். எனவே, நிலைவாழ்வைத் தேடி நேர்வழியில் செல்வது நம் ஒவ்வொருவர் கையிலும்தான் இருக்கிறது.
எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று “ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும் அவர்களுடைய செயல்களாலே அவர்களை அறிவீர்கள். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டுகொள்வீர்கள்“ என்று இயேசு மலைப் பொழிவில் அறிவித்தார். அவ்வாறே, நம் செயல்களே நம்மை நிலைவாழ்வுக்கோ, நித்திய அழிவுக்கோ வழிநடத்துகின்றன.