http://koottanchoru.wordpress.com/
ஜூலை 8, 1910
லண்டனிலிருந்து வந்து மெர்செயில்ஸில் பழுதுபார்க்க நங்கூரம் பாய்ச்சியிருந்தது SS Morea என்ற கப்பல். அதில் உருவாகிவரும் ஒரு இந்திய விடுதலை போராட்ட தலைவரை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டிருந்தது.
முன்னதாக அவர் சட்டக் கல்விக்காக சர்தார்சிங் ரானா என்னும் வழக்கறிஞரால் நிறுவப்பட்டு வந்த உதவித் தொகைகளில் ஒன்றான ஷிவாஜி உதவித்தொகையைப் பெற்று லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுஸ் என்ற தங்குமிடத்தில் வாழ்ந்து வந்தார். அங்கிருந்தபடியே இந்திய சுதந்திரத்திற்க்கான புரட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
அந்தத் தலைவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டுகள் – துப்பாக்கிகளை இந்தியாவிற்கு அனுப்பி புரட்சிக்காரர்களுக்கு ஆயுத உதவி செய்தார் என்பதும், கர்ஸன் வைலியை கொலை செய்த மதன்லால் திங்க்ரா என்ற புரட்சி வீரருக்கு கைத்துப்பாக்கி வழங்கியதும், மற்றும் இந்தியா ஹவுஸ் என்ற லண்டன் தங்கும் விடுதியில் புரட்சிக்காரர்களை உருவாக்கினார் என்பதும் ஆகும்.
கப்பலில் தலைவர் காலை ஆறு மணிக்கு துயில் எழுந்தார். தான் கழிப்பறையை உபயோகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பார்க்கர் என்னும் காவலாளி முதலில் மறுத்து பின்னர் சிறிது நேரம் சென்ற பின்னர் அனுமதித்தார். அதுவரை அமைதியாக இருந்தத் தலைவர் மனதில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது.
காவல் அதிகாரி பார்க்கரின் அனுமதி பெற்ற பின் கழிவறைக்குள் நுழைந்த தலைவர் தன் மேலுடையை கதவின் மேல் படர விட்ட பின்னர் கதவை மூடினார். பின்னர் சுறு சுறுப்பாக தன் திட்டத்தை செயல்படுத்தினார். அங்கே இருந்த சிறிய துவாரத்தின் வழியாக தன்னைக் குறுக்கிக் கொண்டு கடலுக்குள் கடலுக்குள் குதித்தார். தப்புவதற்காக கரையை நோக்கி நீச்சலடித்தார். கரையை அடைந்ததும் ஓடத்தொடங்கினார்.
ஆனால் இவர் ஒரு அரசியல் கைதி என்ற தெரியாத சக பயணிகள் திருடன் என நினைத்து அபயக் குரல் கொடுத்தனர். அதை கேட்ட அருகிலிருந்த காவலர் ஒருவர் தலைவரை பிடித்துக் கொண்டார். அதற்கு பின்னர் தலைவர் தப்பிக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. பின்னர் அந்தமான் சிறையில் கொடுமைகளை அனுபவித்தார்.
1924ஆம் ஆண்டு விடுதலைக்காக பின்னர் அவர் சமூக நலனுக்காகவும் ஹிந்து மத சேவைகளுக்காகாவும் பாடு பட்டார். இவர் எழுதிய பிரபல புத்தகங்களுள் ஜோசஃப் மசினி, இந்திய விடுதலைப் போராட்டம் 1857 என்பவை குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தி கொலையில் இவருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு பின்னர் நிரபராதி என்று உறுதி செய்யப்பட்டது. 1966ல் இவர் காலமானார்.
அந்தத் தலைவர் வீர் சாவர்க்கார்.