99-H-மேடம் காமா

http://koottanchoru.wordpress.com/

http://v-sundaram.blogspot.in/2011/08/firebrand-woman-revolutionary-v.html

http://v-sundaram.blogspot.in/2011/08/firebrand-woman-revolutionary-v.html

ஆகஸ்ட் 22 1907

ஸ்டட்கர்ட், ஜெர்மனி

சர்வதேச சோஸியலிஸ மாநாடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே ஒரு அம்மையார் இடி முழக்கம் போன்று தன் உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த அம்மையார் அந்த கூட்டத்தில் தனக்கு பேச கிடைத்தது ஒரு பொன்னான வாய்ப்பு என்று கருதினார். காரணம் அவரது தேசப் பற்று. ஆம். பிரிட்டிஷ் அரசால் இந்தியா அடிமைப்படுத்தப்பட்டு அதன் பிரஜைகள் அல்லலுறுவதை உலக அரங்குகுக்கு எடுத்துச் சொல்ல அது ஒரு அரிய சந்தர்ப்பமே. பல் வேறு தேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் தேசங்களின் தலைவிதிகளை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர்கள். அம்மையார் எண்ணற்ற இந்தியர்களின் அவலங்களையும் ஏழ்மை நிலையையும் அனைவருக்கு எடுத்துக் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டிஷ் அரசு 35 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார். இந்திய பிரஜைகளிடமிருந்து இப்படி கொள்ளையடிப்பதனால் நாளுக்கு நாள் இந்தியாவின் பொருளாதார நிலை சீர் குலைவதை பற்றி எடுட்துரைத்தார். “மனிதகுலத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் வாழ்கின்றனர். சுதந்திரத்தை விரும்பும் எவரும் இந்தப் பிரஜைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை அடைய ஒத்துழைக்கவேண்டும்” என்று கூறி தன் உரையை முடித்தார். அதன் பின் ஒரு காரியத்தை மேற்கொண்டார். சட்டென்று ஒரு இந்திய கொடியை ஏற்றினார். ”இது தான் சுதந்திர இந்தியாவின் கொடி. சுதந்திர இந்தியா பிறந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்க்காக உயிர் துறந்த எண்ணற்ற விடுதலை வீரர்களினால் அது புனிதப்ப்டுத்தப்பட்டுள்ளது. அதன் பெயரில் சுதந்திரத்தை பிறப்புரிமையாக கருதுபவர்கள் அனைவரிடமுமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்” என்று முழங்கினார்.

மாயத்தால் கட்டுண்டவர்கள் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று அந்தக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். அந்தக் கொடி 1905ல் வீர் சாவர்க்கார், மற்றும் சில தேசப் பற்று மிகுந்தவர்களுடன் சேர்ந்து அந்த அமமையார் வடிவமைத்தார். முன்னதாக பெர்லினிலும், வங்காளத்திலும் பறந்த அந்தக் கொடி பச்சை, காவி, சிகப்பு பட்டைகள் கொண்டது. பச்சை பட்டையில் அன்றைய இந்தியாவில் இருந்த 8 பிராந்தியங்களை குறிக்கும் வண்ணம் 8 மலரும் தாமரைகள் இருந்தது. நடுவில் இருந்த காவிப் பட்டையில் தேவநாகிரி எழுத்துகளில் ”வந்தே மாதரம்” பொறிக்கப்பட்டிருந்தது. கீழே இருந்த சிகப்பு பட்டையில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை குறிக்கும் அரை பிறைச் சந்திரனும், உதய சூரியனும் இருந்தது.

இந்த துணிச்சல் மிகுந்த தேச பற்று மிக்க அம்மையார் மேடம் காமா என்று அழைக்கப்பட்டு வந்த பிக்காய்ஜி ரஸ்டம் காமா.