99-O-உத்தம் சிங் (UDHAM SINGH)

http://koottanchoru.wordpress.com/

மார்ச் 13, 1940

கேக்ஸ்டன் ஹால், லண்டன்.

கிழக்கு இந்திய அசோசியேஷனும், ராயல் சென்ட்ரல் ஏசியன் சொஸைட்டியும் இணைந்து நடத்தவிருந்த கூட்டத்தில் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த புத்தகத்தில் பக்கங்கள் நடுப்புறங்கள் அப்புறப்படுத்தப் பட்டு, அதனுள்ளே ஒரு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்திய மக்கள் மீதும், இந்திய விடுதலையிலும் நேசம் கொண்டிருந்த அவன் தன் துப்பாக்கியின் நெடுநாளைய இலக்கான முன்னாள் பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ ட்வையரின் வருகைக்காக காத்திருந்தான். இந்த கொலை நோக்கத்தின் காரணம் என்ன?

ஏப்ரல் 13, 1919.

1940 முன் அதாவது சுமார் 21 வருடங்களுக்கு முன் ரவ்லட் மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய போரட்டம் நடந்து கொண்டிருந்தது. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் என்னும் தோட்டத்தில் பல தலைவர்கள் ரவ்லட் ம்சோதாவை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20ஆயிரம் மக்கள் அந்த கூட்டத்தில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதன் குறுகிய நுழைவாயில் வழியாக பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் 90 காவலாளிகள் கொண்ட தன் காவல் படையுடனும், தானியங்கி துப்பாக்கிகளுடனும் நுழைந்தார். எந்த முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார். துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகமால் தப்பிக்க பலர் தோட்டத்தின் நடுவிலிருந்த கிணற்றில் குதித்தனர். பலர் தோட்டத்தின் உயர்ந்த சுவர்க்ளை ஏறி கடக்க முற்பட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு இரையானார்கள். அதில் ஆறே வாரங்களே ஆகியிருந்த குழந்தையும் அடங்கும். சிலரின் கணக்குப்படி ஆயிரட்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்று வர்ணிக்கப்பட்டது.

உலகமே கண்டித்த அந்தச் சம்பவத்தை அப்போதைய பஞ்சாப் ஆளுனரான மைக்கேல் ஓ ட்வையர் பிர்கேடியர் டயர் செய்தது சரியே என்று பதிவு செய்தார். அனைவரும் வெகுண்டெழுந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் மௌனமாக துயரத்தை அனுபவித்து வந்தார்கள். பைசாகி தினமான அன்று சோக தினமாக மாறியது.

அப்படி வெகுண்டவர்களில் ஒருவன் தான் இன்று அதாவது 1940ல் கேக்ஸ்டன் ஹாலில் காத்திருந்த அந்த புரட்சி வீரன். சிறிது நேரத்தில் மைக்கேல் ட்வையர் உள்ளே நுழைந்தார். புத்தகத்துடன் மெதுவாக புரட்சிக்காரன் அவரை நெருங்கினான். யாரும் சந்தேகம் கொள்ளாதவாறு புத்தகத்தை திறந்தான். அதில் மறைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை அவர் வயிற்றில் சுட்டான். உடனே ட்வையர் கொல்லப்பட்டார்.

அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சொன்னது: “21 வருடங்களாக மனதில் இருந்த பழியுணர்ச்சிக்கு நிறைவு இன்று தான் கிடைத்தது. இந்தச் செயலை செய்ததற்க்காக நான் மிகவும் பெருமைபடுகிறேன். என் தாய்நாட்டிற்காக உயிரை விடுவதைக் காட்டிலும் பெருமை கிடையாது”

ஜூலை 31 1940ல் அவன் தூக்கிலிடப்பட்டான்.

அந்த புரட்சி வீரன் உத்தம் சிங்.