இயேசு, "இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது" என்றார்.
இந்த உவமையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று. இயேசு "பரிசேயரின் புளிப்புமாவாகிய வெளிவேடத்துக்கு எச்சரிக்கையாயிருங்கள்" என்று தம் சீடருக்குச் சொல்லியிருக்கிறார். எனெனில் அது அருகிலுருக்கும் அனைவரையும் பரிசேயரைப்போல் வெளிவேடக்காரராக மாற்றிவிடும். ஆனால், இங்கு ஒரு பெண்ணின் நற்செயல் கூறப்படுகிறது. புளிப்பு மாவால் ஏற்படும் மாற்றத்தை, இயேசுவின் வார்த்தையால் ஏற்படும் முழுமையான, நன்மையான மாற்றத்திற்கும் இயேசுவே ஒப்பிடுகிறார்.
புளிப்பு மாவு
பெண்
மூன்று மரக்கால் மாவு
பிசைந்து வைத்தார்
முழுவதும் புளிப்பேறியது
இறையாட்சியின் நற்செய்தி
நற்செய்தியை கேட்கும் நாம்
உலக ஆசைகளால் நிறைந்திருக்கும் நம் உள்ளமும் வாழ்வும்
இயேசுவின் நற்செய்தியை விரும்பி நம் உள்ளத்தில் பதிக்கிறோம்.
நம் வாழ்வு படிப்படியாக முற்றிலும் மாற்றம் பெற்று, இறையாட்சியாக நிறைவு பெறுகிறது.
இறையாட்சி புளிப்புமாவுக்கு ஒப்பாகும். புளிப்புமாவைச் சிறிதளவே சேர்த்தாலும் தன்னைச் சுற்றியுள்ள மாவு அனைத்தையும் அது புளிப்பாக மாற்றி, உண்பதற்கு ஏற்றதாகச் செய்கிறது. இந்த மாற்றம் நம் கண்ணுக்குத் தெரியாமல், படிப்படியாக நடந்தேறி, முழு மாவும் மாற்றம் பெருகிறது. இயேசு, தம் வார்த்தையை, புளிப்புமாவின் நன்மைதரும் இந்த மாற்றத்திற்கு ஒப்புமையாகக் கூறுகிறார்.
பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். நம் உள்ளம் பலவிதமான உலக ஆசைகளால் நிறைந்திருக்கிறது. இந்நிலையில் இயேசுவின் வார்த்தையை நாம் கேட்கிறோம். அதன்மூலம், நம்மிடமுள்ள குறைகளையும், நம் வாழ்வின் நோக்கத்தையும், அறிகிறோம். மனம்மாற நாம் விரும்புகிறோம். இயேசுவின் நற்செய்தியை விரும்பி நம் உள்ளத்தில் பதிக்கிறோம். வாழ்வில் கைக்கொள்ளவும் ஆரம்பிக்கிறோம்.
மாவு முழுவதும் புளிப்பேறியது. இயேசுவின் நற்செய்தி நம் உள்ளத்தில் செயல்படத் துவங்குகிறது. நம் உள்ளத்திலுள்ள சினம், பேராசை, தன்னலம் போன்ற தீய எண்ணங்கள் அனைத்தையும் நற்செய்தி முழுமையாக நீக்குகிறது. நம் வாழ்வு படிப்படியாக முன்னேறி, அன்பும், பரிவும் நிறைந்த இறையாட்சியாக முழுநிறைவு பெறுகிறது.