இயேசு கூறியது, "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
இந்த உவமையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று.
புதையல்
புதையல் மறைந்துள்ள நிலம்
நிலத்தின் விலை
நிலைவாழ்வுக்கு வழிநடத்தும் இறையாட்சி
இயேசுவின் நற்செய்தி
நம் பாவத்தை அறிந்து மனம் மாறி நற்செய்தியைக் கைக்கொள்ளுதல்
(புதையலை எவரும் விலைகொடுத்து வாங்க முடியாது. ஆனால், புதையல் மறைந்திருக்கும் நிலத்தை விலைகொடுத்து வாங்கினால் புதையல் இலவசமாக நமக்குக் கிடைக்கிறது)
ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். மக்களாகிய நாம் பணம், பதவி, புகழ் உலக இன்பங்கள் போன்ற புதையலைத் தேடியே அலைகிறோம். நிலைவாழ்வை அளிக்கும் இறையாட்சி என்ற புதையல் இருப்பதை நாம் அறிவதில்லை. நாம் தினமும் நற்செய்தியைப் படித்தாலும் அதில் மறைந்துள்ள புதையலாகிய இறையாட்சியைப் பெற முயற்சி செய்வதில்லை. நற்செய்தியை ஆழமாகத் தோண்டிப் பார்க்காதபடி நம் தற்பெருமையும், வெளிவேடமும், தன்னலமும் தடுக்கின்றன.
ஆனால், நம்மில் ஒருவர், இயேசுவின் நற்செய்தியை படிக்கும்போது, எதிர்பாராத விதமாக, அங்கு இருக்கும் புதையலைக் கண்டுபிடிக்கிறோம். . நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும், நாம் இறையாட்சியைப் பெற்று நிலைவாழ்வில் என்றும் மகிழ்ச்சியாக வாழவே நாம் உலகில் பிறந்திருக்கிறோம் என்றும் அறிகிறோம். எனவே, நாம் தற்செயலாக உலகில் பிறக்கவில்லை என்றும் மரணத்தோடு நம் வாழ்வு முடிவதில்லை என்றும் அறிகிறோம்.
மூடி மறைக்கிறார். புதையலை நாம் இழந்துவிடக்கூடாது. இறையாட்சியைப் பெறும் நம் நோக்கத்தை, உறவினர்களோ, உலக ஆசைகளோ தடுத்துவிடலாம். எனவே, நம் நோக்கம் சிதறிவிடாதபடி அதை மூடி மறைக்கிறோம்.
யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். புதையல் விலைமதிப்பற்றது. எவரும் விலைகொடுத்து வாங்கமுடியாது. ஆனால் புதையல் மறைந்திருக்கும் நிலத்தை விலைகொடுத்து வாங்கினால் புதையல் நமக்கு இலவசமாகக் கிடைத்துவிடும்.
அவ்வாறே, விலைமதிப்பற்ற இறையாட்சி இயேசுவின் நற்செய்தியில் மறைந்திருக்கிறது. நம் குற்றங்களை அறிந்து மனம் மாறும்போது, இயேசுவின் மீட்புக்குள் வருகிறோம். இறையாட்சியைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும், பேராசை, தற்பெருமை, சினம் போன்றவைகளை நீக்குகிறோம். மேலும், நம் உறவினர்களையும், உடைமைகளையும், இழக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இயேசுவின் நற்செய்தியைக் கைக்கொண்டு, இறையாட்சியையும், நிலைவாழ்வையும் பரிசாகப் பெறுகிறோம்.
வரிதண்டுபவராகிய சக்கேயுவை மக்கள் பாவி என்று இகழ்ந்தார்கள். சக்கேயு, இயேசுவைக் கண்டதும், இறையாட்சி என்ற புதையலைக் கண்டார். தன் பாவத்தை அறிக்கையிட்டார். செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு அளித்தார். ’இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று’ என்று இயேசு அறிவித்தார்.
"நிலைவாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது, வழியும் மிகக் குறுகலானது, இதைக் கண்டுபிடிப்போர் சிலரே" என்றும் இயேசு அறிவிக்கிறார். நாம் நிலைவாழ்வுக்குச் செல்லும் வாயிலை தேடி நுழையவேண்டும். இறையாட்சியைப் பெற்று நிலைவாழ்வில் இடம்பெறவேண்டும்.