91-THIRU.VI.KALYANASUNDARAM

த்மிழ்த்தென்றல் திரு வி. கல்யாண சுந்தர முதலியார் ...

"பொருளாதார உரிமையற்ற வெறும் அரசியல் உரிமை என்பது பணகாரர் ஆட்சியாய் , சாதி மதப்பூசல்களை பெருக்கி விரிப்பதாகும். நமது நாட்டிற்கு அவசியம் விடுதலையும் வேண்டும் அதனூடே பொருளாதார விடுதலையும் விரவி நிற்றல் வேண்டும். பொருளாதார விடுதலை என்பது அந்நிய முதலாளிகளிடமிருந்து மட்டுமல்ல. உள்நாட்டு முதலாளிகளின் பிடியிலிருந்தும் விடுதலை பெற்று சமதர்ம ஆட்சி மலர வேண்டும்".....

"சமயத்தில் தோய்ந்து , தேசீயத்தில் ஊறித்தொண்டில் திளைத்து நின்ற த்மிழ்த்தென்றல் திருவிக , மார்க்சீயம் நமது நாட்டுக்கு அன்னியமில்லை , நமது மரபுக்கு ஒவ்வாதது அல்ல . அது நாட்டிற்கு உகந்தது.! உடன்பாடானது!உதவிகரமானது! உசிதமானது உரிமையானது! என்று ஐயம் சிறிதும் இன்றி ஆணித்தரமாக எடுத்துக்கூறுகிறார்,"

=====================================================

.( திரு.வி.க.)....."""பெண்மைக்குள்ள பெருமை யாது?

பெண்மையின் மாட்டு உலக வளர்ச்சிக்குரியதும் தொண்டுக்குரியதுமாய் "தாய்மை' பொலிதலான். அது பெருமையுடையதாகிறது.

பெண்மைக்குள்ள பெருமையெல்லாம் தாய்மையாலென்க.

தாய்மையில் நிலவுவது இறைமை.

அவ்விறைமை பெண்மையின் முடிந்த நிலையாகும்.....

.......இறை எது?

சமய நூல்கள் பலவாறு கூறும். அக்கூற்றுக்களை ஈண்டு ஆராய வேண்டுவதில்லை.

பொய், பொறாமை, அவா, சீற்றம், தன்னலம் முதலியவற்றைக் கடந்த ஒன்று இறை என்பது.

ஒருவர் உள்ளத்தில் அன்பு நிகழும்போது இப்பொய், பொறாமை முதலியன நிலவுமோ?

பொய், பொறாமை, அவாவால் எரியும் ஒருவன் உள்ளத்தில் அன்பு ஒதுங்கி நிற்றல் ஒவ்வொருவர் அநுபவத்தால் உணரக்கூடியது.

அன்பு என்பது பொய், பொறாமை முதலியவற்றைக் கடந்து நிற்பது என்று தெரிகிறது. பொய், பொறாமை முதலியவற்றைக் கடந்து நிற்கும் ஒன்றே இறை என்றுஞ் சொல்லப்படுகிறது.

ஆகவே இறையே அன்பு; அன்பே இறையாதல் காண்க..............

பெண், பிள்ளை பெற்றதுந் தாயாகிறாள்.

அத்தாய் பிள்ளையை வளர்க்கப் புகுங்கால் அவள் உள்ளத்தில் இறைமைக்குரிய நீர்மைகளெல்லாம் பதிகின்றன.

தொண்டு, தியாகம், தன்னல மறுப்பு அவர் மாட்டு அரும்புகின்றன. கைம்மாறு கருதிக் குழந்தைக்குத் தாய் தொண்டு செய்வதில்லை. தனக்குள்ள எல்லாவற்றையும் சமயம் நேரின் உயிரையும் பிள்ளை நலத்துக்குக் கொடுக்கத் தாய் விரைந்து நிற்கிறாள்.

தன்னலங்கருதிக் குழந்தையை வளர்க்குந் தாய் யாண்டுமிராள்.

பயன் கருதாத் தொண்டு, தியாகம், தன்நல மறுப்பு முதலியன சேர்ந்த ஒன்றே "தாய்மை' என்க.

இந்நீர்மைகள் உள்ளவிடத்தில் பொறாமை, அவா முதலியன இரும்புண்ட நீர் போல ஒடுங்கிப் போகின்றன.

இந்நிலை பெற்ற தாயுள்ளத்தில் என்ன நிலவும்?

அன்பாய் இறையன்றோ நிலவும்?

தாயுள்ளத்தில் அன்பே ஊர்ந்து கொண்டிருத்தலால் அன்புக்கு எடுத்துக் காட்டாகத் தாயன்பையே கொள்வது ஆன்றோர் வழக்கம்.

தாய் எனினும் அன்பெனினும் ஒக்கும்'' என்றும்,

""பெண்ணுக்கு மதிப்பு கொடுங்கள்; உரிமை கொடுங்கள்; வணக்கஞ் செலுத்துங்கள். பெண்ணை மதித்துப் போற்றலே நாகரிகம். அவளைக் கட்டுப்படுத்தல், அடிமைப்படுத்தல், கொடுமையாக நடத்தல் அநாகரிகம். பெண் மகளாகத் தோன்றினாள்;

மனைவியாக வாழ்கிறாள்;

தாயாகத் தொண்டு செய்தாள்.

இப்போது தெய்வமாகக் காட்சியளிக்கிறாள்.

உலகீர்! தெய்வம் தெய்வம் என்று எங்கு ஓடுகிறீர்?

இதோ தெய்வம் - பெண் தெய்வம்,

காணுங்கள்; கண்டு வழிபடுங்கள்! என்கிறார் "

தமிழ்த் தென்றல்' திரு.வி.க. (நூல்: பெண்ணின் பெருமை).