"இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்.
நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார். ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது" என்று இயேசு கூறினார்.
இந்த உவமையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று.
விதை
விதைப்பவர்
விளைநிலம்
கதிர்
அறுவடைக் காலம்
இறைவார்த்தையாகிய நற்செய்தி
நற்செய்தியை அறிவிப்பவர்
நற்செய்தியைக் கேட்கும் மக்களின் உள்ளம்
இறையாட்சி
நிலைவாழ்வுக்குள் மக்களைச் சேர்க்கும் காலம்
ஒருவர் நிலத்தில் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. உழவர் தம் நிலத்தில் விதைகளை விதைக்கிறார். அது மட்டுமே அவர் செய்யக்கூடியது. விதை தானாகவே முளைத்து வளருகிறது. எல்லா விதைகளும் முளைப்பதில்லை. முளைத்த எல்லா செடிகளும் விளைவதில்லை. விதை உடனே விளைச்சலை அளிப்பதுமில்லை. விதை முளைக்கவும், பலனளிக்கவும் அதற்கேற்ற காலம் தேவைப்படுகிறது. இந்த உவமையில், மக்களின் உள்ளமே நிலம். இயேசுவின் நற்செய்தியை அனைத்து மக்களின் உள்ளத்தில் விதைப்பது மட்டுமே சீடர்களாகிய நற்செய்தியாளரின் வேலை. விதைக்கப்பட்ட நற்செய்தி எவரிடத்தில் எப்போது பலனளிக்கும் என்பதை நற்செய்தியாளர் அறியமுடியாது.
அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. நாம் விதையை நிலத்தில் விதைக்கிறோம். விதை செத்தால்தான் முளைத்து பலனளிக்கும். நற்செய்தியின் விதையாகிய இயேசு விதைக்கப்பட்டவர் உள்ளத்தில் முளைத்து, வளர்ந்து, தானாகவே பலனளிக்கிறார். நற்செய்தி, மக்களின் உள்ளத்திலும், செயல்களிலும் படிப்படியாக மாற்றத்தை ஏற்படுத்தி, இறையாட்சியாகிய விளைச்சலை அளிக்கிறது. திருத்தூதர் பவுல், “நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுபவருக்கும் பெருமையில்லை. நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை“ என்று கூறுகிறார்
பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார். ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது. விதைப்புக் காலத்திற்குப்பின் அறுவடைக் காலம் வருகிறது. நற்செய்தியாகிய விதை முளைத்து, செயல்பட்டு, மனம் மாறியவர்களை நிலைவாழ்வுக்குள் கூட்டிச் சேர்க்கும் காலம். அதற்கு அடையாளமாக, திருமுழுக்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இயேசு சமாரியாவில் தம் சீடரிடம், “நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார்” என்றார். உலகமுடிவில், நல்லோரையும் தீயோரையும் பிரிப்பவர்கள் தூதர்கள் என்றும் இயேசு தம் உவமைகளில் கூறியுள்ளார்.
எனவே, நல்ல விளைச்சலைப் பெறுவதற்கு, நற்செய்தியை அனைத்து மக்களின் உள்ளத்தில் விதைப்பதே அடிப்படையாகும். அதுமட்டுமே நாம் செய்யக்கூடிய காரியமாக இருக்கிறது. நம் சொல்லால் மட்டுமல்ல, நம் செயலாலும் நற்செய்தியின் ஒளியை நாம் வீசமுடியும். நற்செய்தி வளர்வதும், இறையாட்சியாக பலனளிப்பதும் தானாகவே இறைவனால் நடைபெறுகிறது. திருத்தூதர் பவுல் “நன்மைசெய்வதில் மனம் தளராதிருப்போமாக. நாம் தளர்ச்சி அடையாதிருந்தால் தக்க காலத்தில் அறுவடை செய்வோம்” என்று அறிவிக்கிறார்.