இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, "ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.அதற்கு அவர், "இது பகைவனுடைய வேலை" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், "நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?" என்று கேட்டார்கள்.அவர், "வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கி விடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்.அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், "முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார்".
அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, "வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்" என்றனர்.
அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்,வயல், இவ்வுலகம்.நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன். நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள். களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள். அவற்றை விதைக்கும் பகைவன், அலகை.அறுவடை, உலகின்முடிவு. அறுவடை செய்வோர், வானதூதர்.
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார், அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும், நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள். பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.
இந்த உவமையையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று. இதன் விளக்கத்தை இயேசுவே தம் சீடருக்கு கூறிவிட்டார். தீர்ப்புநாளில்தான் ஒருவர் நேர்மையைளரா? அல்லது வெளிவேடக்காரரா? என்பதை அவரும் மற்றவர்களும் உறுதியாக அறியமுடியும்.
ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். உலகிலுள்ள நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளாக இருக்கிறோம். நாம் அனைவரும் மகிழ்சியுடன் வாழ்வதற்காகவே உலகமும் அதிலுள்ள அனைத்தும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வுலகமே வயல் என்று இயேசு கூறும்போது, மக்களின் உள்ளத்தைக் குறிப்பிடுகிறார். நம் விருப்பத்தின்படி வாழும் உள்ளம் மனிதராகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகில் வாழும் மக்களின் உள்ளத்தில் நல்ல விதையாகிய நற்செய்தியை இயேசு விதைக்கிறார். அதை கவனித்துக் கேட்கும்போது, நாம் வழிதவறியதை அறிந்து மனம் மாறுகிறோம். இயேசுவின் விதை நம் உள்ளத்தில் வளர்ந்து, கோதுமைச் செடியாகி, அன்பு, பரிவு, பொறுமை நிறைந்த இறையாட்சியாக வளர்கிறது.
நம் உடல், உயிர், உலகம் அனைத்தும் இறைவனுடையதாக இருந்தாலும், நம் உள்ளம் நம்முடையதாக இருப்பதால் நாம் வழிதவறுகிறோம். இவ்வாறு தீயோனின் பிள்ளைகளாகிறோம்.
அதில் களைகள் காணப்படுவது எப்படி? அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். இயேசுவின் நற்செய்தி விதைக்கப்பட்ட திருச்சபையில் களைகள் இருக்கமுடியுமா? ஆம், திருச்சபையில்தான் கோதுமையும் களைகளும் வளர்கின்றன. நற்செய்தியாளர்கள் உறங்குவதால், இறையாட்சிக்கு எதிரான பண ஆசை, தற்பெருமை, சினம், தன்னலம், பொறாமை, போன்ற களைகள் மக்களின் உள்ளத்தில் தீயோனால் விதைக்கப்படுகின்றன. இயேசுவின் நற்செய்தியைவிட உலக ஆசைகள் வேகமாக வளர்ந்து இறையாட்சியை மூடுகின்றன. ஆனால், திருச்சபையிலுள்ள நாம் ஒவ்வொருவரும் நம்மை கோதுமைச் செடி என்றே எண்ணி வெளிவேடக்காரராக வாழ்கிறோம்.
களைகளை விதைப்பவரைக் குறித்து, திருத்தூதர் பவுல், "இத்தகையோர் போலித் திருத்தூதர். கிறிஸ்துவின் வஞ்சக வேலையாள், கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள். இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே? ஆகவே அவனுடைய தொண்டர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் "ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள். உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்" என்றும் பவுல் கூறியுள்ளார். அவர் கூறியபடியே, களைகள் பெருகி வளர்வதற்குப் போலித்திருத்தூதர்கள் மட்டுமல்ல, மக்களும் காரணமாக உள்ளனர். களைகளாய் இருப்போரை குறித்து, "தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், அன்புணர்வு அற்றோர், ஒத்துப் போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொள்வோர், கடவுளை விரும்புவதை விட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர்" என்று பவுல் அறிவிக்கிறார்.
"நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கி விடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். களைகளைப் பிடுங்கித் தீர்ப்பளிக்க தம் பணியாளர்களாகிய திருத்தூதரை இறைவன் அனுமதிக்கவில்லை. ஏனெனில், கதிர்விடும்வரை கோதுமைக்கும் களைகளுக்கும் வேறுபாடு கண்டறிவது கடினம். "களைகளாய் இருப்பவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது" என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். மனிதர்களாகிய நாம் அனைவருமே நம்மை நல்லவர் என்றும் வேறு சிலரைத் தீயோர் என்றும் எண்ணுவதால், நேர்மையாளரையும் நெறிகெட்டோரையும் மனிதர் பிரித்தறிவது இயலாது. இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது. பாவிகள் என்று நாம் குறிப்பிடுவோர் நிலைவாழ்வில் இடம்பெறலாம். நேர்மையாளராகத் தோன்றுவோர் முடிவில்லா தண்டனை பெறலாம். மக்களே போல்வர் கயவர், அவரன்ன ஒப்பாரி யாம் கண்டதில் என்ற திருக்குறளும் இதற்குச் சான்று பகர்கிறது.
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் தேவதூதர்களே நெறிகெட்டோரை அடையாளம் காணவும் நீக்கவும் முடியும். எனவே, எவரையும் தீர்ப்பளிப்பது நம்மால் இயலாது.
ஆனால், நம் வாழ்வுக்கு நாமே பொறுப்பாளர் என்பதை அறியவேண்டும். உலகில் வாழும் நாம் அனைவருமே வழிதவறியவர்களாகவே இருப்பதால், நம் தவறுகளை அறிவதும், மனம் மாறுவதுமே நம் வாழ்வின் நோக்கமாக அமைந்துள்ளது. அதற்காகவே, இந்த உவமைகளை இயேசு அளித்தார். தம் பாவங்களை அறிந்து, மனம் மாறுபவர்கள் கோதுமையாகிறார்கள். மனம் மாறாதவர்களும், மனம் மாறத்தேவையில்லை என்று நினைப்பவர்களும் களைச்செடியாகவே, வெளிவேடக்காரராகவே வாழ்கிறார்கள்.