http://koottanchoru.wordpress.com/
அக்டோபர் 30 1928.
சைமன் கமிஷன் உறுப்பினர்கள் இந்தியாவிற்கு வந்து இறங்கும் நாள். ஒரு பக்கம் அதை எதிர்க்கும் சுதந்திர வீரர்கள். மற்றொரு பக்கம் அதை ஆதரிக்கும் தேச துரோகிககள்.
இப்படி இந்திய தலைவர்களையும், மக்களையும் பிரித்து இழுத்த சைமன் கமிஷன் என்பது என்ன? 1927ஆம் ஆண்டு ஆங்கில அரசு இந்தியாவில் அரசியலில் சீர்த்திருத்தங்கள் ஏற்படுத்த மற்றும் இந்திய அரசாங்க சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர ஒரு அறிக்கையை தயாரிக்கச் சொல்லி ஒரு கமிஷனை நியமித்தது. ஜான் சைமனை தலைவராகக் கொண்டு ஆறு உறுப்பினர்கள் இருந்தனர் அந்தக் குழுவில். அனைவரும் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்களான வெள்ளையர்கள். இந்திய தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமுடியாத அவமானமாக கருதினார்கள். இந்தியர் அல்லாத ஒரு கமிஷன் எப்படி இந்தியாவின் நலனுக்குச் சாதகமாக பாராபட்சமின்றி எப்படி ஒரு அறிக்கையை வெளியிட முடியும் எனபது இந்திய தலைவர்களின் நியாமான கேள்வி.
ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் வெகுண்ட இந்திய மக்கள் சைமன் கமிஷனை புறக்கணிப்பது என்று முடிவு செய்து ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத் தலைவரின் கீழ் ஒன்று திரண்டனர். அந்தத் தலைவர் போராட்டத்தின் முதல் கட்டமாக மத்திய சட்ட சபையில் தற்போதைய சைமன் கமிஷன் குழு ஏற்புடையதல்ல என்றும் இந்தியர்களுக்கும் இந்த கமிஷனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறும் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். ஆங்கிலேய உறுப்பினர்கள் நிறைந்த அந்த சட்ட சபையில் அவர் அறிமுகப்படுத்திய தீர்மானம் தோற்கும் என்று தெரிந்தது. இந்திய உறுப்பினர்களை நாடினார்.
அடுத்தக் கட்ட முயற்சியாக அந்தத் தலைவர் மோதிலால நேரு தலைமையில் அமைந்த குழு தயார் செய்த ஒரு விளக்கம் கூறும் அறிக்கையை நாடு முழுவதும் கொண்டு சென்றார்.
ஆனால் இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் ஆங்கிலேய அரசு சைமன் கமிஷனை முன்னகர்த்தியது. அன்று சைமன் கமிஷன் இந்தியா வந்திறங்கியது. தலைவர்களும் தொண்டர்களும் சைமன் கமிஷனுக்கு கறுப்பு கொடி காட்டினர். நாடு முழுவதும் ஹர்த்தால் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் ”சைமன் திரும்பிப் போகவேண்டும்” என்று கோஷமிட்டனர். சைமன் கமிஷன் புகைவண்டி நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாத அளவு கூட்டமிருந்ததால் போலிஸ் தடியடிப் பிரயோகம் செய்தது. பலரின் ரத்தம் சிந்தியது. போலிஸ் கலங்காமல் தலைவரை நெருங்கி அவரை மேலும் மேலும் அடித்தது. முடிவில் தலைவர் அப்பாவி மக்கள் தடியடிபடுவதை பொறுக்கமுடியாமல் கூட்டத்தை கலைத்தார்.
”என் மீது விழுந்த அடிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியில் அறைந்த கடைசி ஆணி” என்று அன்று மாலை நடந்த கூட்டத்தில் முழங்கினார். ஆனால் அதன் பின் உடல் நல்ம் குன்றி நவம்பர் 17ஆம் நாள் காலமானார்.
பஞ்சாப் சிங்கம் என்ற வழங்கப்பட்ட அந்தத் தலைவர் லாலா லஜபட் ராய்.